தஞ்சாவூர் அருகே இளைஞர் ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் தாக்கும் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், ஆதிக்கசாதியினர் தன்னை நிர்வாணப்படுத்திக் கொடூரமாக தாக்கியதாக பாதிக்கப்பட்ட இளைஞர் கண்ணீர்மல்கத் தெரிவித்தார். போலீஸாரின் மெத்தனமே இந்த விவகாரத்துக்குக் காரணம் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இதில் தொடர்புடைய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள பூண்டி கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் குணசேகரன். விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் ராகுல் (22). தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராகுல் சட்டவிரோதமாக மணல் எடுத்து விற்பனை செய்யும் கும்பலிடம் வேலை செய்து வந்துள்ளார்.
கோனுரில் உள்ள வெண்ணாற்றில், மாரியம்மன் கோயில் பகுதியில் வசிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ்வரன், அவருடைய சகோதரர் ஆகியோர் சட்டவிரோதமாக மணல் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்குச் சொந்தமாக இரண்டு லாரிகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
விக்னேஷ்வரனிடம் ராகுல் வேலை செய்து வந்துள்ளார். மேலும் கோனுர் கிராமத்தை சேர்ந்த லெக்ஷ்மணன், ராஜதுரை, பார்த்திபன், சுபாஷ், சரத்குமார் உள்ளிட்டவர்களும் வேலை செய்து வந்துள்ளனர். இவர்களும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த 1-ம் தேதி லெக்ஷ்மணன் வீட்டிலிருந்த பணத்தை ராகுல் திருடிவிட்டதாகக் கூறி விக்னேஷ்வரன், விமல், லெக்ஷ்மணன், சரத்குமார், அய்யப்பன், ராஜதுரை, பார்த்திபன், சுபாஷ் உள்ளிட்ட 8 பேரும் ராகுலின் கண்களைக் கட்டி பெரிய மரத்தில் வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டு மூர்க்கதனமாக தாக்கியிருக்கிறார்கள்.
Also Read: `ப்ளீஸ் அடிக்காதீங்க...'; கும்பிட்ட இளைஞர்; கொலைவெறித் தாக்குதல் நடத்திய கும்பல் - தஞ்சை அதிர்ச்சி
அத்துடன் அடிப்பதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட, அந்த வீடியோ வைரலானது. அதன் பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இளைஞர் ஒருவர் கண்ணைக் கட்டி தாக்கப்படுவதைப் பார்த்த அனைவரும் மனம்வெதும்பி கொதிப்படைந்தனர்.
இந்நிலையில், தன்னைத் தாக்கும் வீடியோ பரவியதால் மனமுடைந்த ராகுல் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து ராகுலை மீட்ட அவரது உறவினர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக விக்னேஷ்வரன், விமல், லெக்ஷ்மணன் உள்ளிட்ட எட்டு பேர் மீது அம்மாப்பேட்டை போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் விக்னேஷ்வரன், சரத்குமார், பார்த்திபன், ராஜதுரை ஆகிய நான்கு பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் ராகுலிடம் பேசினோம். ``ஆதிக்க சாதியைச் சேர்ந்த விக்கி, அவரது சகோதரர் விமல் ஆகியோர் கள்ளத்தனமாக மணல் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். எனக்கு சரியான வேலை கிடைக்காததால், அவங்ககிட்ட வேலை செய்து வந்தேன்.
எனக்கு சம்பளபாக்கி வர வேண்டியிருந்தது. ஆற்றில் நின்று கொண்டிருந்த விக்னேஷ்வரன்கிட்ட போய் சம்பளம் கேட்டேன். `உனக்குதான் சரக்கு, சாப்பாடு வாங்கி தர்றோம்ல... அப்புறம் எதுக்கு சம்பளம்?’ எனக் கேட்டார். `அண்ணே செலவு இருக்குண்ணே... சம்பளம் கொடுங்கண்ணே’ என கேட்டேன்.
`எங்கிட்டேயே எதிர்த்து பேசுறியா? உன் சாதிப்பயலுக எல்லாரும் எனக்கு அடிமையா இருக்காங்க. நீயும் அடிமைதான்’ என சாதிப் பெயரைச் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டினார். உடனே நான் அங்கிருந்து கிளம்பிட்டேன். பின்னர், கடந்த 31-ம் தேதி கோனுரைச் சேர்ந்த லெக்ஷ்மணன் வீட்டிலிருந்த பணம் ரூ.50,000-த்தைத் திருடிவிட்டதாக திடீரென என்மீது குற்றம்சாட்டினர்.
என்னிடம் பணத்தைத் திருப்பி கேட்டனர். `நான் பணத்தை எடுக்கவில்லை’ எனக் கூறிய பிறகும் கோபமாகப் பேசினர். அத்துடன் 1-ம் தேதி காலை என்னை நேரில் வரச் சொன்னார்கள். நான் போனதும் விக்னேஷ்வரன் வீட்டில் வைத்து என்னை அடித்தனர். பணத்தை எடுத்ததா ஒத்துக்கச் சொல்லி மிரட்டினர்.
நான், `முடியாது’ எனச் சொல்லியும் கேட்கவில்லை. அதன் பிறகு ஜீப்பில் ஏற்றிக்கொண்டு விக்னேஷ்ரவரன் தோப்புக்கு அழைத்துச் சென்று என் கண்களைக் கட்டிவிட்டுக் கடுமையாகத் தாக்கினர். நான் வலி தாங்க முடியாமல் கையெடுத்துக் கும்பிட்டேன். `அண்ணே விட்ருங்கண்ணே’ என கெஞ்சினேன்; கதறினேன்.
கெஞ்ச கெஞ்ச அதிகமாக அடித்தனர். துடிக்கிற என் நிலையைக் கொஞ்சம்கூட உணராமல், மிருகமாக மாறி ஒரு கட்டத்தில் என்னை நிர்வாணப்படுத்தித் தாக்கினர். நான் சுருண்டு மயங்கி விழுந்த பிறகும் அடித்தனர். விக்னேஷ், விமல், லெக்ஷ்மணன், அய்யப்பன் உள்ளிட்ட எட்டு பேரும் என்னை அடித்தனர்.
கோனுரில் என் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் நான் பழகிக் கொண்டு இருந்தேன். அதனை அவர்கள் தவறாக புரிஞ்சிக்கிட்டு என்னை அடிச்சாங்க. பெண் விவகாரம் என்றால் பிரச்னையாகும் விஷயம் வெளியே தெரிந்து விடும் என்பதால், `பணத்தைத் திருடிவிட்டான்’ என ஊர் முழுக்கப் பரப்பினார்கள். அப்பதான் அடிக்கும்போது யாரும் கேட்கமாட்டர்கள் என்பதாலேயே என் மீது திருட்டுப் பழியை சுமத்தினார்கள்.
ஒரு வருடம் அவங்கிட்ட விசுவாசமாக வேலை செய்து வருகிறேன். அதைக்கூட நெனச்சு பார்க்கலை. உடம்புல காயம் இல்லாத இடமே இல்லை. இதையெல்லாம் கடவுள்தான் கேட்கணும். என்னை அடிக்கும் விவகாரம் தெரிஞ்சு என் வீட்டுல அம்மாப்பேட்டை போலீஸாருக்குத் தகவல் கொடுத்து என்னை மீட்டு வந்தனர்.
ஆதிக்க சாதியினர் மேல் உள்ள பயத்தால் நாங்க புகார் கொடுக்கவும் இல்லை. இதற்கிடையில் வீடியோ வெளியாகிவிட்டது. `நான் அடிக்காதீங்கண்ணு’ கையெடுத்து கும்பிட்டதை என் அம்மாவால பார்க்க முடியலை. `என் புள்ளைய இப்படி அடிக்குறானுங்களே... அவன் கும்பிட்டும் விடலையே’ என அம்மா துடிச்சு கலங்கியது இன்னும் என் கண்ணுல நிக்குது.
பணம் இருந்து, ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நெனப்பில்தான் அவர்கள் அப்படி நடந்து கொண்டனர். இதற்குத் துணையாக என் சாதியைச் சேர்ந்தவர்களும் நின்றதுதான், எனக்கு பெரிய வேதனையை தந்துச்சு. அடிச்சுட்டு அதை வீடியோவாகவும் எடுத்து நண்பர்களுக்குள் அனுப்பி ரசிச்சாங்க. அடுத்தடுத்து எல்லோருக்கும் வீடியோ பரவத் தொடங்கிச்சு. இந்த அவமானமே என்னை தற்கொலைக்குத் தூண்டி விட்டது. இப்ப எங்க அப்பா குணசேகரன், அம்மா வனஜா கூட நின்னு கஷ்டப்படுறது என்னால தாங்க முடியலை’’ என கலங்கினார்.
குணசேகரனிடம் பேசினோம். ``என் புள்ளைய எப்படி அடிச்சுருக்காங்க என்பது நாங்க சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவங்க எடுத்த வீடியோவுலேயே தெரியுது. நிர்வாணப்படுத்தி அடிக்கும் அளவுக்கு என் பையன் செஞ்ச தப்பு என்ன? காவல்துறை கைக்குள் இருப்பதால், எந்த பயமும் இல்லாமல் இப்படி வெறிச்செயலை செய்துள்ளனர். இதில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் நிச்சயம் தண்டனை கிடைக்க செய்ய வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சி.பி.ஐ கட்சியின் அம்மாப்பேட்டை ஒன்றியச் செயலாளரான செந்தில்குமார், ``மணல் எடுப்பதற்காக விக்னேஷ்வரன் அண்ட் கோ அம்மாப்பேட்டை போலீஸாருக்கு மாதம் தவறாமல் மாமூல் கொடுக்கின்றனர். அதற்கு விசுவாசமாக போலீஸார் செயல்பட்டுள்ளனர். சம்பவத்தன்று மகனை மீட்டுத் தர வேண்டும் என இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமியிடம் தெரிவித்துள்ளனர்.
போலீஸார்தான் அங்கு சென்று ராகுலை மீட்டு வந்துள்ளனர். எவ்வளவு கொடூரச் செயல் அரங்கேறியிருக்கிறது. அதைப்பற்றி கவலையேபடவில்லை. விக்னேஸ்வரன் மீது சில வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. போலீஸார் உடனே வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கத் தவறவிட்டனர். இதுபோன்ற வன்கொடுமை சம்பவங்கள் இப்பகுதியில் அதிகமாக நடக்கிறது. இதனை போலீஸார் கண்டுகொள்வதே இல்லை.
இந்த விவகாரத்தில்கூட வீடியோ வெளியானதால் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு போலீஸார் தள்ளப்பட்டுள்ளனர். போலீஸாரைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்த இருக்கிறோம்’’ என்றார்.
போலீஸ் தரப்பில், ``இந்த பிரச்னையில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 பேரைத் தேடி வருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.
source https://www.vikatan.com/news/crime/tanjore-youth-faced-blindfold-assault-attempted-suicide
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக