Ad

புதன், 24 நவம்பர், 2021

'அன்று பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடினேன்.அப்போது...' - சிலிரிப்பூட்டும் அனுபவம் பகிரும் வீரமணி ராஜு

தற்கால பக்தி இசையில் முக்கியமான பெயர் வீரமணி ராஜு. ஐயப்ப பக்தர்களிடையே புகழ்பெற்ற பல பாடல்களைப் பாடியவர். கேரள அரசு வழங்கும் ஹரிவராசனம் விருதுக்குச் சொந்தக்காரர். இப்படிப்பட்ட அற்புதமான மனிதரோடு அவரின் இசைப்பயணம் குறித்துப் பகிர்ந்துகொள்ளச் சொல்லிக் கேட்டோம். தான் இசை கற்றதுமுதல் தனக்கு நிகழ்ந்த சிலிரிப்பூட்டும் அனுபவங்கள் வரைப் பலவற்ற நம்மோடு பகிர்ந்துகொண்டார் வீரமணி.

``ஏழு வயது முதல் வீரமணி சாமி என்னைத் தன்னோடு கச்சேரிகளுக்கு அழைத்துச் செல்வார். வீரமணி சாமி பாடச் சொல்லிக்கொடுத்ததைவிட வாழ்வில் பார்க்கச் சொல்லிக்கொடுத்ததுதான் அதிகம். அதாவது அனைத்துக் கச்சேரிகளுக்கும் செல்ல வேண்டும். மக்கள் எதை ரசிக்கிறார்கள், எதை வரவேற்கிறார்கள், எந்த வகைப் பார்வையாளர்களுக்கு என்ன பாட்டு பிடிக்கும்? இப்படிப் பாடலைத் தாண்டி பார்வையாளர்களிடம் நுட்பமான கவனிப்புகளைச் செய்யக் கற்றுக்கொடுத்தார். அனைத்தையும் அனுபவத்தின் மூலம் தெரிந்துகொள்ளும்படிச் செய்தார்.

சபரிமலை

இந்தக் காலம் போல அந்தக் காலத்தில் பாடல் பதிவு எளிதானதல்ல. ஒத்திகை எல்லாம் முடிந்து பதிவுக்குப் போகும்போது, இசைத் தட்டுகள் வெளியிடும் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் கேட்டுவிட்டு அதை நிராகரிப்பது உண்டு. வீரமணி சாமி ஒரு வழியைப் பின்பற்றுவார். புதிதாகப் பாடல்கள் எழுதி இசை அமைத்ததும் அதை அடுத்து வரும் கச்சேரிகளில் பாடுவார். அதில் எந்தப் பாடல் வரவேற்பைப் பெறுகிறதோ அந்தப் பாடல்கள் நல்ல பிரபலமாகும் என்பதைப் புரிந்துகொள்வார்.

பல பாடல்கள் கச்சேரிகளில் பிரபலமான பின்புதான் பதிவு செய்யப்பட்டன. ரேடியோக்களிலோ அல்லது வேறு நிகழ்ச்சிகளிலோ அந்தப் பாடல் மீண்டும் ஒலிபரப்பப்படும்போது மக்கள் அதைக் கொண்டாடத் தொடங்கிவிடுவார்கள். இப்படித்தான் பெரும்பான்மையான பாடல்கள் பதிவு செய்யப்பட்டன.

வீரமணி மட்டுமல்ல, டி.எம்.எஸ், சீர்காழி போன்ற பல பாடகர்களும் இந்த உத்தியைக் கடைப்பிடித்தனர். மக்களின் வரவேற்பைப் பெற்ற பாடல்கள் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதோடு ஒருவிஷயம் சேர்த்துச் சொல் கிறேன். ‘பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் ஐயப்ப சாமிமாரின் தேசிய கீதம்’ என்று சொல்லுவார் வில்லுப்பாட்டு இசைக் கலைஞர் ஐயா சுப்பு ஆறுமுகம். அந்தப் பாடல் பதியப்பட்டு இந்த ஆண்டோடு 50 ஆண்டுகள் நிறைவாகிறது. ஒருவகையில் அந்தப் பாடலின் பொன்விழா ஆண்டில் ஹரிவராசனம் விருது கிடைப்பது மிக்க மகிழ்ச்சி.

ஐயப்பன்

அந்தக் காலத்தில் தமிழகத்தில் ரொம்பக் குறைவான நபர்கள்தான் இருமுடி கட்டிச் செல்வது வழக்கம். அப்போது ஆடியோ நிறுவனம் ஒன்று ஐயப்பன் பற்றி ஒரு பாடல் பதிவு செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். எங்கள் தாத்தா சோமு 1957 முதலே சபரிமலைக்குச் சென்று வருபவர். அவரிடம் பாடல் மற்றும் ஐயப்ப வழிபாடு குறித்து அந்த நிறுவனத்தின் மேனேஜர் பேசினார். சாமிமார்கள் எல்லோரும், ‘பள்ளிக்கட்டு சபரிமலைக்கு... கள்ளும் முள்ளும் காலுக்கு மெத்தை.... சாமியே, ஐயப்போ சாமி சரணம் ஐயப்ப சரணம்...’ என்று சரண கோஷம் போடுவார்கள் என்று சொன்னார் தாத்தா.

உடனே, `இதையே பல்லவியாக வைத்துக்கொள்ளுங்கள். எப்படி விரதம் இருக்கவேண்டும், எப்படி சபரிமலைக்குச் செல்லவேண்டும் என்று ஐயப்ப விரதம் இருப்பவர்களுக்கு வழிகாட்டும்விதமாக இந்தப் பாடல் அமைய வேண்டும்' என்று சொன்னார். அப்படித்தான் அந்தப் பாடல் உருவானது. பாடல் எழுதி மெட்டமைத்ததும் அடுத்த கச்சேரியில் அதைப் பாடினார் வீரமணி சாமி.

கச்சேரி முடிந்ததும் அனைவரும் சூழ்ந்துகொண்டு சபரிமலை குறித்து விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். வீரமணிசாமி எல்லோருக்கும் பொறுமையாகப் பதில் சொன்னார். அந்தப் பாடல் பாடும் இடங்களிலெல்லாம் ஐயப்ப மகிமை பரவியது. அதன்பின் 1969-ல் அந்தப் பாடலைப் பதிவு செய்தோம். பட்டிதொட்டி எங்கும் பாடல் பரவிப் புகழ்பெற்றது.

இப்போதும் இந்தப் பாடல்தான் என் கச்சேரியின் கடைசிப் பாடல். அப்படி ஒருமுறை இந்தப் பாடலைப் பாடியபோது நிகழ்ந்த மறக்கமுடியாத அனுபவம் ஒன்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒருமுறை சித்திரைவிஷு தினத்தன்று பந்தள ராஜா அரண்மனையில் ஒரு கச்சேரி. பந்தள ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு மகாராணியைப் பார்த்தோம். அப்போது அவர்கள் ஒரு நாணயம் கொடுத்தார்கள். புத்தாண்டு நாளில் அனைவருக்கும் ஒரு நாணயம் வழங்குவது கேரளாவில் வழக்கம். மகாராணி கொடுத்த நாணயத்தைப் பெற்றுக்கொண்டு கச்சேரிக்குச் சென்றோம். ராஜாவும் ராணியும் வந்து முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.

இரண்டரை மணி நேரம் கச்சேரி நடந்தது. கச்சேரி முடியும்போது பள்ளிக்கட்டு சபரிமலைக்குப் பாடலைப் பாட ஆரம்பித்தேன். அப்போது நடந்த நிகழ்வு மறக்க முடியாத அனுபவம்" என்று கூறி அந்த அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார். சிலிர்ப்பூட்டும் அந்த அனுபவம் குறித்து அறிந்துகொள்ள மேலே உள்ள வீடியோவைப் பாருங்கள்.



source https://www.vikatan.com/spiritual/gods/story-behind-the-creation-of-pallikkattu-sabarimalaikku

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக