குஜராத் மாநிலம், பரூச் என்ற இடத்தில் அதிகாலை 1 மணிக்கு வெல்ஃபேர் ஹாஸ்பிட்டலில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. தீ விபத்து குறித்துக் கேள்விப்பட்டதும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் சேர்ந்து மீட்புப் பணியிலும் தீயை அணைப்பதிலும் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்தில் தீ முற்றிலும் அணைக்கபட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 50 நோயாளிகள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதேசமயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 12 பேர் உறங்கிய நிலையிலேயே தீயில் கருகி பரிதாபகரமாக உயிரிழந்தனர் .
மேலும், மீட்கப்பட்டவர்களில் சிலரும் உயிரிழந்ததைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்ததாக போலீஸார் தெரிவித்தனர். உயிரிழந்த அனைவரும் கொரோனா நோயாளிகள். மருத்துவமனைப் படுக்கையில் நோயாளிகள் தீயில் கருகி அப்படியே இறந்துகிடந்தது அனைவரது நெஞ்சையும் பரிதவிப்பில் ஆழ்த்துவதாக இருந்தது. நான்கு மாடிகள்கொண்ட இந்த மருத்துவமனையில் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர். தீ விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்குப் போதிய அளவுக்குப் படுக்கைகள், ஆக்ஸிஜன் இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மற்றொருபுறம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் அடிக்கடி தீ விபத்துக்களும் நடந்துவருவது அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது.
source https://www.vikatan.com/news/accident/18-covid-patients-dead-in-fire-accident-at-gujarat-hospital
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக