Ad

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

சிவகங்கை: காளையார் கோயிலில் கிடைத்த `பாடல் கல்வெட்டு'... சொல்லும் வரலாறு என்ன?

சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பல இடங்களில் தொல்லியல் எச்சங்கள் கிடைத்து வருகின்றன. விவசாயம் சார்ந்த கல்வெட்டுக்களை கூட தொல்நடை அமைப்பு கண்டறிந்துள்ளது. கீழடியைப் போலவே சிவகங்கை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான தொல்லியல் சார்ந்த இடங்கள் உள்ளன. ஆனால் அவை வெளிப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த புதிய பாடல் கல்வெட்டு ஒன்று காளையார் கோயில் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கீழடி - அகரம்

இந்த் கல்வெட்டு கானப்பேரெயில் தொல்லியல் குழுமத்தை சேர்ந்த ஜெமினி ரமேஷ், விக்னேஷ்வரன் மற்றும் சரவண மணியன் ஆகியோர் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

கானப்பேரெயில் தொல்லியில் குழுவினர், "சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோயில் பல்வேறு வரலாறுகளைத் தாங்கி இருக்கிறது. காளையார்கோயிலை சுற்றி முதுமக்கள் தாழிகள், கல்வெட்டுகள், பண்டைய கால மனிதன் பயன்படுத்திய பொருள்கள், வணிகம் செய்ததற்கான சான்றுகள் எனப் பலவும் கிடைத்துள்ளன.

பாடல் கல்வெட்டு

இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட காளையார்கோவில் பாண்டிய நாட்டின் பழம்பெரும் ஊர்களில் ஒன்றாக விளங்கியுள்ளது. சங்க காலத்திலேயே கானப்பேரெயில், தலையிலங்கானம் என்று அழைக்கப்பட்ட இப்பகுதி தொடர்ந்து வந்த வரலாற்று காலத்தில் திருக்கானப்பேர், கானை என்றும் அழைத்துள்ளனர். இதனை தேவாரப் பாடல்களின் வாயிலாக உறுதிப்படுத்தமுடியும்.

இதற்கான பல்வேறு இலக்கியச் சான்றுகள் இருப்பினும் தற்போது மேட்டுபட்டி செல்லும் சாலையில் உள்ள பிள்ளையார் கோயில் பக்கத்தில் கிடைத்துள்ள கல்வெட்டு அதை மேலும் உறுதி செய்துள்ளது. அதில் இருக்கும் சிறப்புமிக்க செய்யுள் அமைப்புள்ள பாடல் ஒன்று இந்தக் கூற்றினை மெய்ப்பிக்கும் வகையில் 'கானப்பேர்' என ஊரின் பெயரையும் குறிப்பிடுகிறது. பாண்டிய நாட்டில் பாடல் கல்வெட்டுகள் மதுரை, இருக்கன்குடி, சித்தன்னவாசல், ஏர்வாடி போன்ற பகுதிகளில் மிக அரிதாகவே கிடைக்கப்பெற்றுள்ளன. பொதுவாக 4 வரி உடைய பாடல்களே இவற்றில் இடம்பெறும். இப்பாடல் இதுவரை எந்தத் திருமுறைகளிலும் பதிவு செய்யப்படாத 3 வரிகளையுடைய தனிப்பாடலாக அமைந்துள்ளது. இருப்பினும் 4 வரியில்லாததால் முழுமையடையவில்லை.

கல்வெட்டு

பாடலின் விளக்கம், "அருந்தவம் புரியும் முனிவர்களுக்காக சிவபெருமானே கானப்பேரில் உள்ள சுவர்ண காளிஸ்வரர் திருத்தலத்தில் கல்லால மரத்தின் கீழே அமர்ந்து அறங்களை மொழிவதாகக் கூறப்பட்டுள்ளார். இப்பாடலை எழுதியவர் யார் என்பதை அறியமுடியவில்லை. எனினும் கல்வெட்டின் எழுத்தமைதியை கொண்டு 13-ம் நூற்றாண்டின் இறுதியாக இருக்கும் என கருதப்படுகிறது" என்றனர்.

சிறப்பு வாய்ந்த, 'பாடல் கல்வெட்டு' காளையார் கோயிலில் கிடைத்திருப்பது ஊர்மக்கள் மத்தியிலும் தொல்லியல் வட்டாரங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


source https://www.vikatan.com/government-and-politics/archaeology/13th-century-inscription-found-near-sivagangai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக