``முதலீடுகள் பற்றிப் பேசும் பர்சனல் ஃபைனான்ஸ் தொடரில் இன்ஷூரன்ஸுக்கு என்ன வேலை? அது ஒரு முதலீட்டு முறையா?
சில இன்ஷூரன்ஸுகளில் நாம் போட்ட பணம்கூட திரும்புவதில்லையே?
வேறு சில இன்ஷூரன்ஸுகள் தரும் வருமானம் மிகக் குறைந்த அளவில்தானே இருக்கிறது?
முன்பு பாலிசிகளை எடுத்தவர்கள்கூட, அவை தரும் வருமானம் 6%-க்கும் குறைவு என்று அவற்றை ரத்து செய்யும் காலம் இது.
நாம் கட்டும் பிரீமியத்தில் ஒரு பெரிய சதவிகிதம் கமிஷனாக ஏஜன்ட்டுகளுக்கு செல்லும்போது இந்த முதலீடு எப்படி வளரும்?” – இன்ஷூரன்ஸ் பற்றி இப்படி பல கேள்விகள் இருப்பது ஆரோக்கியமான விஷயம். கண்டிப்பாக இன்ஷூரன்ஸ் முதலீடல்ல. ஆனாலும், பர்சனல் ஃபைனான்ஸில் அதற்கு ஒரு தனியிடம் உண்டு.
இன்ஷூரன்ஸ் = ரிஸ்க் மேனேஜ்மென்ட்
வாழ்வின் அடிநாதமாகத் திகழ்வது எது என்றால் அது ரிஸ்க் மேனேஜ்மென்ட்தான். விவசாயி மழை பொய்த்துவிட்டால் பயிருக்கு என்ன வழி என்று யோசிக்கிறார். விமானத்தைச் செலுத்தும் பைலட் அவசரம் என்றால் எங்கே, எப்படி தரையிறங்குவது என்ற திட்டத்துடன்தான் களத்தில் இறங்குகிறார். வங்கிகள் வாராக் கடன்கள் பற்றியும், சாஃப்ட்வேர் கம்பெனிகள் சைபர் அட்டாக் பற்றியும், அரசுகள் போர் மேகங்கள் பற்றியும் சிந்திக்காமல் இருக்க இயலாது. ஏனெனில், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ரிஸ்க் உள்ளது.
வந்தாலும் வரலாம்; வராமலும் போகலாம் என்ற ரிஸ்க்குகள் பற்றி இவ்வளவு திட்டமிடும் நாம், கண்டிப்பாக ஒவ்வொருவர் வாழ்விலும் வந்தே தீரக்கூடிய ரிஸ்க்கான மரணம் பற்றி யோசித்து திட்டமிட வேண்டும்தானே? அதற்கு நமக்கு உதவுவதுதான் இன்ஷூரன்ஸ். குடும்பத் தலைவர் திடீரென மறைந்தால், வாடகை, கடன் தவணைகள், ஸ்கூல் ஃபீஸ் மற்றும் சாப்பாடு போன்ற செலவுகள் மறைவதில்லையே! இந்தக் கஷ்டத்தை நிவர்த்திக்க உதவுவது ஆயுள் காப்பீடு.
Also Read: இந்த 4 வழிகளைப் பின்பற்றினால் உங்கள் கடன்களை எளிதாக அடைக்கலாம்! - பணம் பண்ணலாம் வாங்க - 46
இன்ஷூசரன்ஸ் = பாதுகாப்பு
ஒவ்வொரு தனி மனிதருக்கும் தேவைகள் வெவ்வேறு; குறிக்கோள்கள் வெவ்வேறு. அவற்றை நிறைவேற்ற நிலம், தங்கம், பேங்க் எஃப்.டி, மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச் சந்தை என்று பல இடங்களில் முதலீடு செய்கிறோம். சிலர் இன்ஷூரன்ஸும் ஒரு முதலீடாக இருக்க வேண்டும் என்று விரும்பி, யூலிப், மனி பேக் போன்ற பாலிசிகளை எடுக்கிறார்கள். அவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஒன்றுதான்.
முதலீடு என்பது நம் செல்வநிலையை உயர்த்துவதாக இருக்க வேண்டும்; சொந்த வீடு, பிள்ளைகள் மேற்படிப்பு, திருமணம், நம் ரிடையர்மென்ட் போன்ற நம் குறிக்கோள்களை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.
ஆனால், இன்ஷூரன்ஸ் என்பது முதலீடு அல்ல; பாதுகாப்பு. எதிர்பாராது ஏற்படும் சில அல்லல்களில் இருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் பாதுகாப்பதே இன்ஷூரன்ஸின் வேலை. இது புரியாமல் நாம் இன்ஷூரன்ஸில் இருந்து முதலீடு, பாதுகாப்பு இரண்டும் கிடைக்க வேண்டும் என்று செயல்பட்டால், ரிட்டர்ன் குறையும்; பாதுகாப்பும் தேவையான அளவு இருக்காது.
எவ்வளவு இன்ஷூரன்ஸ் தேவை?
Also Read: சில நிமிடங்களில் கடன்கொடுக்கும் `டிஜிட்டல் லெண்டிங்' - ஒளிந்திருக்கும் ஆபத்துகள் என்ன? - 45
ஒருவரின் வருட வருமானத்தைப் போல 20 மடங்காவது ஆயுள் காப்பீடு தேவை. எண்டோவ்மென்ட் பாலிசி, மணிபேக் பாலிசி, ஹோல் லைஃப் பாலிசி, டெர்ம் பிளான், லோன் ரிடெம்ப்ஷன் பாலிசி, வீட்டுக்காப்பீடு, நகைக்காப்பீடு, வாகனக்காப்பீடு, விவசாயக்காப்பீடு, திருட்டு, பூகம்பம், வெள்ளம், பயங்கரவாதம் போன்றவற்றால் ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் ஜெனரல் இன்ஷூரன்ஸ், கொரோனா காலத்தில் பலருக்கும் மிகவும் உதவியாக இருந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்று பலவகையில் உதவும் பாலிசிகள் பற்றி வரும் அத்தியாயங்களில் காணலாம்.
காப்பீடு என்று வரும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
1. நாம் தெரிவு செய்யும் காப்பீட்டுக் கம்பெனி அநாவசியமாக இழுத்தடிக்காமல் இழப்பீட்டுத் தொகையைத் தரும் வழக்கம் உடையதா என்று கவனிப்பது முக்கியம்.
2. நம் தேவைகளை லிஸ்ட் போட்டு அவை எல்லாம் இருக்கின்றனவா, தேவை இல்லாத விஷயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளனவா என்று பார்க்க வேண்டும்.
3. விண்ணப்பப்படிவத்தை நிரப்பும்போது தவறின்றி முழுவதுமாக நிரப்ப வேண்டும். ஒரு நகலை நம்மிடம் வைத்துக் கொள்வது நல்லது.
Also Read: எந்தெந்த கடன்களுக்கு வரி விலக்கு கிடைக்கும் தெரியுமா? - பணம் பண்ணலாம் வாங்க - 44
4. பாலிசி வந்ததும் அதில் இருக்கும் விவரங்களை சரி பார்க்க வேண்டும். அதில் தவறு இருந்தால் பிற்காலத்தில் தொகை கிடைப்பது கஷ்டம் என்பதால், 15 நாள்களுக்குள் பாலிசியை திருப்பி அனுப்பி திருத்தங்கள் செய்யலாம் அல்லது பிரீமியத்தைத் திரும்பப் பெறலாம்.
5. க்ளெய்ம் பத்திரங்களை நிரப்பும்போதும் தவறின்றி நிரப்ப வேண்டும்.
- அடுத்து திங்கள்கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்
source https://www.vikatan.com/business/finance/why-insurance-is-not-an-investment-tool
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக