Ad

திங்கள், 28 செப்டம்பர், 2020

`அன்புமணி ஏன் எடுபடவில்லை... சீமானின் இலக்கு'-`முதல்வர் வேட்பாளர்' சொல்லும் லாஜிக் #TNElection2021

ஈரோட்டில் முதல்வர் வேட்பாளரை அறிவித்த கையோடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் இறங்கியிருக்கிறது `புதிய பார்வை' என்றொரு கூட்டணி. தமிழக முற்போக்கு மக்கள் கட்சி, தேசிய மக்கள் சக்தி கட்சி, நேர்மை இயக்கம் உட்பட ஐந்து சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து இப்படியோர் அணி உருவாகியிருக்கிறது. முதற்கட்டமாக 120 வேட்பாளர்கள், அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல் என அதகளப்படுத்தத் தொடங்கியிருக்கிறது இந்த அணி.

`புதிய பார்வை' அணியின் முதல்வர் வேட்பாளர் சக்திவேலிடம் பேசினோம்.

`` தமிழக அரசியல் களத்தில் முதல்வர் வேட்பாளர் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. மேலும், 234 தொகுதிகளிலும் நிற்கக்கூடிய வலிமை வேண்டும். அதற்காக ஈரோட்டில் 120 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தோம். கடந்த இரண்டு மாதங்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். எங்கள் அணியின் சார்பாக, வீரா.சிதம்பரம், எம்.எல்.ரவி ஆகியோரை துணை முதல்வர் வேட்பாளர்களாகக் களமிறக்கியிருக்கிறோம்" என விவரித்தவரிடம் சில கேள்விகளை முன்வைதோம்.

வேட்பாளர் அறிமுகம்

தேர்தல் தேதியே அறிவிக்காதபோது ஏன் இவ்வளவு அவசரம்?

`` தி.மு.க., அ.தி.மு.க ஆகிய கட்சிகளிடம் பணமும் செல்வாக்கும் அதிகமாக இருக்கின்றன. எப்போது தேர்தல் தேதியை அறிவித்தாலும், அவர்களால் உடனடியாக மக்களைச் சென்றடைய முடியும். எங்களிடம் அப்படி எதுவும் இல்லை. எனவே, எட்டு மாதங்களுக்கு முன்னரே களமிறங்கினால்தான் மக்களிடம் எடுபட முடியும். வேட்பாளர்களை அறிவித்துவிட்டாலே, மக்களிடம் சென்று சேர முடியும் என நாங்கள் நினைக்கவில்லை."

உங்கள் அணியில் உள்ள ஐந்து கட்சிகளுக்கும் அப்படியென்ன செல்வாக்கு இருக்கிறது?

ஈரோட்டில் அறிமுகக் கூட்டம்

`` கடந்த தேர்தலில் நாங்கள் எவ்வளவு வாக்குகள் வாங்கினோம் என்பதைப் பார்க்க வேண்டியதில்லை. கடந்த தேர்தலில் குறைவாகத்தான் வாக்குகளை வாங்கினோம். அதற்குச் சில உதாரணங்களைச் சொல்கிறேன். 1991 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க 21 சதவிகித வாக்குகளைத்தான் வாங்கியது. அதுவே, 96-ல் அவர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். 1984-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இரண்டே இடங்களில்தான் பா.ஜ.க வென்றது. இதைக் கருத்தில்கொள்ளாமல் அவர்கள் தொடர்ந்து முயன்றதால் ஆட்சிக்கு வந்துவிட்டனர்.

அதேபோல், பல மாநிலங்களில் செல்வாக்கே இல்லாமல் இருந்த பா.ஜ.க., தற்போது ஆட்சி நடத்திவருகிறது. 2016 தேர்தலில் அ.தி.மு.க வென்றாலும், 2019 எம்.பி தேர்தலில் தி.மு.க வென்றது. அந்த வெற்றியை அ.தி.மு.க-வால் தொட முடியவில்லை. எனவே, மக்கள் மாற்றத்தை விரும்புவார்கள் என நம்புகிறோம். கடந்தமுறை களத்தில் முன்கூட்டியே இறங்காததால், குறைந்த வாக்குகளைப் பெற்றோம். இரண்டில் ஒரு கட்சி என்ற வாய்ப்பு இருப்பதால், மக்கள் ஒரு கட்சியைத் தேர்வு செய்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கினால், புதியவர்களை வரவேற்பார்கள்."

Also Read: அதிமுக:`நீட் தேர்வு வேண்டாம்; இருமொழிக் கொள்கை' - செயற்குழுக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம் #NowAtVikatan

``மக்கள் வரவேற்பார்கள் என நம்புகிறீர்களா?"

``இன்றைக்கு இருக்கக் கூடிய சமூக ஊடகங்கள், பொதுவான ஊடகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சி பெரிதாக இருக்கிறது. சமூக ஊடகங்களில் எங்களை 50,000 பேர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதுவே, அந்தக் காலமாக இருந்தால் மக்களைச் சென்றடைய முடியாது. இப்போதிருக்கும் சூழலில் மக்களை எளிதில் சென்றடைய முடியும்."

வேட்பாளர்கள் அறிமுகம்

``நீங்கள் முன்வைக்கும் கொள்கைளைத்தானே அன்புமணி, சீமான் ஆகியோர் முன்வைக்கிறார்கள்?"

``நாம் தமிழர் கட்சியின் இலக்கு, 2026 சட்டமன்றத் தேர்தல் என அறிவித்துவிட்டார் சீமான். இப்போது அவரைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. பாட்டாளி மக்கள் கட்சி என்பது குறிப்பிட்ட சமூகம் மற்றும் குறிப்பிட்ட பகுதிக்கான கட்சியாகத்தான் இருக்கிறது. அவர்கள் மாற்று நிறத்தைக் கொடுக்கப் பார்த்தார்கள். அது எடுபடாமல் போய்விட்டது. அனைவருக்கும் பொதுவான இயக்கமாக இருக்க வேண்டும். திராவிட தேசியம், தமிழ்த் தேசியத்தைவிடவும் வேலையில்லா திண்டாட்டம் பிரதானமாக இருக்கிறது. எல்லோருக்கும் வேலைவாய்ப்பு தருவோம் என நாங்கள் சொல்லவில்லை. மாவட்ட அளவிலுள்ள வளங்களைவைத்து, `மேக் இன் இந்தியா' போல தமிழ்நாட்டுத் தயாரிப்புகளை முன்னிறுத்துவோம். இதை மற்ற கட்சிகள் சொல்வதில்லை. தமிழ் இனம் சார்ந்த, மாநிலம் சார்ந்த தொழிற்கொள்கைகளை உருவாக்க முனைகிறோம்."

Also Read: மாறுங்கள் சீமான்... இல்லையேல் காணாமல் போவீர்கள்!

``தேர்தல் செலவுகளை எப்படிச் சமாளிக்கப்போகிறீர்கள்?"

``தேர்தல் ஆணையம் அனுமதிக்கக்கூடிய அளவுக்கான செலவுகளைச் செய்வோம். இதற்கான நிதி ஆதாரத்தை மக்களிடமிருந்தே பெறுவோம். அந்தத் தொகையை மக்களுக்கே செலவு செய்வோம். தேர்தல் ஆணையம் சொல்லக்கூடிய 28 லட்ச ரூபாய் என்பது எளிதில் வசூலிக்கக்கூடிய ஒன்றுதான். எனவே, செலவைக் குறைத்து பிரசாரம் செய்வோம்."

புதிய பார்வை அணி

களத்தில் உங்களுக்குப் போட்டியாளராக யார் இருக்கிறார்கள்?

``தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க ஆகியோர் போட்டியாளராக இருப்பார்கள். மற்றவர்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.’’



source https://www.vikatan.com/news/politics/new-political-party-explains-their-stand-in-assembly-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக