Ad

புதன், 24 நவம்பர், 2021

முதல்வர் வீட்டிலிருந்து கிளம்பும் சென்னை மேயர்; இந்தியில் பேசிய சைலேந்திர பாபு! -கழுகார் அப்டேட்ஸ்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வுக்கு நூறு சதவிகிதம் வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்று அமைச்சர்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இந்த நிலையில், “நகராட்சி மற்றும் மாநகராட்சி தலைவர் மேயர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் வேண்டாம்; நேரடித் தேர்தலே நல்லது.

பெருநகர சென்னை மாநகராட்சி

குதிரைப் பேரம் போன்ற விமர்சனங்களையும் தவிர்க்கலாம்” என்று முதல்வருக்கு வெளியிலிருந்து மூத்தவர்கள் சிலர் சொல்லியிருக்கிறார்கள். முதல்வர் தரப்பும் இதை ஆமோதித்திருக்கிறதாம். இதற்கிடையே, சென்னை மேயர் பதவி பொதுப்பிரிவில் பெண்களுக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில், முதல்வரின் வீட்டிலிருந்தே பெண் ஒருவர் களமிறக்கப்படலாம் என்றும் கிசுகிசுக்கிறார்கள். ஆனால், முதன்மையானவருக்கு இதில் சிறிதும் விருப்பம் இல்லையாம்!

ஆளுங்கட்சியின் கோபத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம் முன்னாள் அமைச்சர் வேலுமணி. அதனால்தான், சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது முதல்வர் ஸ்டாலினே நேரடியாக வேலுமணி மீது குற்றம்சாட்டியபோதும், ரியாக்‌ஷன் காட்டவில்லையாம் மாஜி. தொகுதிப் பணிகளில் உள்ளூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஏதேனும் லேசாகப் பொங்கினால்கூட, ``பொறுமைதான் முக்கியம்... அண்ணன் பேசி முடிச்சித் தர்றேன்” என்கிறரீதியிலேயே அறிவுரை வருகிறதாம். சமீபத்தில் கோவையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியபோதுகூட பட்டும்படாமலும்தான் ஸ்டாலினை விமர்சித்திருந்தார் வேலுமணி.

வேலுமணி

இதற்கிடையே அசைன்மென்ட்டுக்காக வந்திருக்கும் அமைச்சர் தரப்பிடமும், மாஜியின் ஆதரவாளர்கள் சைலன்ட்டாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கிசுகிசுக்கிறது கோவை அரசியல் வட்டாரம்!

உத்தரப்பிரதேசம், லக்னோவில் நவம்பர் 21 அன்று டி.ஜி.பி-க்கள் மாநாடு நடந்தது. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு, பத்து நிமிடங்களுக்கும் மேலாக இந்தியில் பேசியிருக்கிறார்.

வட மாநிலங்களிலிருந்து வந்திருந்த டி.ஜி.பி-க்களே ஆங்கிலத்தில் பேசியபோது, இந்தித் திணிப்பைத் தொடர்ந்து எதிர்க்கும் தமிழகத்திலிருந்து சென்ற டி.ஜி.பி., இந்தியில் பேசியதைக் கண்டு பிரதமரும், உள்துறை அமைச்சரும் உச்சிகுளிர்ந்துபோனார்களாம்! அதேசமயம், இந்த விஷயத்தைக் கூர்ந்து கவனித்த தமிழக ஆளும் தரப்பு, ‘எதற்கும் ஒரு கண் இருக்கட்டும்’ என்று இன்னோர் அதிகாரி தரப்பில் சொல்லியிருக்கிறதாம்!

ஆவடி மாநகராட்சியில் மாவட்ட அமைச்சரின் மகன் தலையீடு தாங்க முடியவில்லை என்று புலம்புகிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள். தன்னைக் கேட்காமல் எந்தவொரு திட்டப்பணிக்கும் அப்ரூவல் தரக் கூடாது என்று அதிகாரிகளுக்குக் குடைச்சல் கொடுப்பதால், ஏராளமான கோப்புகள் தேங்கிக்கிடக்கின்றன என்று முதல்வர் அலுவலகம் வரை அதிகாரிகள் புகார் அனுப்பியிருக்கிறார்கள். சமீபத்தில் அ.தி.மு.க சார்பிலும், கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆவடியில் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

``அமைச்சர் மகனோட டார்ச்சர் தாங்க முடியாமத்தான் இங்கிருந்த மாநகராட்சி கமிஷனர் இடமாற்றல் வாங்கிட்டுப் போயிட்டாரு. இப்ப ஊட்டியிலிருந்து வந்திருக்குற புது கமிஷனர் சரஸ்வதி எத்தனை நாளைக்குத் தாக்குப்பிடிக்கப் போறாங்கன்னு தெரியலை’’ என்று கமென்ட் அடிக்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.

பட்டகாலிலேயே படும் என்பார்கள். இது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ரொம்பவே பொருந்துகிறது. தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்றத் தலைவரும், ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளருமான இளையராஜா அமைச்சரின் தீவிர ஆதரவாளர். சமீபத்தில் காதல் விவகாரத்தில், பெண் வீட்டாருக்குச் சாதகமாகச் செயல்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் முருகப்பெருமாள் என்கிற டாக்டரை காரில் கடத்திச் சென்று அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார் இளையராஜா.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

இதையடுத்து டாக்டர் அளித்த புகாரில், இளையராஜா உட்பட மூன்று பேரை போலீஸ் கைதுசெய்திருக்கிறது. ஏற்கெனவே அமைச்சரின் உதவியாளர் போக்குவரத்துக் காவலரை கன்னத்தில் அறைந்தது, அமைச்சரின் ஆதரவாளர் அரசு விடுதிப் பணியாளரைத் தாக்கியது என்று சர்ச்சையில் சிக்கி, அனிதாவுக்கு எச்சரிக்கைக்கு மேல் எச்சரிக்கைவிடப்பட்டிருந்த நிலையில், இப்போது என்னவாகுமோ என்று பீதியில் இருக்கிறாராம் அனிதா ராதாகிருஷ்ணன்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், அமைச்சருமான மனோ தங்கராஜ், சமீபத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்துக்குள் வரும் நாகர்கோவிலில் தனது அலுவலகத்தைத் திறந்திருக்கிறார். அ.ம.மு.க மாவட்டச் செயலாளராக இருந்த செந்தில் முருகன் தி.மு.க-வுக்கு வந்த பிறகு, காலியாகக் கிடந்த அ.ம.மு.க மாவட்ட அலுவலகம்தான் இப்போது அமைச்சர் அலுவலகமாக மாறியிருக்கிறது.

மனோ தங்கராஜ்

ஏற்கெனவே அமைச்சர் தரப்புக்கும், கிழக்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ் ராஜனுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்த நிலையில், சுரேஷ் ராஜனின் ஏரியாவிலேயே அமைச்சர் அலுவலகம் திறந்திருப்பதால், குமரி மாவட்டத்தில் இனி கோஷ்டிப்பூசல் களைகட்டும் என்று கிசுகிசுக்கிறார்கள் உடன்பிறப்புகள்!

தஞ்சாவூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ நீலமேகத்துக்கும், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டுவரும் நிலையில், ``மாநகராட்சியின் செயல்பாடுகளுக்கு நீலமேகம் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகிறார்’’ என்று அதிகாரிகள் வழியாக முதல்வர் அலுவலகத்துக்குப் புகார் சென்றிருக்கிறது. இதையடுத்து, மத்திய மாவட்டப் பொறுப்பாளரும், திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ-வுமான துரை.சந்திரசேகரனுக்கு போன் செய்த கட்சி மேலிடம், ``நீலமேகத்தின் செயல்பாடுகள் குறித்து ஏன் என் கவனத்துக்கு கொண்டுவரவில்லை? இதையெல்லாம் அதிகாரிகள் சொல்லித்தான் தெரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.

Also Read: சர்ச்சையைக் கிளப்பிய ஸ்டாலின் விசிட்; காங்கிரஸ் புள்ளியின் காலில் விழுந்த நயினார் -கழுகார் அப்டேட்ஸ்

அவரைக் கட்டுப்படுத்த வேண்டியது உங்களது பொறுப்பு இல்லையா? இன்னொரு முறை பிரச்னை என் காதுக்கு வந்தால் இரண்டு பேரின் கட்சிப் பதவிக்கும் நான் கேரன்ட்டியில்லை” என்று வறுத்தெடுத்துவிட்டதாம். விஷயம் நீலமேகத்துக்கும் சொல்லப்படவே... ``நிஜமாவே சி.எம்மா பேசுனாரு!’’ என்று அரண்டுகிடக்கிறாராம் மனிதர்!

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் நபருக்குச் சொந்தமாக காரைக்காலில் இருக்கும் சொத்தை போலி ஆவணங்கள் மூலம் ‘வீரபாண்டிய’ தி.மு.க பிரமுகர் ஒருவர், விநாயகர் பெயர்கொண்ட அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வின் மனைவியின் பெயருக்கு ரிஜிஸ்டர் செய்து கொடுத்து ஒரு கோடி ரூபாயைப் பெற்றிருக்கிறார். இதையறிந்த பிரான்ஸில் வசிக்கும் நபர் காவல்துறையில் புகார் தரவே, போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.

Also Read: மிஸ்டர் கழுகு: கரூர் டு ஆந்திரா ரகசியப் பயணம்... செந்தில் பாலாஜியை நெருக்கும் அமலாக்கத்துறை!

இதற்கிடையே முறைகேடாக வாங்கிய சொத்துப் பத்திரத்தை வங்கியில்வைத்து, அந்த முன்னாள் எம்.எல்.ஏ கணிசமான தொகையைக் கடனாக வாங்கிவிட்டாராம். உண்மையை அறிந்த வங்கி நிர்வாகம், பணத்தை உடனே கட்டச்சொல்லி நெருக்கடி தருகிறதாம். சமீபத்தில் பா.ஜ.க-வில் ஐக்கியமாயிருக்கும் அந்த முன்னாள் எம்.எல்.ஏ., இந்த நெருக்கடியிலிருந்து காப்பாற்றும்படி கட்சித் தலைமையிலிருக்கும் நபரை நாடியிருக்கிறார்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/kazhugar-updates-on-mayor-election-sylendra-babu-hindi-speaking-and-current-political-happenings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக