கொரோனா காலத்தில் நாட்டில் லட்சக்கணக்கானோர் தங்களது வேலையை இழந்து சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டனர். வேலையை இழந்தவர்கள் தங்களுக்கு தெரிந்த மாற்று வேலையை செய்தனர். அல்லது சிறு சிறு வியாபாரத்தை செய்தனர். கொரோனாவால் வேலை இழந்தவர்களில் புனேயை சேர்ந்த 27 வயது சாய்லி காலேயும் ஒருவர். இவர் வேலை பறிபோன பிறகு என்ன செய்வது என்று திண்டாடினார். பின்னர் டேட்டிங் ஆப் மூலம் பல மாநிலங்களை சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலரையும் நண்பர்களாக்கினார். பின்னர் அவர்களுடன் அடிக்கடி சாட்டிங் செய்தார். அதோடு விடாமல் நயமாக பேசி தனது ஊருக்கு வரும்படி அழைப்பார்.
காலேயின் வலையில் விழுபவர்கள் அவர் சொல்லும் இடத்திற்கு வருவது வழக்கம். அங்கு சென்றவுடன் காலே நயமாக பேசி அவர்களிடம் இருக்கும் நகை மற்றும் பணத்தை அபகரித்துக்கொண்டு வந்தவர்களை அப்படியே விட்டுவிட்டு தலைமறைவாகிவிடுவார். அவருக்கு சென்னையை சேர்ந்த அசிஷ் குமார் என்பவரிடம் அறிமுகம் ஏற்பட்டது. வழக்கம் போல் அசிஷ்குமாரை புனேவிற்கு வரவழைத்தார் காலே. புனே வந்த அசிஷ் குமாரிடம் நயமாக பேசி அவரின் நகை மற்றும் பணத்தை அபகரித்தார். காலே புனே வகாட் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அசிஷ் குமாரை காலே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அசிஷ் குமார் குடிக்க காலே குளிர் பானம் கொடுத்தார். அதனை குடித்த சிறிது நேரத்தில் அசிஷ்குமார் மயங்கிவிட்டார்.
உடனே அவரிடம் இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு காலே தப்பிவிட்டார். மயக்கம் தெளிந்த அசிஷ் குமார் உடனே அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பிம்ப்ரி-சிஞ்ச்வாட் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீஸார். இதில் புனே சாது வாஸ்வானி சாலையில் உள்ள வீட்டில் இருந்து காலே பிடிபட்டார். அவரிடம் விசாரித்த போதுதான் தான் கொரோனா காலத்தில் வேலை இழந்த காரணத்தால் இக்காரியத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். மொத்தம் 16 பேரிடம் இது போன்று நகை மற்றும் பணத்தை அபகரித்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரை எப்படி பிடித்தனர் என்பது குறித்து போலீஸ் கமிஷனர் கிருஷ்ணா பிரகாஷ் கூறுகையில், ``குற்றப்பிரிவு போலீசார் டேட்டிங் ஆப்களான பம்பிள், டின்டர் போன்றவற்றில் பல்வேறு பெயர்களில் போலி கணக்கு திறந்து காலேயிக்கு நட்பு கோரிக்கை கொடுக்கப்பட்டது.
ஆரம்பத்தில் காலே அதனை ஏற்கவே இல்லை. இதனால் பெண் பெயரில் புதிய கணக்கு திறந்து மீண்டும் நட்பு கோரிக்கை விடப்பட்ட போது அதனை காலே ஏற்றுக்கொண்டார். சில நாட்கள் சாட்டிங் செய்த போது காலே நேரில் பார்க்க அழைப்பு விடுத்தார். உடனே போலீஸார் சுதாரித்துக்கொண்டு அப்பெண் சொன்ன இடத்திற்கு சென்று கைது செய்தோம். கொரோனாவுக்கு முன்பு டெலிகாம் கம்பெனியில் வேலை பார்த்த காலே கொரோனாவால் வேலை இழந்தார் .
வேறு வேலை கிடைக்காததால் இக்காரியத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவரையும் தனது வலையில் விழ வைத்துள்ளார். அவரது வீட்டில் சோதனை நடத்தி 15.25 லட்சம் பணம் மற்றும் 289 கிராம் தங்கம் மற்றும் செல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. காலே பெரும்பாலும் புனேயில் உள்ளவர்களை குறிவைப்பது இல்லை. வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களை குறிவைத்து அவர்கள் வலையில் விழுந்த பிறகு அவர்களை புனேவிற்கு வரவழைத்து அவர்களை ஓட்டல் அல்லது லாட்ஜ் அழைத்துசென்று மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து குடிக்க செய்து அவர்களது பொருட்களை அபகரித்துள்ளார்.
பெண்களிடம் மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து ஆபாச படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆண் நண்பர்களிடம் எப்போதும் போன் நம்பரை பகிர்ந்து கொள்வது கிடையாது. ஆனால் பெண்களிடம் போன் நம்பரை கொடுத்துள்ளார்” என்று கமிஷனர் தெரிவித்தார்.
இப்பெண்ணுக்கு எதிராக இதுவரை 4 ஆண்கள் புகார் செய்துள்ளனர். ஆனால் இது வரை பெண்கள் யாரும் புகார் செய்ய முன் வரவில்லை. காலேயின் தாயார் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே டாக்டர்கள் அவருக்கு தூக்கு தூக்க மாத்திரை பரிந்துரை செய்துள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய காலே அந்த மாத்திரைகளை கொண்டு நட்பு வலையில் விழுபவர்களை மயக்க பயன்படுத்தியதும் தெரிய வந்தது.
source https://www.vikatan.com/news/crime/pune-woman-caught-stealing-items-from-16-people-through-dating-app
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக