Ad

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

``நல்ல படம்னா தியேட்டருக்கு வர ரெடி...'' - நோலனின் `டெனட்' தரும் நம்பிக்கை! #BoxOfficeReport

இன்னும் இந்தியா உள்பட பல நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்படாத சூழலில் இந்த வருடத்தின் மிக முக்கிய திரைப்படங்களாக கருதப்படும் இரண்டு படங்கள் கடந்த வாரம் வெளிவந்துள்ளன. கிறிஸ்டோபர் நோலனின் 'டெனட்' (Tenet) மற்றும் வால்ட் டிஸ்னி தயாரிப்பான 'முலான்' (Mulan) என இரண்டுமே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்கள். இதில் 'டெனட்' மட்டும்தான் முழுவதுமாக தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. 'முலான்' PVOD முறையில் டிஸ்னி+ தளத்தில் வெளிவந்துள்ளது. இந்த வெளியீட்டு முறை பற்றியும் ஹாலிவுட் சினிமாவின் தற்போதைய நிலை பற்றியும் விரிவாகக் கீழ்க்காணும் லிங்க்கில் படிக்கலாம்.

Also Read: திரையரங்குகளைக் கைவிடும் ஹாலிவுட்... பின்தொடர்கிறதா கோலிவுட்? #OTT #PVOD #Tenet

இந்நிலையில், கொரோனா அச்சத்தை மீறி மக்கள் திரையரங்குகள் வருவார்களா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. ''நல்ல படம் வந்தால் தியேட்டருக்கு வர நாங்க ரெடி'' என தம்ஸ் அப் காட்டியிருக்கிறார்கள் ரசிகர்கள். ஆகஸ்ட் 26-ம் தேதி ஐரோப்பா, தென்கொரியா, கனடா போன்ற முக்கிய மார்க்கெட்களில் வெளியானது 'டெனட்'. வெளிவந்த 41 நாடுகளில் முதல் மூன்று நாட்களில் மொத்தமாக 53 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 390 கோடி ரூபாய்) வசூல் செய்திருக்கிறது. இது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் எதிர்பார்த்ததை விட அதிகம்.

TENET

அதிக வசூல் தந்த டாப் 4 நாடுகள் (முதல் மூன்று நாட்களில்)

  1. இங்கிலாந்து: 7.1 மில்லியன் டாலர் (52 கோடி ரூபாய்)

  2. பிரான்ஸ்: 6.7 மில்லியன் டாலர் (49 கோடி ரூபாய்)

  3. தென்கொரியா: 5.1 மில்லியன் டாலர் (38 கோடி ரூபாய்)

  4. ஜெர்மனி: 4.2 மில்லியன் டாலர் (31 கோடி ரூபாய்)

இந்த நாடுகளில் நோலனின் முந்தைய படங்களான 'இன்டெர்ஸ்டெல்லர்', 'டன்கிர்க்' விடக் குறைவான வசூல்தான் என்றாலும் தற்போதைய சூழலில் இது அதிகம்தான் என்கிறார்கள். இதில் சில நாடுகளில் கொரோனா இன்னும் முழுவதுமாக அடங்கவில்லை, கடும் கட்டுப்பாடுகளுடனே திரையரங்குகள் திறக்கப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்த டிக்கெட்களில் 74% விற்றுத் தீர்ந்திருக்கின்றன. உக்ரைன், நெதர்லாந்து உட்பட ஒன்பது நாடுகளில் முந்தைய நோலன் படங்களின் வசூலை முறியடித்துள்ளது 'டெனட்'. படத்துக்கு முழுவதுமாக நல்ல விமர்சனங்கள்தான் வருகின்றன என்றும் சொல்ல முடியாது. விமர்சகர்கள் சிலர் ''முந்தைய நோலன் படங்களிலிருந்த எதோ ஒன்று மிஸ்ஸிங்'' எனக் கருத்து தெரிவித்துள்ளனர். மக்களிடமும் கலவையான விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன. சிலர் ''மாஸ்டர் பீஸ்'' என்கிறார்கள், சிலர் ''நோலன் எடுத்ததிலேயே சுமாரான படம் இதுதான்'' என்கிறார்கள். எதை நம்புவது? வெளிநாடுகளில் படம் பார்த்த இருவரிடம் பேசினோம்.

Bala Shanmugam | பால சண்முகம்

கனடாவில் மேற்படிப்பு படித்து வரும் பால சண்முகம் கடந்த வாரம் நண்பர்களுடன் 'டெனட்' பார்த்திருக்கிறார். முதலில் அங்கு இருக்கும் கட்டுப்பாடுகள் குறித்தும் மக்களின் மனநிலை குறித்தும் கேட்டோம். "இங்குத் திரையரங்குகளில் முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பல மாதங்களுக்குப் பிறகு ஒரு முக்கிய படம் வெளியாகியிருப்பதால் படம் பார்க்கும் ஆர்வம் மக்களிடையே இருப்பதாகவே தெரிகிறது. திரையரங்குகளில் அதிக இடைவெளி விட்டே மக்கள் உட்காரவைக்கப்படுகின்றனர். தமிழகத்தில் இருப்பது போன்ற பெரிய திரையரங்குகள் ஒன்று இரண்டுதான் இங்கு இருக்கின்றன. பெரும்பாலானவை 200 பேர் அமரும் குட்டி திரையரங்குகள்தான். அதனால் ஒரு ஷோவில் மொத்தமாகவே 30-40 பேர்தான் படம் பார்க்கிறோம். இதற்காக டிக்கெட் விலையிலும் எந்த மாற்றமும் இல்லை" என்ற அவரிடம் படத்தைப் பற்றியும் கேட்டோம்.

"வெளிவந்திருக்கும் விமர்சனங்கள் அளவுக்குப் படம் மோசமாக இல்லை. படம் இரண்டரை மணிநேரமும் நம்மை என்கேஜ் செய்கிறது. 'இன்டெர்ஸ்டெல்லர்' போன்று நோலனின் முந்தைய படங்களிலிருந்த பிரமாண்டம் மிஸ்ஸிங் என்று வேண்டுமானால் சொல்லலாம். மற்றபடி குறைகள் எல்லாம் இல்லை. பிரமிக்கவைக்கும் வேற லெவல் சீன்கள் படத்தில் இருக்கவே செய்கின்றன" என்றார்.

அடுத்து நார்வேயில் படம் பார்த்த ஒருவரிடம் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) இதுபற்றி பேசினோம். "கிட்டத்தட்ட ஒரு வரிசைக்கே ஒன்றிலிருந்து இரண்டு பேர்தான் அமர்ந்திருந்தோம். இங்கு கொரோனா பாதிப்புகள் மிக அதிக குறைந்த அளவிலேயே இருக்கிறது. இங்கு மாஸ்க் கூட கட்டாயம் கிடையாது, இருந்தும் திரையரங்குகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. நான் பார்த்த ஷோவில் 20 பேருக்கு மேல் படம் பார்த்திருக்க மாட்டோம். பெரிய நகரங்களில் இதைவிட வரவேற்பு ஓரளவு நன்றாகவே இருப்பதாகச் சொன்னார்கள். எப்போதும் போல இரண்டு மூன்று முறை படம் பார்த்தால்தான் இன்னும் தெளிவாகப் படம் புரியும்'' என்றார்.

Tenet
'உலகத்தை அழிக்க நினைக்கும் வில்லன், அதைக் காப்பாற்றப் போராடும் ஹீரோ' ஹாலிவுட் தோன்றிய காலத்திலிருந்து மாறாத இந்த ஒன்லைன்தான் 'டெனட்' கதை.

ஆனால் ரிவர்ஸ் ட்ராவல், தெர்மோடைனமிக்ஸ் என அறிவியலையும் கற்பனையையும் கலந்துகட்டி எப்போதும் போல விளையாடியிருக்கிறார் நோலன் என்பது மட்டும் இவர்கள் சொன்னதிலிருந்து புரிகிறது. இதற்கு மேல் சொன்னால் ஸ்பாய்லர் ஆகிவிடும் என்பதால் நேராக அடுத்த விஷயத்துக்குப் போவோம்.

AMC

ஹாலிவுட் படங்களின் மிக முக்கிய மார்க்கெட்டான அமெரிக்காவிலும், ஆசியாவின் மிக முக்கிய மார்க்கெட்டான சீனாவிலும் கடந்த வியாழன்தான் (Sept 3) வெளிவந்தது 'டெனட்'. அமெரிக்காவில் எதிர்பார்த்த ஓப்பனிங் இல்லை என்பதே ரிப்போர்ட். நோலனின் முந்தைய படமான 'டன்கிர்க்'கின் இரண்டாவது வீக்-எண்ட் வசூலை விட இது குறைவு. மார்ச் 6 வெளிவந்த டிஸ்னி-பிக்ஸாரின் அனிமேஷன் படமான 'Onward' கூட முதல் வீக்-எண்டில் 39.1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 288 கோடி ரூபாய்) வசூல் செய்தது. ஆனால், முதல் நான்கு நாட்களில் சுமார் 20 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 147 கோடி ரூபாய்) மட்டுமே அமெரிக்காவில் வசூல் செய்திருக்கிறது 'டெனட்'. இப்படம் அமெரிக்காவில் 2,810 திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த வசூல் எதிர்பார்த்ததை விடவும் கொஞ்சம் குறைவுதான் என்கிறார்கள். அமெரிக்காவில் கொரோனாவின் பிடி இன்னும் வலுவாகவே இருக்கிறது. லாஸ் ஏஞ்சலீஸ், நியூயார்க் போன்ற முக்கிய நகரங்களில் இன்னும் திரையரங்குகள் மூடப்பட்டே இருக்கின்றன. 50-60% திரையரங்குகள்தான் அமெரிக்காவில் திறக்கப்பட்டிருக்கின்றன. 30-40% இருக்கைகளில்தான் மக்கள் அமர வைக்கப்படுகின்றனர்.

அமெரிக்காவை விடவும் 'டெனட்'டின் சீன ஓப்பனிங்தான் பெரும் ஏமாற்றம் எனக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டது சீனா. இருந்தும், முதல் நான்கு நாட்களில் அங்கு 30 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 220 கோடி ரூபாய்) மட்டுமே வசூல் செய்திருக்கிறது டெனட். சீனாவில் அதிகம் வசூல் செய்த நோலன் படம் 'இன்டெர்ஸ்டெல்லார்'. 2014-ல் வெளிவந்த இப்படம் 122 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 896 கோடி ரூபாய்) வசூலைச் சீனாவில் மட்டும் செய்தது. இதில் பாதியை 'டெனட்' செய்தாலும் அதிசயம்தான்.

Eight Hundred

இதற்கு முக்கிய காரணம் 'டெனட்' பற்றிய விமர்சனங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதுதான். இது போதாது என 'The Eight Hundred' என்ற சீன படமும் அங்கு பாக்ஸ்-ஆபிஸில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. அடுத்த வாரம் அங்கு 'முலான்' படமும் வெளிவருகிறது. இதனால் மொத்தமாக 50-60 மில்லியன் டாலர் வரை சீனாவில் 'டெனட்' வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் மொத்த வசூலிலிருந்து வெறும் 25% தொகையே ஸ்டூடியோக்களுக்கு வந்து சேரும். அதனால் இது வார்னர் பிரதர்ஸுக்கு பெரிய பின்னடைவு எல்லாம் இல்லை என்கிறார்கள். இப்படி சீனாவும், அமெரிக்காவும் கைகொடுக்காமல் போக ஒரு வாரம் முன்பே வெளியான மற்ற மார்க்கெட்களில் இன்னும் 'டெனட்'டுக்கு மவுசு பெரிதாகக் குறையவில்லை. இதன் காரணமாக 'டெனட்'டின் மொத்த வசூல் 150 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் 1100 கோடி ரூபாய்) நெருங்கியிருக்கிறது. விரைவில் ஜப்பான் போன்ற நாடுகளிலும் திரையரங்குகள் திறக்கும் என்பதால் நம்பிக்கையுடன் காத்திருக்கிறது வார்னர் பிரதர்ஸ்.

Warner Bros

'டெனட்' படத்துக்கு முக்கியமாக கைகொடுக்கப்போவது இரண்டு விஷயங்கள். ஒன்று டிஸ்னி 'முலான்' படத்தை நேராக ஸ்ட்ரீமிங்கிற்கு எடுத்துச் சென்றுவிட்டதால் 'டெனட்'டுக்கு பெரிய போட்டிகள் எதுவுமே தற்போது இல்லை. மற்றொன்று அடுத்த சில வாரங்களுக்கு எந்த பெரிய படங்களும் வெளிவருவதாக இல்லை என்பதால் தாராளமாக இன்னும் 10-12 வாரங்கள் வரை திரையரங்குகளில் ஓடும் வாய்ப்பு 'டெனட்'டுக்கு இருக்கிறது. கிட்டத்தட்ட 1990, 2000-களில் நம்மூரில் இருந்த நிலை. 100 நாட்கள் ஓடி பணத்தை எடுக்கப் பார்க்கிறது 'டெனட்'. ஆனால், அதற்கேற்ற 'Word of mouth' இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான்!

வெற்றிப்படமா டெனட்?

இது கொஞ்சம் சிக்கலான கேள்விதான். இந்த கொரோனா காலத்தில் வார்னர் பிரதர்ஸ் போட்டதை எடுத்தாலே அதை வெற்றியாகத்தான் கருத வேண்டும். இதுவரை நோலன் எடுத்ததிலேயே அதிக பொருட்செலவில் உருவாகியிருக்கும் படம் 'டெனட்'தான். இதன் 225 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 1,655 கோடி ரூபாய்) பட்ஜெட்டை திருப்பி எடுக்க டெனட் 500 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 3,677 கோடி ரூபாய்) வரை வசூல் செய்தாக வேண்டும். முதல் இரண்டு வார வசூல் ரிப்போர்ட்டை வைத்துப் பார்த்தால் இதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் இருக்கவே செய்கிறது. ஆனால், மக்கள் மனநிலை இப்படியே தொடருமா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நம்மூர் தயாரிப்பாளர்களும் கூட 'டெனட்'டின் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறதென உன்னிப்பாகக் கவனித்துவருகின்றனர். '100 நாள்கள் தியேட்டரில் படத்தை ஓடவைத்து பணம் எடுப்பதுதான் ஃபார்முலா' என்பது உறுதியானால் அதே நம்பிக்கையில் இங்கும் பெரிய படங்கள் களம் காணும் என நம்பலாம். ஆனால் நம்மூரில் ஓடிடி தளங்கள் இதற்கு ஒத்துழைக்குமா என்பதுதான் தெரியவில்லை!



source https://cinema.vikatan.com/hollywood/people-are-ready-to-visit-theatres-tenet-box-office-report-gives-hope

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக