Ad

புதன், 17 பிப்ரவரி, 2021

`கடவுள் சாதி பார்ப்பதில்லை' - கோயில் திருவிழா வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள்

திருச்சி அருகே கோயில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்த வழக்கில், “கோயில் என்பது பாகுபாட்டை உருவாக்கும் இடமில்லை” என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருச்சியைச் சேர்ந்த பத்மநாபன் என்பவர் தொடர்ந்த வழக்கில், " திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலுக்கு உட்பட்ட இரணி அம்மன் கோயில் விழா, ஆண்டுதோறும் சீரும் சிறப்புமாக நடைபெறும். அனைத்து சமூகத்தினரும் இணைந்து இவ்விழாவை சிறப்பாக நடத்தி வந்தனர். ஆனால் தற்போது அந்நிலை நீடிக்கவில்லை. விழா நடத்துவது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே பிரச்னை நிலவி வருகிறது.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்

இதனால் விழா கொண்டாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனை ஆரோக்கியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, வருவாய்துறையினர் சமரசம் செய்து, அனைத்து தரப்பினரும் இணைந்து, விழா நடத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என தனது மனுவில் கூறியிருந்தார்.

இவ்வழக்கு, நீதிபதிகள் சுந்தரேஷ், மற்றும் ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் நீதிபதிகளின் கருத்தானது.

``கோயில் என்பது நம்பிக்கையின் அடையாளம். உயரிய எண்ணங்களை பெறத்தான் மக்கள் கோயிலுக்குச் செல்கின்றனர். கோயிலுக்கு வருவோரிடம் கடவுள் வேற்றுமை, பார்ப்பதில்லை. சாதிகளை ஏற்பதும் இல்லை, மறுப்பதும் இல்லை. கோவில் என்பது மன அமைதிக்கான் இடம். மனிதர்கள் இடையே பாகுபாடு உருவாக்குவதற்கான இடமல்ல. எனவே இந்த விஷயத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து

திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயில் இணை ஆணையர் இதுகுறித்து உரிய முடிவு எடுக்கலாம்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/god-sees-no-discriminations-says-madurai-hc-in-thiruvanaikaval-temple-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக