Ad

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

`அரசாணை நிறுத்திவைப்பு; மாணவர்கள் பள்ளி செல்வது குறித்து ஆலோசித்து முடிவு!' - முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில், பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. இந்தநிலையில், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் வரும் 1-ம் தேதி முதல் தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்காக பள்ளிகளுக்குச் செல்லலாம் என்று பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் அறிவித்தது.

பள்ளிக்கல்வித் துறை

அது தொடர்பான அரசாணை ஒன்றும் வெளியிடப்பட்டது. பள்ளி செல்லும் மாணவர்கள், தங்களது பெற்றோர்களிடம் அனுமதி பெற்று, அதற்கான கடிதத்தையும் எடுத்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், ஆசிரியர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பள்ளிக்குச் செல்லலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

Also Read: `பள்ளி திறப்பு, பாடங்கள் குறைப்பு, ப்ளூ பிரிண்ட் எங்கே?' - பள்ளிக் கல்வித்துறைக்கு சில கேள்விகள்

இந்தநிலையில், பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை நிறுத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, மருத்துவக்குழுவுடன் ஆலோசித்த பின்னரே முடிவெடுக்கப்படும்.

பள்ளி மாணவர்கள்

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிகளுக்குச் சென்று சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம் என்ற அரசாணை நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மருத்துவக்குழுவுடன் ஆலோசித்த பின்னர் முடிவெடுக்கப்படும்'' என்றார்.

மேலும் அவர் பேசுகையில், ``தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக 7,800 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. கொரோனா சிகிச்சை மையங்களில் உரிய வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்'' என்றும் அறிவுறுத்தினார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/tn-cm-eps-speaks-about-various-issues-in-district-collectors-meeting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக