Ad

திங்கள், 1 பிப்ரவரி, 2021

`போஸ்ட்மேன் சிவனுக்கு பத்மஸ்ரீ வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது!’ - சமூக ஆர்வலர்கள் அதிருப்தி

நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம விருதுகள் கருதப்படுகிறது.

போஸ்ட்மேன் சிவன்

அரசியல், கலை, சமூக சேவை போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசு பத்ம விபூச்ண், பத்மபூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதன்படி‌ 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும்,10 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் என மொத்தம் 119 விருதுகள் அறிவிக்கப்பட்டது.

போஸ்ட்மேன் சிவன்

இந்த பட்டியலில் `மக்களின் தபால்காரர்’ என அழைக்கப்படும் ஓய்வுபெற்ற தபால்காரர் சிவனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்காதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிரகாஷ் நம்மிடம் பேசுகையில், ``நீலகிரி மாவட்டம் குன்னூர் தபால் அலுவலகத்தில் பகுதிநேர தபால்காரராக பணியாற்றி வந்த சிவன், அடர்ந்த காடுகளில் நாள்தோறும் 15 கி.மீ தொலைவு நடந்து, அங்குள்ள மலைவாழ் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வந்தார்.

வழக்கறிஞர் பிரகாஷ்

உண்மையான மக்கள் சேவையாற்றிய சிவனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்க வேண்டும் என, இவரது சேவை குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுச் சென்றேன். இரண்டாவது முறையாக நினைவூட்டலும் செய்தேன். ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட பட்டியலில் இவரது பெயர் இல்லை. இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

மேலும் பத்ம விருதுகளை தேர்வு செய்யும் முறையில் பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது. வாக்கு வங்கியை கருத்தில் கொண்டே பத்ம விருதுகளை வழங்கியுள்ளனர்" என வேதனை தெரிவிக்கிறார்.

போஸ்ட்மேன் சிவன்

இந்த விவகாரம் தொடர்பாக சிவனிடமே பேசினோம், "ரிட்டையர்ட் ஆகி வீடல இருக்கேன் சார். எம்பாட்டுக்கு என் வேலைய செஞ்சிட்டு இருக்கேன். விருது கிருதுனு எதையும் நான் எதிர் பார்க்குறது கெடையாது" என முடித்துக் கொண்டார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/postman-sivan-name-was-avoided-in-padma-awards-says-activists

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக