முன்களப் பணியாளர்களுக்கு இரண்டாம் தவணை கோவிட்-19 தடுப்பூசி கொடுக்கப்பட்டு வருகிறது. மார்ச் முதல் மாதத்திலிருந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் இரண்டாவது தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொள்பவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் உள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி தொடர்பான கேள்விகளுக்கான விடைகளை இங்கே காண்போம்.
இரண்டாம் தவணை தடுப்பூசியின் வேலை என்ன?
தடுப்பூசியின் முதல் தவணை (Priming) நமது உடலிலுள்ள எதிர்ப்பு சக்தி அணுக்கள் கொரோனா வைரஸைக் கண்டறியவும் அதற்கு எதிராகப் போராடவும் உதவுகிறது. 28 நாள்கள் கழித்து போடப்படும் இரண்டாவது தவணை (Booster) தடுப்பூசியைப் போடும்போது நம்முடைய எதிர்ப்பு சக்தி மண்டலத்தின் நினைவுத்திறன் மேம்படுத்தப்பட்டு, எப்போது இந்த வைரஸ் தொற்ற முயன்றாலும் எதிர்க்கக்கூடிய சக்தியை வெகுநாள் வரை தரும்.
இரண்டாவது தவணை ஊசி போட்டுக்கொள்வது அவசியம். தடுப்பூசியைப் போட்டு 14 நாள்களில் முழுமையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எந்தத் தடுப்பூசியாக இருந்தாலும், 70 - 95 சதவிகிதம் வரை பாதுகாப்பு அளிக்கும்.
தற்போது புழக்கத்திலுள்ள தடுப்பூசிகளில் அமெரிக்காவின் ஃபைஸர், மாடர்னா, பிரிட்டனின் ஆஸ்ட்ரா ஜெனிகா, ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ரஷ்ய நாடுகளில் இரண்டாவது தவணை வரை போடப்பட்டுள்ளன.
பக்கவிளைவுகள் என்ன?
இந்தியாவைப் பொறுத்தவரை ஜனவரி 16-ம் தேதியிலிருந்து கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகள் முதல் தவணையாகப் போடப்பட்டுள்ளன. கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்தவர்களில் 10% பேருக்கு காய்ச்சல், உடல்வலி போன்ற பக்கவிளைவுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கோவாக்ஸின் தடுப்பூசியைப் பொறுத்தவரை மிகவும் குறைவான பக்கவிளைவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிப்ரவரி 13-ம் தேதியிலிருந்து இரண்டாவது தவணை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
அமெரிக்க தடுப்பூசிக்கும் இந்தியாவில் கொடுக்கப்படும் தடுப்பூசிக்கும் என்ன வித்தியாசம்?
ஃபைஸர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் எம் ஆர் என் ஏ (mRna) தொழில்நுட்பத்தின்படி உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட முதல் தடுப்பூசி, கோவிட்-19 தடுப்பூசிதான். கோவிஷீல்டு கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாகப் புழக்கத்தில் உள்ள `நான் ரெப்ளிகேட்டிங் வைரல் வெக்டார்' என்ற தொழில்நுட்பத்தில் உருவானது. சிக்குன்குனியா, ஸிகா, ஃப்ளூ எனப் பல நோய்களுக்கு இந்த வகை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கோவாக்ஸின் தடுப்பூசி நீண்ட நெடுங்காலமாக உபயோகப்படுத்தப்படும் (இனாக்டிவேட்டடு வைரஸ்) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் வெற்றிகரமான தடுப்பூசிகள் (போலியோ மற்றும் தட்டமை) இந்த வகையைச் சேர்ந்தவை.
இரண்டாவது தவணை தடுப்பூசி போடும்போது என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும்?
முதல் தடுப்பூசி போட்டதும் வந்த பக்கவிளைவுகளே இரண்டாவது தடுப்பூசிக்கும் வரலாம். தடுப்பூசிகளைப் பொறுத்தவரை இதுவரை வேண்டத்தகாத விளைவுகள் (adverse effects) அதாவது, ஊசிபோட்ட இடத்தில் அரிப்பு, வலி, காய்ச்சல், குளிர், தலைவலி, உடல்வலி போன்றவை 10% சதவிகிதம் வரை பதிவு செய்யப்பட்டுள்ளன. அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை விளைவு இரண்டாவது ஊசி எடுத்த எவருக்கும் பதிவு செய்யப்படவில்லை. வெளிநாடுகளில் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் ஒரு சிலருக்கு குளிர் காய்ச்சல் வந்துள்ளது. மற்றபடி வித்தியாசமான பாதிப்புகள் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை.
பொதுவாக குழந்தைகள் இரண்டு வயதிற்குள் 17 முதல் 20 தடுப்பூசிகள் வரை போட்டுக்கொள்கிறார்கள். அவற்றில் நிறைய தடுப்பூசிகள் 2-3 தவணை போடக்கூடியவையாக இருக்கும். இதுவரை உள்ள தரவுகளின்படி முதல் தவணை தடுப்பூசிக்கு ஏற்பட்ட அதே பக்கவிளைவுகளே அடுத்தடுத்த தவணைக்கும் ஏற்பட்டிருக்கின்றன.
Also Read: `முதல் டோஸ் தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்?!' - மருத்துவ விளக்கம்
முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கட்டாயமாக இரண்டாவது தடுப்பூசியும் போட வேண்டுமா?
இங்கிலாந்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் ஊசி போட்டு 70 நாள்கள் வரை கூட இரண்டாவது ஊசி போடுவதற்கு நேரம் பிடிக்கிறது. இரண்டாவது அலையின் கடும் தாக்கத்தால் அனைவருக்கும் ஓர் ஊசியாவது போட்டுவிட வேண்டும் என்று அரசு முனைப்புடன் இருக்கிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை தடுப்பூசிகள் நம் நாட்டிலேயே தயார் செய்யப்படுவதாலும், தேவைப்படும் அளவுக்கு இருப்பு இருப்பதாலும், நம்முடைய முறை வரும்போது சரியாக இரண்டு தவணை தடுப்பூசிகளையும் எடுத்துக்கொள்வது நமக்கு மட்டுமல்ல; நம் சமுதாயத்துக்கும் நல்லது. இரண்டாவது தவணை ஊசிதான் மோசமான இரண்டாவது அலை ஏற்படுவதைத் தடுக்கும்.
- Dr.ஜெயஸ்ரீ ஷர்மா
source https://www.vikatan.com/health/healthy/doctor-explains-why-the-second-dose-of-covid-19-vaccine-is-important
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக