தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் அடுத்து ஆட்சியமைக்கப்போவது யார் என்பதை அங்குள்ள கள நிலவரங்களின் மூலமாக முன்பே ஓரளவுக்கு கணிக்க முடிந்தது. ஆனால், மேற்கு வங்கத்தில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பதை கணிப்பது சிரமமானதாகவே இருந்துவந்தது. 2016-ல் நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் 291 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க., வெறும் மூன்று தொகுதிகளில்தான் வெற்றிபெற்றது.
அதன் பிறகு, மேற்கு வங்கத்தில் பா.ஜ.க தன் செல்வாக்கை அதிகரிப்பதற்கான வேலைகளில் முனைப்புக் காட்டத் தொடங்கியது. அந்த நேரத்தில்தான், இடதுசாரிகளையும் காங்கிரஸ் கட்சியையும் தனது அதிகார பலத்தின் மூலம் ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் திரிணாமுல் காங்கிரஸ் தீவிரம்காட்டியது. அதில் வெற்றியும் பெற்றது. முக்கிய எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சியினரின் அடக்குமுறை நடவடிக்கைகள் மூலம் காலிசெய்யப்பட்ட நிலையில், காலியாக அந்த இடத்துக்கு பா.ஜ.க எளிதாக வந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க வலுவாகக் காலூன்றிவிட்டது. மத்தியில் ஆட்சியதிகாரத்தில் இருப்பதால், அதைப் பயன்படுத்தியும் தன் செல்வாக்கை பா.ஜ.க அங்கு அதிகரித்துக்கொண்டது. அது, 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெளிப்பட்டது. அங்குள்ள 42 மக்களவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெற்றது.
அடுத்ததாக, 2021 சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து பா.ஜ.க செயல்பட ஆரம்பித்தது. 2021-ல் மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிப்பதை தனது மிக முக்கியமான அஜெண்டாவாக வைத்தது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் அடிக்கடி மேற்கு வங்கத்துக்குப் படையெடுத்தனர். அங்கு பா.ஜ.க அலை வீசுவதாக அந்தக் கட்சியினர் கூறிவந்தனர். சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க வெற்றிபெறும் என்று மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் கூறிவந்தார்கள். மே 2-க்குப் பிறகு முதல்வர் மம்தா பானர்ஜி முன்னாள் முதல்வராக ஆகிவிடுவார் என்றெல்லாம் அவர்கள் பேசிவந்தார்கள்.
பா.ஜ.க-வுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவிவந்த நிலையில், அங்கு எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஒரு மாத காலம் நடைபெற்ற தேர்தல், ஏப்ரல் 29-ம் தேதி நிறைவடைந்தது. தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வந்துள்ளன. வெளியாகியுள்ள ஒன்பது கருத்துக்கணிப்புகளில், திரிணமுல் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று ஆறு கணிப்புகள் கூறியுள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ் 164-176 (42 சதவிகித வாக்குகள்) இடங்களையும், பா.ஜ.க 105-115 (39.1 சதவிகித வாக்குகள்) இடங்களையும், இடதுசாரி 10-15 இடங்களையும் பிடிக்கும் என்று ஈ.டி.ஜி ரிசர்ச் தெரிவித்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் 152 – 164 இடங்களையும், பா.ஜ.க 109 – 121 இடங்களையும், இடதுசாரி 14 - 25 இடங்களையும் பிடிக்கும் என்று ஏ.பீ.பி கவர் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் 158 இடங்களையும், பா.ஜ.க 115 இடங்களையும், இடதுசாரி 19 இடங்களையும் பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் சி ஓட்டர் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் 152 – 172 இடங்களையும், பா.ஜ.க 112 – 132 இடங்களையும், இடதுசாரி 10 – 15 இடங்களையும் பிடிக்கும் என்று பி மார்க் தெரிவித்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் 142 - 152 இடங்களையும், பா.ஜ.க 125 – 135 இடங்களையும், இடதுசாரி 16 – 26 இடங்களையும் பிடிக்கும் என்று போல் ஸ்ட்ரீட் கருத்துக்கணிப் கருத்துக்கணிப்பு வெளியயிட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் 180 இடங்களையும், பா.ஜ.க 108 இடங்களையும் பிடிக்கும் என்று டுடேஸ் சாணக்கியாவின் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க 134 – 160 இடங்களையும், திரிணாமுல் காங்கிரஸ் 130 – 156 இடங்களையும் பிடிக்கும் என்று இந்தியா டுடே ஆக்சிஸ் கருத்துக்கணிப்பும், பா.ஜ.க 162 – 185 இடங்களையும் திரிணாமுல் காங்கிரஸ் 104 - 121 இடங்களையும், இடதுசாரி 3 – 9 இடங்களையும் பிடிக்கும் என்று ஜான் கீ பாட் கருத்துக்கணிப்பும் தெரிவித்துள்ளன.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளிலும் பெரும்பாலானவை திரிணாமுல் காங்கிரஸ் அதிகமான இடங்களில் வெற்றிபெறும் என்றும், மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக முதல்வர் நாற்காலியில் அமருவார் என்றும் தெரிவித்துள்ளன. இந்தக் கருத்துக்கணிப்புகளால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். மம்தா பானர்ஜியின் பத்தாண்டுக்கால நல்லாட்சிக்கு மக்கள் பேரதரவு அளித்துள்ளார்கள் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை பா.ஜ.க நிராகரித்துள்ளது. அஸ்சாமில் ஆளும்கட்சியாக இருக்கும் பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்ற தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை ஏற்றுக்கொள்ளும் பா.ஜ.க தலைவர்கள், மேற்கு வங்கம் தொடர்பான கருத்துக்கணிப்புகளை மட்டும் ஏற்க மறுக்கிறார்கள். “மேற்கு வங்க அரசியலின் கள நிலவரம் தெரியாமல் இந்த கருத்துக்கணிப்புகளை எடுத்திருக்கிறார்கள். ஏராளமான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்த வரலாறு அந்த மாநிலத்துக்கு உண்டு. எனவே, அங்குள்ள மக்கள் வெளிப்படையாகத் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க மாட்டார்கள். எனவே, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை நிராகரிக்கிறோம். மேற்கு வங்கத்தில் அறுதிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சியமைக்கும்” என்று பா.ஜ.க-வின் பொதுச்செயலாளரும், மேற்கு வங்க பா.ஜ.க-வின் பொறுப்பாளருமான கைலாஷ் விஜயவர்க்கியா கூறியிருக்கிறார்.
Also Read: ``எந்த அரசையும் விமர்சிக்கும் உரிமை எனக்கு இருக்கு" - மிரட்டலுக்கு அசராத நடிகர் சித்தார்த்
“2011-ல் இடது முன்னணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வெளிவந்தன. ஆனால், மம்தா பானர்ஜி வெற்றிபெற்றார். அதேபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலில், 18 இடங்களில் பா.ஜ.க வெற்றிபெறப்போகிறது என்பதைக் கருத்துக்கணிப்பு நடத்திய நிறுவனங்கள் கணிக்கத் தவறிவிட்டன. இந்த சட்டமன்றத் தேர்தலிலும் அதுதான் நடக்கப்போகிறது” என்பது பா.ஜ.க-வினரின் கருத்தாக இருக்கிறது.
ஆனால், அறுதிப்பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என்று அந்தக் கட்சியினர் உறுதியுடன் கூறிவருகிறார்கள். காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக சக்கர நாற்காலியில் பிரசாரம் செய்துவந்த மம்தா பானர்ஜி, மே 2-க்குப் பிறகு முதல்வர் நாற்காலியில் அமருவார் என்று திரிணாமுல் காங்கிரஸார் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இன்னும் ஒரு நாளில் எல்லாம் தெரிந்துவிடப்போகிறது..!
source https://www.vikatan.com/government-and-politics/politics/will-exit-poll-reflect-in-west-bengal-poll-results
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக