Ad

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

`செல்போனுக்குத் தடை; சசிகலா குறித்து பேசக் கூடாது?' - சென்னையில் கூடியது அ.தி.மு.க செயற்குழு

தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிகிறது. இதையடுத்து, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்குக் கட்சிகள் தயாராகத் தொடங்கியிருக்கின்றன. கொரோனாவால் தேர்தல் நடத்துவதில் பிரச்னை ஏற்படலாம் என்று கருதப்பட்ட நிலையில், அதற்கான வழிகாட்டு நடைமுறைகளோடு பீகார் தேர்தலை நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம்

இதனால், தமிழகத்தில் தேர்தலைச் சந்திக்க அரசியல் கட்சிகள் அதற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கின்றன. அந்தவகையில், அ.தி.மு.க-வின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று தொடங்கியது. வழக்கமாக, ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தின் முதற்தளத்தில் மட்டுமே கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த முறை, தரைத்தளம் மற்றும் முதற்தளத்தின் வலதுபுறத்திலுள்ள அறை ஆகியவற்றில் உறுப்பினர்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. அந்த அறைகளில் மிகப்பெரிய எல்.இ.டி டி.வி-களும் வைக்கப்பட்டிருக்கின்றன.

Also Read: டார்க்கெட் சசிகலா... எடப்பாடி எடுக்கும் ஆணைய அஸ்திரம்!

கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கூட்டத்துக்கு முன்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் ஆகியோரை அமைச்சர்கள் தனித்தனியாக சந்தித்துப் பேசினர். அ.தி.மு.க-வில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை எழுந்திருக்கும் நிலையில், இன்று அந்தக் கட்சியின் செயற்குழு கூடியிருக்கிறது. அந்தக் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் கூடும் இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம்

ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் சிலர், ஓ.பி.எஸ் முகமூடி அணிந்து கூடியிருக்கிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது, ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், `ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு' எனவும், ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள், `நிரந்தர முதல்வரே...' எனவும் கோஷமிட்டது அந்தக் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில், இன்றைய கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர், சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, வழிகாட்டுதல்குழு அமைப்பது, பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

Also Read: பன்னீர் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த `சர்வே'... `முடிவு'களால் எடப்பாடி தரப்பு படு குஷி!

விரைவில் சசிகலா விடுதலையாக இருக்கும் நிலையில், அவரை அ.தி.மு.க-வில் மீண்டும் சேர்ப்பது குறித்து இன்றைய கூட்டத்தில் பேசக் கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல், கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டுவது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அ.தி.மு.க-வின் செயற்குழு உறுப்பினர்கள் 293 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.



source https://www.vikatan.com/news/politics/admk-executive-council-meet-starts-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக