Ad

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

புதுக்கோட்டை: மழைக்கு ஒழுகும் கட்டடத்தில் குடித்தனம்! - மூதாட்டிக்கு உதவிய காவலர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் வலவம்பட்டியைச் சேர்ந்தவர் முனியம்மாள்(65). அங்கன்வாடி பணியாளராக வேலைபார்த்திருக்கிறார். திருமணமாகாத இவர், தனது தாயுடன் வசித்து வந்த நிலையில், தாய் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிடுகிறார். ஊரில் வீடு, சொத்து எல்லாம் இருந்தும் அங்கு இருக்கப் பிடிக்காத முனியம்மாள், ஆதனக்கோட்டை சிவன் கோயில் அருகே உள்ள மேற்கூரை பழுதடைந்த கட்டடத்தில் தங்கி வந்துள்ளார்.வெயிலிலும், கடுமையான மழையிலும் அந்த பழுதடைந்த கட்டடத்திற்குள்ளே வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.

இந்த நிலையில், தான் உறவினர்கள் பலமுறை அழைத்தும் வீட்டிற்குப் போக மறுத்துள்ளார். இதுபற்றி தகவலறிந்த, ஆதனக்கோட்டை உதவி ஆய்வாளர், காவலர்கள் சென்று முனியம்மாளிடம் பேச, `ஊருக்குப்போக விருப்பமில்லை. எனது முடிவு இங்கே தான்’ என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார். இதையடுத்து, காவலர்கள் புதுக்கோட்டை உட்கோட்ட டிஎஸ்பி கே.கே.செந்தில்குமாரிடம் கூற, உடனே டிஎஸ்பி மற்றும் காவலர்கள் இணைந்து அந்த பழுதடைந்த கட்டடத்திலிருந்த பழுதான சிமெண்ட் சீட்களை புதுப்பித்து, தார்ப்பாய்கள், போர்வை, உடைகள் வாங்கிக்கொடுத்து முனியம்மாளை நெகிழ வைத்துள்ளனர்.

இதுபற்றி டிஎஸ்பியிடம் கேட்டபோது, ``மூதாட்டி ஒருவர் மழைக்கே ஒழுகும் கட்டடத்தில் மழையிலும், வெயிலும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தவுடன், விசாரித்து வீட்டிற்கு அனுப்பி வைக்கலாம்னு தான் காவலர்களை அனுப்பி வச்சோம். ஆனா, அவங்க, `வீட்டுக்குப் போக விருப்பமில்லை. கடைசிக் காலம் எனக்கு இங்கு தான்’னு கராராக சொல்லிட்டாங்க. ரொம்ப பிடிவாதமாகவும் இருந்தாங்க. அப்பத்தான், அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சோம்.

இப்போ மழைக்காலம் வேற அந்தக் பழுதடைந்த கட்டடத்தில் சின்ன மழை பெய்தாலே 1 நிமிஷம் கூட உள்ள இருக்க முடியாது. இப்போதைக்குத் தற்காலிகமாக அந்த இடத்தில் தங்கிக்கிற வகையில், நான், ஆதனக்கோட்டை உதவி ஆய்வாளர், காவலர்கள் சேர்ந்து ஒரு சிறிய தொகையை ஒதுக்கி பழுதடைஞ்ச சீட்களை மாத்தி, போர்வை உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்களை வாங்கிக்கொடுத்திருக்கோம். சிலர் சாப்பாடு கொடுக்கிறதாக சொல்றாங்க. ஆனாலும், நாங்களே தினமும் சாப்பாடு கொடுக்கலாம்னு இருக்கோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/general-news/old-women-staying-in-damaged-building-policemen-helps-her

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக