2021-22 இந்தியன் சூப்பர் லீக் சீசனின் நேற்றைய போட்டியில் சென்னையின் FC அணியும் ஹைதராபாத் FC அணியும் மோதியிருந்தன. இந்த போட்டியை சென்னை அணி 1-0 என வென்றிருக்கிறது.
ஆட்டம் முழுவதும் ஹைதராபாத் அணியே ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், அவர்கள் செய்த ஒரே ஒரு தவறு சென்னைக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தது. அந்த அணி கடந்த சீசனில் 5 வது இடத்தை பிடித்து நூலிழையில் ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை தவறவிட்டிருந்தது. அதேநேரத்தில், முன்னாள் சாம்பியனான சென்னை அணி கடந்த சீசனில் ரொம்பவே சுமாராக ஆடி 8 வது இடத்தையே பிடித்திருந்தது. இந்த சீசனில் இரண்டு அணிகளுக்கும் இதுதான் முதல் போட்டி என்பதால் வெற்றியோடு தொடங்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தன.
டி20 கிரிக்கெட்டில் மொத்தமுள்ள 40 ஓவர்களில் 35 ஓவர்கள் ஒரு அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியிருக்கும். ஆனால் இன்னொரு அணியோ மீதமிருக்கும் 5 ஓவர்களை மிகச்சிறப்பாக ஆடி போட்டியை வென்றுவிடும். டி20 போட்டிகளில் இந்த மாதிரியான நிகழ்வுகளை அதிகம் பார்த்திருப்போம். சென்னை vs ஹைதராபாத் போட்டியும் நேற்று அதுபோன்றே அமைந்திருந்தது.
ஆட்டம் தொடங்கியதிலிருந்து கடைசி விசில் அடிக்கப்படும் வரைக்கும் ஹைதராபாத் அணியே ஆதிக்கம் செலுத்தியிருந்தது. ஆனால், வென்றது சென்னையின் FC!!
இரண்டு அணிகளுமே 4-2-3-1 என்கிற ஃபார்மேஷனோடே களமிறங்கியிருந்தன. ஆட்டத்தை சென்னை அணி கொஞ்சம் நன்றாகவே தொடங்கியிருந்தது. முதல் 5 நிமிடங்களில் மட்டும் சென்னைக்கு இரண்டு கோல் வாய்ப்புகள் கிடைத்திருந்தன. ஒரு ஃப்ரீ கிக் மற்றும் ஒரு கார்னர் வாய்ப்பு அமைந்திருந்தது. இரண்டையுமே மிட் ஃபீல்டரான கோமனே எடுத்திருந்தார். சரியாக ஃபினிஷ் ஆகாததால் இரண்டுமே கோலாக மாறவில்லை. தொடக்கத்திலேயே சிறப்பாக அட்டாக் செய்து கோல் வாய்ப்புகளை உருவாக்கியதால், சென்னை அதே உத்வேகத்தோடு ஆடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்தது வேறு.
அந்த முதல் 5 நிமிடங்களுக்கு பிறகு, ஆட்டம் முழுக்க முழுக்க ஹைதராபாத்தின் ஆளுகைக்குள் வந்தது. ஓக்பச்சே, எடு கார்சியா இருவரும் மூர்க்கத்தனமாக அட்டாக் செய்து பாக்ஸுக்குள் எக்கச்சக்க வாய்ப்புகளை உருவாக்கினர்.
ஐ.எஸ்.எல் ரொடரில் ஓக்பச்சே அடித்திருக்கும் 35 கோல்களில், 9 கோல்கள் (26%) சென்னைக்கு எதிராக மட்டுமே அடிக்கப்பட்டவை. இந்த போட்டியில் அப்படியும் அந்த கோல் கணக்கை டபுள் டிஜிட்டாக மாற்றிவிடுவார் போன்றே தோன்றியது.
எதிரணியே இல்லாத கிரவுண்ட்டில் ஹைதராபாத் வீரர்கள் மட்டும் வார்ம் அப் செய்வதை போன்றே இருந்தது. அந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்தினர். ஹைதராபாத்திடமிருந்து Ball Possession-ஐ பெறுவதற்கே சென்னை தடுமாறிக் கொண்டிருந்தது. ஆனால், சென்னைக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தது. ஹைதராபாத் வீரர்கள் எவ்வளவு சாதுரியமாக அட்டாக் செய்தாலும் அவர்களால் சரியாக ஃபினிஷ் செய்து அவற்றை கோலாக மாற்ற முடியவில்லை. பாக்ஸுக்குள் சில பல மிஸ் பாஸ்களை செய்தனர். அக்யூரசி இல்லாமல் பந்தை விண்ணில் பறக்கவிட்டிருந்தனர். கோல் கீப்பர் விஷால் கெய்த்தின் தவறுகளைத் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள தவறியிருந்தனர். விரல்களில் அடங்கா அளவுக்கு வாய்ப்புகளை உருவாக்கியிருந்தாலும் அவற்றில் ஒன்றை கூட சரியான கோலாக மாற்றியிருக்கவில்லை. ஓக்பச்சே பல முறை மிக எளிதான வாய்ப்புகளை கோட்டை விட்டிருந்தார்.
போதாததற்கு இரண்டு ஆஃப் சைடு கோல்களை வேறு அடித்து விட்டிருந்தனர். 22-வது நிமிடத்தில் ஆஷிஸ் ராயின் த்ரோ இன்னை, சனா சிங் வாங்கி எடு கார்சியாவுக்கு பாஸாக்கினார். அவரிடமிருந்து ஓக்பச்சேவுக்கு. அவரோ சென்னையின் தடுப்பு அரண்களை உடைத்து யாசீருக்கு பாஸாக்க, யாசீர் அதை அழகாக கோலாக்கியிருப்பார். ஆனால், அது ஆஃப் சைடாக மாறிப்போனது.
முதல் பாதி கோலே இல்லாமல் 0-0 என முடிந்துவிட, இரண்டாம் பாதியிலும் ஹைதராபாத் தங்களது அட்டாக்கை இன்னும் வேகமாக தொடங்கியது. இப்போது தொடக்கத்திலேயே ஒரு கோல் வாய்ப்பு உருவானது. 48 வது நிமிடத்தில் ஒரு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க, அதை எடு கார்சியா எடுத்து விஷால் கெய்த்தை வீழ்த்தி செகண்ட் போஸ்ட்டில் கோலாக்கியிருப்பார். ஆனால், அதுவும் ஆஃப் சைடாகி ஹைதராபாத்தை மேலும் சோதித்தது. இந்த முறை சனா சிங் ஆர்வக்கோளாறாக குறுக்கே பாய்ந்திருந்தார்.
இதன்பிறகுதான், சென்னை அணி கொஞ்சமாக வேகத்தை கூட்டியது. ரைட் விங்கிலிருந்து சாங்தே டிரிபிள் செய்து உள்ளே வந்து அட்டகாசமாக ஒரு வாய்ப்பை உருவாக்கி கோல் போட முயன்றார். அது கோலாகவில்லை என்றாலும் அதன்பிறகுதான் சென்னைக்கு ஒரு உத்வேகம் கிடைத்தது. இந்த சமயத்தில்தான் அதிர்ஷ்டவசமாக சென்னைக்கு இன்னொரு வாய்ப்பு அமைந்தது. இடதுபக்கத்தில் முர்ஷேவும் தாபாவும் பாஸ் செய்து பாக்ஸுக்குள் அட்டாக் செய்ய முயற்சிக்க, இடையில் ஹித்தேஷ் உள்ளே காலை விட 66 வது நிமிடத்தில் சென்னைக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த பெனால்டி வாய்ப்பை கோமன் எடுத்தார். தூக்கியடித்து பெரிதாக எதுவும் முயற்சிக்காமல் கூலாக கார்னரை டார்கெட் செய்து கோலாக்கினார். சென்னை 1-0 என முன்னிலை பெற்றது.
இந்த சீசனில் சென்னை அணிக்காக கடைசியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் கோமன் தான். ஹங்கேரி நாட்டை சேர்ந்தவர். ஐ.எஸ்.எல் தொடரில் இதுதான் அவருக்கு முதல் போட்டி. இந்த போட்டியில் சென்னை அணிக்கு முதல் கோல் வாய்ப்பை உருவாக்கியவரும் அவர்தான். முதல் கோலை அடித்துக் கொடுத்தவரும் அவர்தான்.
அவ்வளவுதான். ஹைதராபாத் அணி இதற்கு பிறகும் வலுவாகவே முயன்றது. எடு கார்சியா, ஓக்பச்சே இருவரும் எவ்வளவோ முட்டி மோதி பார்த்தார்கள். ஆனால், ஹைதராபாத்தால் ஒரு கோலை கூட அடிக்க முடியவில்லை. சென்னை 1-0 என முதல் போட்டியை வென்றது.
சென்னைக்கு 3 புள்ளிகள் கிடைத்திருந்தாலும் இது பெருமைப்படும் வகையிலான வெற்றி கிடையாது. முழுக்க முழுக்க ஆட்டம் ஹைதரபாத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. தங்களுக்கு கிடைத்த அந்த ஒரு வாய்ப்பை சென்னை சரியாக பயன்படுத்திக் கொண்டது. அவ்வளவே! இதையேத்தான் சென்னை அணியின் பயிற்சியாளரான பேண்டோவிச்சும் போட்டிக்கு பிறகு கூறியிருந்தார். அடுத்த போட்டியில் இருந்தாவது சென்னை அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கவேண்டும்.
source https://sports.vikatan.com/football/chennaiyin-fc-won-the-firat-match-against-dominant-hyderabad-fc-in-isl-2021-22
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக