Ad

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

`4 ஐ.டி விங்' திமுக., `நோ சமாதானம்' சீமான், காயத்ரி ரகுராம் `கலகம்'... டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்!

ஊர் ஊராகச் சென்று கொரோனா தடுப்பு உள்ளிட்ட ஆய்வுக்கூட்டங்களை நடத்திவருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. முதல்வரின் சொந்த ஊரான எடப்பாடியில் அரசு தாலுகா மருத்துவமனையை, மாவட்ட மருத்துவமனை ரேஞ்சுக்கு கம்பீரமாக கட்டியிருக்கிறார்கள். ஆனால், மாலை மங்கினால் ஆளில்லாத பேய் பங்களாபோல வெறிச்சோடிவிடுகிறது அந்த மருத்துவமனை வளாகம். டாக்டர் தொடங்கி அட்டெண்டர், வாட்ச்மேன் வரை மாலைக்கு மேல் யாரும் பணியிலிருப்பதில்லை.

கொரோனா நோயாளிகள் வந்தாலும் சரி... விபத்தில் சிக்கியவர்கள் உயிருக்கு ஆபத்தான சூழலில் கொண்டுவரப்பட்டாலும் சரி... கவனிக்க ஆளில்லை. `ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் முதல்வர், சொந்த ஊரைக் கைவிட்டது ஏனோ...’ என்று புலம்புகிறார்கள் எடப்பாடிவாசிகள்.

பேருதான் பெத்தபேரு... தாக நீலு லேது கதையா இல்ல இருக்கு!

சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், `கொரோனா காலத்திலும் காசநோய் கட்டுப்பாடு அதிகாரிகள் மற்றும் களப் பணியாளர்கள் காசநோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சையளிக்கின்றனர்’ என்று பாராட்டியிருந்தார். இதற்கு காசநோய் கட்டுப்பாடுதுறையில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர்கள் பலரும், ``இருபது வருடங்களாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்கிறோம்.

மத்திய அரசு நிர்ணயம் செய்திருக்கும் ஊதியத்தை வழங்கவும் போராடிவருகிறோம். எதுவும் நடக்கவில்லை... ஏன், பணியின்போது விபத்தில் இறந்த 15 பேரின் குடும்பத்துக்கு ஒரு ரூபாய்கூட நிதி தரவில்லை. எங்களுக்கு பாராட்டு மட்டும் போதாது அமைச்சரே!’’ என்று கமென்ட் செய்திருந்தனர். இப்போது கமென்ட்டை நீக்கினால் அதுவும் சர்ச்சையாகிவிடும் என்பதால் `தேள்’ கடித்தாலும் வலிக்காத மாதிரி அமைதியாக இருக்கிறாராம் விஜயபாஸ்கர்.

பாசம் காட்டி மோசம் செய்யாதீர்கள் அமைச்சரே!

மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி போலீஸ் எஸ்.ஐ விவேக் ரவிராஜ் என்பவர் ஏமாற்றிவிட்டார். விவகாரம் கருக்கலைப்பு வரை சென்றிருக்கிறது. அமைச்சர் ஒருவரின் ஆதரவு இருப்பதால், பாதிக்கப்பட்ட பெண் பலமுறை காவல்நிலையத்தில் புகாரளித்தும் கண்டுகொள்ளவில்லை. இறுதியாக, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார் அந்தப் பெண். அதன் பிறகே எஸ்.ஐ மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

வழக்கும் பதியப்பட்டது. இந்தநிலையில், சஸ்பெண்ட் உத்தரவை ரத்துசெய்து மீண்டும் பணியில் சேர்க்கும்படி மாவட்ட போலீஸ் தலைமைக்கு அமைச்சர் தரப்பிலிருந்து நெருக்கடி தரப்படுகிறதாம். ``நீதிமன்ற உத்தரவை நாங்கள் எப்படி மீற முடியும்?” என்று புலம்புகிறார்கள் காவல்துறை உயரதிகாரிகள்.

அரசியல்வாதிகள் சொல்வதற்கெல்லாம் `ஓயெஸ்... ஓயெஸ்’ என்று தலையாட்டினால் இந்தக் கதிதான்!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்திருந்தபோது, தி.மு.கழக எம்.எல்.ஏ ஒருவர் முதல்வரைச் சந்தித்து ஏகத்தும் பவ்யம் காட்டியிருக்கிறார். அன்றிலிருந்து கட்சிக்காரர்கள், தொகுதியின் முக்கிய பிரமுகர்கள் இவரிடம் எதற்காவது வந்தால் அவராகவே வாலான்டியராக, ``ஆமா, சி.எம்தான் எனக்கு போன் பண்ணி வரச் சொன்னாரு... கொஞ்ச நேரத்துக்கு முன்னாலகூட அவர்கிட்ட பேசிட்டுத்தான் இருந்தேன். என்ன உதவின்னாலும் கேட்கச் சொன்னாரு...’’ என்று ஏகத்துக்கும் அள்ளிவிடுகிறாராம். ஆளுங்கட்சியுடன் கூட்டணி போட்டுக்கொண்டு இவர் அடிக்கும் கூத்துகளை அறிவாலயத்துக்குப் புகாராகத் தட்டிவிட தயாராகிறது இவரது எதிர்த்தரப்பு.

போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரமாச்சே!

ஓராண்டுக்கு முன்னர் அ.ம.மு.க-விலிருந்து மனம் நொந்து தி.மு.க-வில் தஞ்சமடைந்தார் தேனி மாவட்டத்துக்காரரான தங்க தமிழ்ச்செல்வன். பெரும் எதிர்பார்ப்புடன் வந்தவருக்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் பெரிதாக ஒத்துழைப்பு தரவில்லை; கட்சி நிகழ்வுகளுக்குக்கூட அழைக்காமல் ஒதுக்கியே வைத்திருந்தனர்.

தங்க தமிழ்ச்செல்வன், ஸ்டாலின்

இந்தநிலையில்தான் திடீர் வாய்ப்பாக சமீபத்தில் தங்கத்துடன் காணொளியில் பேசியிருக்கிறார் தி.மு.க தலைவர். இதுதான் வாய்ப்பு என்று தேனி மாவட்ட நிர்வாகிகள் இடையே இருக்கும் கோஷ்டிப் பூசலை பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தாராம் தங்கம். ``இதையெல்லாம் ஏன் முன்கூட்டியே என் கவனத்துக்கு கொண்டுவரலை” என்று கேட்ட ஸ்டாலின், விரைவில் ஆக்‌ஷன் எடுப்பதாகவும் உறுதியளித்திருக்கிறாராம்.

தங்கம் செய்த பங்கம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதில் பெயர் கிடைத்திருக்கிறதோ, இல்லையோ... அரியர்ஸை ஆல் கிளியர் செய்ததில் கல்லூரி மாணவர்களிடம் பெயர் வாங்கிவிட்டார். சமூக வலைதளங்களிலும் இது பெரிய அளவில் எதிரொலித்தது. இதற்கிடையே, செப்டம்பர் 7-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வுசெய்வதற்காக எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து கிளம்பினார்.

போரூர் மேம்பாலம் பகுதியில் முதல்வரின் கார் சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று, ``அரியர்ஸ் அரசனே... மாணவர்களின் காவலனே!’’ என்று மாணவர்கள் கூடி கோஷமிட்டிருக்கிறார்கள். அதைக் கேட்டு புளகாங்கிதம் அடைந்த எடப்பாடி, சில நொடிகள் காரின் வேகத்தைக் குறைக்கச் சொல்லி கண்ணாடியையும் இறக்கிவிட்டு, மாணவர்களை நோக்கி கையசைத்தபடியே கடந்து சென்றாராம்.

தனக்குக் கிடைக்காத பாக்கியத்தை தன் மாணவர்களுக்கு கொடுத்திருப்பாரோ எடப்பாடி!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவனைக் கடுமையாக விமர்சித்து ட்வீட் வெளியிட்டது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியவர் நடிகை காயத்ரி ரகுராம். சமீபத்தில் இவர் தமிழக பா.ஜ.க-வின் கலை, கலாசாரப் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். பதவியேற்ற கையோடு பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணமும் செய்துவருகிறார் அம்மணி.

காயத்ரி ரகுராம்

ஏற்கெனவே கலை, கலாசாரப் பிரிவில் இயக்குநர் பேரரசு, அழகன் தமிழ்மணி, பெப்சி சிவா, பாபு கணேஷ் உள்ளிட்ட சீனியர்கள் இருக்கிறார்கள். ``கொரோனா நேரத்தில் சுற்றுப்பயணம் எதுவும் வேண்டாம்; பிறகு ஒன்றாகச் சேர்ந்து செல்லலாம்’’ என்று சீனியர்கள் தரப்பில் காயத்ரிக்கு அட்வைஸ் சொல்லப்பட்டதாம். ஆனால், அவர்களை மதிக்காமல் தனி ரூட்டில் பயணிக்கிறாராம் காயத்ரி. விரைவில் கமலாலயத்தில் கலகம் வெடிக்கலாம் என்கிறார்கள்.

சீனியர்களைக் காயப்படுத்தலாமா காயத்ரி!

வட மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர் அவர். சமீபத்தில்தான் கட்சியில் அவரது நீண்டநாள் கனவு ஈடேறியது. இந்தநிலையில் அவர் தன் வாரிசு பெயரில் கட்டுமான நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். சில நாள்களுக்கு முன்னர்தான் ஆளுங்கட்சியின் ஆதரவுடன், ‘முதல்நிலை ஒப்பந்ததாரர்’ என்கிற தகுதிச் சான்றிதழும் அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாம்.

Also Read: பன்னீரின் வைட்டமின் கண்டிஷன்... துரைமுருகனின் 2 கப் சந்தோஷம்! - கழுகார் அப்டேட்ஸ்

“ஸ்மார்ட் சிட்டியில் நடைபெறும் ஒப்பந்தப் பணிகளை வசப்படுத்திக்கொள்ளவே ஆளுந்தரப்புடன் கைகோத்துவிட்டார்” என்று அறிவாலயத்துக்குப் புகாரை தட்டிவிட்டிருக்கிறார்கள் உடன்பிறப்புகள். கட்சியில் பெரிய அளவில் அங்கீகாரம் கொடுத்த கையோடு அவரைத் தொட்டால், அது கட்சியின் பெயரையும் சேர்த்து டேமேஜ் செய்துவிடும் என்பதால் கையைப் பிசைகிறதாம் கட்சித் தலைமை.

மாற்றான் தோட்டத்து கரன்ஸி கமகமக்காமல் போகுமா!

சமூக வலைதளங்களில் தி.மு.க-வுக்காக டிஜிட்டல் களமாட ஐடி விங், ஐபேக் அணி என ஏற்கெனவே இரண்டு குழுக்கள் இருக்கின்றன. இந்த குழுக்களுமே எதிரும் புதிருமாக மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் நிலையில், கட்சித் தலைவரின் மகன் உதயநிதி சார்பில் ஒரு குழுவும், மருமகன் சபரீசன் சார்பில் ஒரு குழுவும் என இரு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

M.K. Stalin

இரு அணிகள் இருந்தபோதே ஏகத்துக்கு முறைத்துக்கொண்டவர்கள் இப்போது நான்கு அணிகளாக பிரிந்து செயல்படுவது கண்டு சீனியர் நிர்வாகிகளே மிரள்கிறார்களாம். கட்சித் தலைமையில் கேட்டால், ``என் பேச்சை யாரு கேட்குறா... மகனுக்கு ஒண்ணு, மருமகனுக்கு ஒண்ணு இருக்கட்டும்னு விட்டுட்டேன்” என்று சலிப்பாக பதில் வருகிறதாம்.

தேர்தல் வருவதற்குள் `பேரனுக்கு ஒண்ணு... பேத்திக்கு ஒண்ணு’ என்று தொடங்காமல் இருந்தால் சரி!

திருச்சி மாநகர், மாவட்டச் செயலாளரான சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சமீபத்தில் பகுதிச் செயலாளர்களாக எட்டுப் பேரை நியமித்தார். இதில், பாலகரைப் பகுதிச் செயலாளராக இருந்த கலீல் ரகுமான் நீக்கப்பட்டு, சுரேஷ் குப்தா என்பவர் நியமிக்கப்பட்டார். ``திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி-யுமான ப.குமாரின் ஆதரவாளர் என்பதாலேயே கலீல் ரகுமானை நீக்கியிருக்கிறார்கள்.

வரும் தேர்தலில் இதற்கு தக்க பதிலடி கொடுப்போம். இஸ்லாமியச் சமூகத்தின் ஓட்டுகள் அ.தி.மு.க-வுக்கு கிடையாது’’ என்று கொந்தளிக்கிறார்கள் கலீலின் ஆதரவாளர்கள். தொடர்ந்து அமைச்சரைக் கண்டித்து திருச்சியில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. இதற்கிடையே இவ்வளவு பிரச்னைக்கும் காரணம் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர்லால் நேருதான் என்று பொருமுகிறது குமார் தரப்பு.

மண்டி நிறைய வெல்லத்தை வெச்சிக்கிட்டு கட்சிக்காரனுக்கு கசப்பைத் தரலாமா நடராஜன் சார்?

ஜூ.வி ரியாக்‌ஷன்...

நாம் தமிழர் கட்சிக்குள் கல்யாண சுந்தரம், ராஜீவ் காந்தி ஆகிய இரு மூத்த நிர்வாகிகள் புறக்கணிப்படுவதையும், சீமானுக்கும் அவர்களுக்கும் விரிசல் ஏற்பட்டிருப்பதையும் கடந்த 9.9.2020 தேதியிட்ட ஜூ.வி இதழின் `மிஸ்டர் கழுகார்’ பகுதியில் எழுதியிருந்தோம். இந்தத் தகவல் நாம் தமிழர் தம்பிகளுக்குள் பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது.

சீமான்

செப்டம்பர் 6-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், கல்யாண சுந்தரத்திடமும் ராஜீவ் காந்தியிடமும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். ஒருபக்கம் சமாதானப்படலம் நடந்துவந்தாலும்... இன்னொரு பக்கம், சீமான் அவர்கள் இருவரையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லையாம். விரைவில் கட்சி கலகலக்கும் என்று வருத்தப்படுகிறார்கள் பாசமிகு தம்பிகள்!

ஆன்லைன் கல்வி முறையால் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகிவருவது குறித்து 9.9.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில் ‘ஐந்து வகைக் குழந்தைகள்... ஆன்லைன் கல்வி அவலம்’ என்ற தலைப்பில் கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.

Also Read: ‘ஐந்து வகைக் குழந்தைகள்’ - ஆன்லைன் கல்வி அவலம்!

கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து தமிழக கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் அவசர உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறார். அதில், `ஆன்லைன் கல்வி கட்டாயம் இல்லை; பள்ளி மாணவர்களை அதற்காக நிர்பந்திக்கக் கூடாது’ என்று தெரிவித்திருக்கிறார். மேலும், ஆன்லைன் கல்வி அமர்வில் பங்கு பெறாத மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/news/politics/dmks-4-it-wing-seeman-party-issues-mr-kazhugar-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக