Ad

புதன், 30 செப்டம்பர், 2020

``வெட்டிவேர் மாஸ்க் பிசினஸ், பிரபலங்களின் பர்த்டே சர்ப்ரைஸ்!" - பூர்ணிமா பாக்யராஜ் ஷேரிங்ஸ்

கொரோனா காலகட்டம், பலருக்கும் புதிய தொழில் வாய்ப்புகளுக்கான பாதையைத் திறந்து விட்டுள்ளது. சாமான்ய மக்களுடன், பிரபலங்களும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர். அந்த வரிசையில், நடிகை பூர்ணிமா பாக்யராஜ் டிசைனர் மாஸ்க் தயாரிப்பில் இறங்கியிருப்பதுடன், அதைப் பல்வேறு பிரபலங்களுக்கும் விற்பனை செய்கிறார். அவர் தயாரித்த மாஸ்க் அணிந்த புகைப்படத்தை, நடிகை குஷ்பு உட்பட பல்வேறு சினிமா பிரபலங்களும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பகிர்ந்துவருகின்றனர். மாஸ்க் தயாரிப்பு குறித்து பூர்ணிமாவிடம் பேசினோம்.

பூர்ணிமா பாக்யராஜ்

``பல வருஷமாவே பெண்களுக்கான ஆடைகளை வடிவமைச்சு, தயாரிச்சு விற்பனை செய்றேன். ஆனா, இதைப் பெரிய பிசினஸா பண்றதில்லை. கொரோனா பாதிப்பால் எல்லோரும் மாஸ்க் அணிவது கட்டாயமான நிலையில், பல்வேறு டிசைன் மாஸ்க்குகள் புழக்கத்துக்கு வந்துச்சு. அப்போதான் வெட்டிவேர் மாஸ்க் பத்தி தெரிஞ்சுகிட்டேன். கூகுள் பண்ணியும், தெரிஞ்ச டாக்டர்கிட்ட விசாரிச்சும், அந்த வகை மாஸ்க் சுவாசிப்பதற்கு நல்லதுனு தெரிஞ்சுகிட்டேன். முதலில் எங்க குடும்பத்தினருக்காக வெட்டிவேர் மாஸ்க் தயாரிச்சேன். பயன்படுத்த நல்லா இருக்குனு குடும்பத்தினர் சொன்னாங்க.

என்னுடைய 80'ஸ் காலகட்ட தோழிகளுக்கும் சினிமா துறை நண்பர்கள் சிலருக்கும் வெட்டிவேர் மாஸ்க் கொடுத்துப் பயன்படுத்திப் பார்க்கச் சொன்னேன். சுஹாசினி, குஷ்பு, லிசி, நதியா, ஐஸ்வர்யா ராஜேஷ், பாடகி நித்யஸ்ரீ மகாதேவன், ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி உட்பட பலருமே நல்ல ஃபீட்பேக் சொன்னதுடன், கூடுதலா புதிய மாஸ்க்குகள் கேட்டாங்க. அவங்க விரும்பும் டிசைன்கள்ல தொடர்ந்து தேவைக்கேற்ப மாஸ்க் தயாரிச்சுக் கொடுக்கறேன். என் மருமகள் கீர்த்தியின் தோழிகளுக்கும் மாஸ்க் கொடுக்கறேன். இதை பிசினஸா பண்ணணும்னு இப்பவரை நினைக்கலை. டிரஸ்ஸுக்கு மேட்ச்சிங்கான டிசைனிலும், கட்டுப்படியான விலையிலும் கொடுப்பதால், ஒருவர் மூலம் ஒருவர்னு பலரும் என்கிட்ட மாஸ்க் கேட்கறாங்க. அவங்களுக்கு மட்டும் தயாரிச்சுக் கொடுக்கறேன்.

டிசைனர் மாஸ்க் அணிந்துள்ள குஷ்பு, சுஹாசினி

மாஸ்க் டிசைனிங் நான் பண்ணிடுவேன். அதைச் சில வேலையாட்கள் மூலம் தெச்சு பேக் பண்ணி, கேட்கிறவங்களுக்கு கூரியர் பண்ணிடுவேன். என் தோழியும் எம்.பி-யுமான நடிகை சுமலதாவைத் தொடர்ந்து, தமிழச்சி தங்கபாண்டியன், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுப்ரியா சுலே உள்ளிட்ட சில பெண் எம்.பி-க்களும் என்னிடம் மாஸ்க் வாங்கினாங்க. சமீபத்துல சில பெண் எம்.பி-க்கள் நாடாளுமன்றத்துல ஒண்ணா குரூப் போட்டோ எடுத்துக்கிட்டாங்க. அது அவங்களுக்குள் நடந்த இயல்பான சந்திப்புன்னாலும், அதில் சுமலதா, தமிழச்சி உட்பட சிலர் நான் டிசைன் பண்ணின மாஸ்க் அணிஞ்சிருந்ததைப் பார்த்துச் சந்தோஷப்பட்டேன்.

டிசைன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே வேளையில், பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து அஞ்சு லேயர்ல ஃபேப்ரிக் இருக்கிற மாதிரிதான் மாஸ்க் தயாரிக்கறேன். பல்வேறு தொழிலதிபர்களும்கூட அதிக அளவில் இப்ப மாஸ்க் ஆர்டர் கொடுக்கறாங்க. பொதுமக்கள் சிலருக்கும் கொடுக்கறேன். ஷூட்டிங், வீட்டு வேலைகள் போக கிடைக்கும் ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் கழிக்க, மாஸ்க் தயாரிப்பு உதவுது” என்று புன்னகைப்பவரின் பேச்சு லாக்டெளன் காலத்துக்குள் திரும்பியது.

டிசைனர் மாஸ்க் அணிந்துள்ள பெண் எம்.பி-க்கள்.

தனது பிறந்த நாளில் குடும்பத்தினர் மற்றும் சினிமா நண்பர்களின் சர்ப்ரைஸ் வாழ்த்து மழையில் நனைந்தவர், அது குறித்துப் பேசினார். ``ஆண்டுதோறும் என் பிறந்தநாளை வீட்டுல எளிமையாதான் கொண்டாடுவோம். கடந்த ஜூலை மாசம் என் பிறந்தநாள்ல, `கோயிலுக்குப் போகலாம்’னு என் கணவர் என்னை கார்ல கூட்டிட்டுப்போனார். போகும்போதே என் கண்ணைக் கட்டிவிட்டு, `வழியில் உன்னை ஒருவர் சர்ப்ரைஸா சந்திக்கப்போறார்’னு சொன்னார். நண்பர் ஒருவர் வீட்டுக்குக் கூட்டிட்டுப்போன பிறகுதான் என் கண்ணைத் திறந்துவிட்டாங்க.

ராதிகா, சரத்குமார், சுஹாசினி, குஷ்பு, லிசி, ராஜ்குமார், என் குடும்பத்தினர் உட்பட பலர் அங்கே இருந்தாங்க. அந்த மீட் எனக்குப் பெரிய இன்ப அதிர்ச்சி. அடிக்கடி சந்திக்கும் நாங்க, கொரோனா நேரத்துல நேர்ல சந்திக்கவேயில்லை. இக்கட்டான சூழல்லயும் எனக்கு வாழ்த்துச் சொல்ல பலரும் நேர்ல வந்திருந்தாங்க. அதனால, நெகிழ்ச்சியில் கண்கலங்கிட்டேன். எல்லோருக்கும் கேக் ஊட்டினேன்.

பூர்ணிமாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்...

வாழ்த்து மழையில் என்னைச் சந்தோஷப்படுத்தினாங்க. அதையெல்லாம்விட ஸ்பெஷல் விஷயம் என்னன்னா, அன்னிக்கு வந்திருந்த எல்லா நண்பர்களுமே அவங்கவங்க வீட்டுல சமைச்சு கொண்டுவந்தாங்க. அதைப் பகிர்ந்து சாப்பிட்டோம்.

கொரோனா அச்சத்துல, இப்படியொரு சர்ப்ரைஸ் நிகழ்வு நடக்குறது பெரிய விஷயம். இதைவிட எங்க நட்புக்கு வேறு அடையாளம் தேவையா? எங்க நண்பர்கள் எல்லோருக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் பத்தாது. இந்த சர்ப்ரைஸ் நிகழ்வை என் பையன், மருமகள், பொண்ணு ஆகியோர் சேர்ந்துதான் ஏற்பாடு செய்திருந்தாங்க” என்று சிரிப்பவரின் விழிகளை ஈரமாக்குகின்றன, அவரது அம்மாவின் நினைவுகள்.

``நான் ஹீரோயினா நடிச்சுகிட்டு இருந்த காலத்துல எனக்கு பக்கபலமா இருந்தவங்க என் அம்மா. அவங்க எங்க வீட்டுலதான் இருந்தாங்க. உடல்நிலை சரியில்லாம வீட்டுக்குள்தான் ஓய்வெடுத்தாங்க. கொரோனா லாக்டெளன்ல அம்மாவுடன் அதிக நேரம் செலவழிக்க முடிஞ்சது. அதனால் ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க. எதிர்பாராத விதமா கடந்த மாசம் அவங்க இறந்துட்டாங்க. அவங்க மறைவு என் வாழ்க்கையில் ஈடுசெய்ய முடியாத இழப்பு” என்கிறார் நெகிழ்ச்சியாக.

Poornima Bhagyaraj

45 வருடங்களுக்குப் பிறகு பூர்ணிமா மீண்டும் நடிப்பில் பிஸியாகியிருக்கிறார். ``படிப்பைத் தொடர முடியாம, ரொம்பவே ஆசையோடு சினிமா துறைக்குள் வந்தேன். நிறைய பட வாய்ப்புகள் கிடைச்சது. குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாத அளவுக்கு, அஞ்சு வருஷத்துக்குள் பல மொழிகள்லயும் 50 படங்களுக்கு மேல நடிச்சேன். பிறகு, குடும்பம், குழந்தைங்க நலனுக்காக ஆக்டிங் வாய்ப்புகள் வந்தும் தவிர்த்தேன். பசங்க பெரியவங்களா ஆன பிறகு, மீண்டும் நடிக்க ஆசைப்பட்டேன். என் கணவரும் ஊக்கம் கொடுத்தார். அப்படித்தான் `ஜில்லா’ உள்ளிட்ட சில படங்கள்ல நடிச்சேன். மறுபடியும் ஆக்டிவ்வா நடிக்கலாம்னு நினைச்சப்போதான், சன் டிவி `கண்மணி’ சீரியல் வாய்ப்பு கிடைச்சது.

ஒரு வருஷமா அந்த சீரியல் நல்லா போயிட்டிருக்கு. கூடவே, இப்போ ஜீ தமிழ்ல `சூர்யவம்சம்’ சீரியல்லயும் லீட் ரோல்ல நடிக்கறேன். இந்த ரெண்டு சீரியலுக்கும் மாசத்துல பாதி நாள்கள் தேவைப்படும். மத்த நாள்கள் குடும்பம், ஃபிரெண்ட்ஸ், டிசைனர் தொழிலுக்கானது. இப்படி பிஸியா இருக்கிறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு" என்கிறார் புன்னகையுடன்!



source https://cinema.vikatan.com/tamil-cinema/poornima-bhagyaraj-shares-about-her-new-designer-mask-business

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக