Ad

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

முப்போக சாவடி வாங்கிய ஐதராபாத்... கொல்கத்தாவுக்காக சொல்லி அடித்த `கில்'லு! #KKRvSRH

கொல்கத்தா அணியைப் பற்றி யோசித்தாலே, இடியாப்பத்தை கொசகொசவென பிசைந்து கையில் கொடுத்தாற்போல் குழப்பமாகவே இருக்கும். எல்லா மேட்சுக்கும் எல்லா பயிற்சிகளையும் முடித்துவிட்டு களத்துக்குள் கமாண்டோவாக குதிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், `இந்த திரியைக் கிள்ளிப் போட்டு பத்து வரைக்கும் எண்ணினா பஷ்பம் ஆகிடுவீங்க' என கெத்து காட்ட தவறியதே இல்லை. பதிலாக, டைமிங்தான் பலமுறை தவறிப்போய் ரத்தக் காவு வாங்கியிருக்கிறது. இப்படி எல்லா நாளும் திரியைக் கிள்ளி விட்டு திரிசங்கு நிலையிலேயே ரசிகர்களை வைத்திருக்கும் கொல்கத்தா அணி, ஐதராபாத் அணியுடன் நேற்று அபுதாபியில் மோதியது. போனமுறை டாஸ் ஜெயித்தது மட்டுமல்லாது, பௌலிங்கையும் தேர்ந்தெடுத்து, தனக்குதானே பேட்டை உடைத்து ஆப்பு சீவிக்கொண்ட கொல்கத்தா, இம்முறை உஷாராகவே இருந்தது. முந்தைய மேட்சில் ஆர்.சி.பியிடம் முதுகில் குத்துவாங்கிய ஐதராபாத், மூவ் தடவிக்கொண்டு ரெடியானாது! 

#KKRvSRH

ஆரம்பத்திலேயே பரிதாபகரமாக டாஸை வென்றுவிட்ட ஐதராபாத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியில் நிகில் மற்றும் சந்தீப்புக்கு பதிலாக நாகர்கோட்டி மற்றும் வருண் சக்கரவர்த்தி களமிறங்கினர். ஐதராபாத் அணியில் விஜய் சங்கருக்கு பதிலாக சாஹா, சந்தீப் சர்மாவுக்கு பதிலாக கலீல் அகமது, மார்ஷுக்கு பதிலாக நபி ஆகியோர் அணியில் இணைந்தனர்.

`என்னைய வெச்சே டெஸ்ட் பண்ணுங்கடா' என முதல் ஓவரை வீசவந்தார் சுனில் நரைன். `பாயும் புலி' வார்னரும், `பதுங்கும் நாகம்' பேர்ஸ்டோவும் ஐதராபாத் இன்னிங்ஸை ஓபன் செய்தனர். முதல் ஓவரில் சிங்கிள்ஸ், டபுள்ஸாக 6 ரன்கள். அடுத்ததாக 27.67 லட்ச மதிப்பிலான ஓவரை வீசவந்தார் கம்மின்ஸ். வெறும் 2 ரன்கள் மட்டுமே! `டிக் டாக்ல மாத்ரம்தான் நூவு ஆடுறே, மேட்ச்ல ஆடமாட்டாவா' என அக்கட தேசத்திலிருந்து அலறல் சத்தம் கேட்க துவங்க, நரைன் பந்தில் வைடு லாங்-ஆனில் ஒரு சிக்ஸரும், டீப் மிட் விக்கெட்டில் ஒரு பவுண்டரியும் விரட்டினார் வார்னர். 4வது ஓவரை வீசவந்த கம்மின்ஸ், அந்த ஓவருக்கான 27.67 லட்ச ரூபாயை பேர்ஸ்டோவின் விக்கெட்டைக் கழற்றி கழித்துவிட்டுப்போனார். க்ளீன் பவுல்ட்!

#KKRvSRH

5வது ஓவர் வீசவந்தார் வைலட் ரேஞ்சர் சிவம் மாவி. அந்த ஓவரில், மிட் விக்கெட் பக்கம் அருமையான சிக்ஸர் ஒன்றை விளாசினார் மனீஷ் பாண்டே. காண கண்கொள்ளாத கச்சிதமான புல் ஷாட்! கம்மின்ஸ் வீசிய 6 வது ஓவரில், டீப் ஸ்கொயர் பக்கம் ஒரு பவுண்டரி கிடைத்தது வார்னருக்கு. பவர் ப்ளேயின் முடிவில் 40/1 என்கிற நிலையில் ஐதராபாத். அடுத்த நான்கு ஓவர்களும், ஐதராபாத் அணியை அண்டாவில் போட்டு பிரியாணி கிண்டின கொல்கத்தாவின் சுழற் கரண்டிகள். குல்தீப்பும் வருண் சக்கரவர்த்தியும், துல்லியமாக பந்து வீசியதில், ரன்களுக்கு கடுமையாக ஓடவேண்டியிருந்தது சன்ரைஸர்ஸ் அணியினருக்கு. 10வது ஓவரில் வார்னர் கட்டிய பேஸ்மென்ட்டை இடித்து தள்ளினார் ஆர்கிடெக்ட் வருண். பந்தும் அவர்தான், கேட்சும் அவர்தான்!

அடுத்ததாக எல்லோரும் ஆவலுடன் எதிர்பாத்த, வருங்கால வேகம் நாகர்கோட்டி வந்தார். நன்றாகவே தன் டூட்டியை செய்தார். அடுத்து 15வது ஓவர் வரை, இரண்டே இரண்டு பவுண்டரிகள்தாம் பறந்தன. மனிஷ் பாண்டே ஒருபக்கம் ரன்களை மும்முரமாக சேகரித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் செவனேனு இருந்த சஹாவைத் தூக்கி லாக் பண்ணி டாட் பந்துகளாக சேகரிக்கத் துவங்கினார்கள் கே.கே.ஆர்கள். அடுத்த 5 ஓவர்களிலும், ஓவருக்கு ஒரு பவுண்டரியோ/சிக்ஸரோ மட்டும் கிடைத்தது. ரஸல் வீசிய 18வது ஓவரில், தன் இடுப்புக்கு வந்த பந்தை தடுப்பாட்டம் ஆடுகிறேன் என எடுப்பாக கேட்ச் கொடுத்து, ஐதராபாத் ரசிகர்களின் கடுப்பைக் கிளப்பினார் பாண்டே. வீணாக்கிய டாட் பந்துகளை எல்லாம் அவ்வப்போது விரட்டிய பவுண்டரிகளை வைத்து டேலி செய்து, LHS  = RHS என 30 ரன்னில் இன்னிங்ஸை முடித்துக்கொண்டார் சாஹா. 20 ஓவர் முடிவில் வெறும் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது ஐதராபாத்.

#KKRvSRH
முதல் பேட்டிங்கில் முப்போக சாவடி வாங்குவது எப்படின்னு இந்த இன்னிங்ஸில் இருந்து தெரிஞ்சுக்க போறோம். பத்து பந்துகளுக்கு ஒரு பவுண்டரி வீதம் இன்னிங்ஸுக்கு 12 பவுண்டரி மட்டுமே அடிச்சு, மணிச்சத்து, சாம்பல் சத்து, இரும்புச்சத்துனு எந்த சத்தையும் உபயோகிக்காம சொத் சொத்னு பந்த அடிச்சு, ஹிட் ஆடுற மனநிலையை தெற்கும் வடக்குமா அடுக்கிட்டு, டாட் பந்து கரைசலை இரண்டுக்கு ஒண்ணுங்கிற அளவுல கலந்துவிட்டு அடிச்சா... முப்போகம் சாவடி வாங்கலாம்!

`என்னைய வெச்சே டெஸ்ட் பண்ணுங்கடா' என மீண்டும் நொந்துக்கொண்டு, சுப்மான் கில்லுடன் ஓபனிங் இறங்கினார் நரைன். `இந்த இரு வாயில்லா பூச்சிகளும் என்ன செய்ய காத்திருக்கிறதோ, எதற்கும் பூச்சிமருந்தை தயாராக வைத்துக்கொள்வோம்' என புவியை அனுப்பிவைத்தார் வார்னர். ஓவரின் 4வது பந்தை, ஸ்கொயர் லெக்கிற்கு மேல் தூக்கிவிட்டார் கில். ஒரு பவுண்டரி உட்பட 6 ரன்கள் கிடைத்தன. அடுத்த ஓவர் வீசவந்த கலீல் அகமது, 2வது பந்திலேயே நரைன் விக்கெட்டைக் கழற்றினார். நரைன் விக்கெட் கழன்றதில், ஆக்ரோஷமாக அலறினார் வார்னர். `இங்க பாரு, நீ அடிச்சது வாயில்லா பூச்சி கூட இல்ல. வெறும் புள்ளப்பூச்சிய' என அமைதியாக கடந்துப்போனார். நரைன் அவுட்டான சோகம் கொஞ்சமும் இல்லாமல், அதே ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார் கில்! கில்நெஞ்சுக்காரர்...

#KKRvSRH

ஒன்-டவுனில் இறங்கிய ரானா, `அழுதுருவேன்... வேணா' என சன்ரைஸர்கள் கதறும் அளவிற்கு அடித்து நொறுக்கினார். புவி வீசிய 3வது ஓவரில் அமுக்கு, டுமுக்குனு இரண்டு பவுண்டரிகள். கலீல் வீசிய 4வது ஓவரில் அமால் டுமால்னு ஹாட்ரிக் பவுண்டரிகள் என மாஸ் காட்டினார். சரவெடியாய் வெடித்துவிட்டு, நடராஜன் வீசிய 5வது ஓவரில் கேட்ச் கொடுத்து கிளம்பினார் ரானா. மீண்டும் மேட்ச் மந்தநிலைக்கு மாறியது. கொல்கத்தா ஆடிய போன மேட்ச், கண் முன்னால் வந்துப்போனது. அபுதாபியில் திரியும் ஒட்டகங்களே கொட்டாவி விடும் அளவுக்கு உருட்டத் தொடங்கினார்கள். கேப்டன் கார்த்திக்கும் எப்படி ஒரு ரன் கூட களத்திற்குள் கொண்டுவராமல் இறங்கினாரோ, அப்படியே வெளியேறினார். எதை நீங்கள் கொண்டுவந்தீர்கள் இழப்பதற்கு! எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. அடுத்து மார்கன் வருவார். அதுவும் நன்றாகவே நடக்கும் என எல்லோருமே குஷியானார்கள்.

Also Read: நினைவில் கொள்ளுங்கள் தோனி & சிஎஸ்கே... நாம் போராட வேண்டியது எதிர் டீமுடன்! #CSKvDC

#KKRvSRH

சுப்மான் கில்லோ, `கவர் ஏரியா, ஸ்கொயர் ஏரியா, பாயின்ட் ஏரியா, பவர் ஏரியா, ஆல் ஏரியாலயும் ஐயா கில்லுடா' என சுத்தி சுத்தி அடித்து, 62 பந்துகளுக்கு 70 ரன்கள் குவித்தார். `தம்பி, டைம் ஆச்சுல... வா போலாம்' என 29 பந்துகளுக்கு 42 ரன்களை விளாசி வின்னிங் பவுண்டரியோடு மேட்சை முடித்தார் மார்கன். 7 விக்கெட் வித்தியாசத்தில் மேட்ச் வென்றது கொல்கத்தா. `35-40 டாட் பந்துகளை எல்லாம் ஏத்துக்கவே முடியாது ப்ரோ. இன்னும் 30-40 ரன்கள் அதிகமா அடிச்சுருந்தா நாங்க ஜெயிச்சுருந்தாலும் ஜெயிச்சுருப்போம் தெரியுமா?' என்றார் வார்னர். `நம்ம டீம்ல நிறைய சின்ன பசங்க இருக்காங்க. அவங்களை டியூன் பண்றதே ஜாலியா இருக்கு. ஆல்ரவுண்டர்களுக்கும் வெற்றியில் முக்கிய பங்கிருக்கு. ரொம்ப பெருமையா இருக்கு' என்றார் கார்த்திக்.

ஆட்டநாயகன் விருது பெற்றார் சுப்மான் கில்!



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-kolkata-knight-riders-vs-sunrisers-hyderabad-match-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக