Ad

புதன், 30 செப்டம்பர், 2020

சென்னை: `இந்தளவுக்கு சம்பாதிக்க முடியாது!' - போலி கால்சென்டர் மன்னன் சிக்கிய பின்னணி

கோவை, கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், குறைந்த வட்டியில் ஃபைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கித் தருகிறோம் என பெண் ஒருவர், என்னுடைய செல்போன் நம்பருக்குப் பேசினார். அவரைத் தொடர்ந்து 2 ஆண்கள் செல்போனில் என்னிடம் பேசினர். 8 லட்சம் ரூபாய் கடனுக்கு 13,59,500 ரூபாய் சேவைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று கூறினர். பின்னர் அவர்கள் கொடுத்த வங்கி கணக்கில் 5 தவணைகளாக அந்தப் பணத்தைச் செலுத்தினேன். ஆனால், கடன் பெற்றுத் தராமல் என்னை ஏமாற்றி வருகின்றனர். இதுகுறித்து அவர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டால் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகத் தகவல் வருகிறது. எனவே, என்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

போலி கால் சென்டர் வழக்கில் கைதானவர்கள்

இந்தப் புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி மேற்பார்வையில் கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சரவணக்குமார் ஆலோசனையின் பேரில் உதவி கமிஷனர் பிரபாகரன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் சென்னை அம்பத்தூர் அருகே உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் போலி கால் சென்டர் நடத்தப்படுவதாகத் தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் தலைமையிலான கூட்டாளிகள்தான் புகார் கொடுத்த செல்வராஜ் உள்பட சிலரை ஏமாற்றியது தெரியவந்தது.

Also Read: `பெண்ணின் காந்தக் குரல்; கால் சென்டர் ஹைடெக் மோசடி!' - வி.சி.க பிரமுகரால் சிக்கிய பென்ஸ் சரவணன்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகம் முழுவதும் போலி கால் சென்டர்களைக் கோபி கிருஷ்ணன் நடத்தி பலரை ஏமாற்றி பணத்தைப் பறித்தார். பின்னர், அவரின் கூட்டாளிகளை போலீஸார் கைது செய்தவுடன் இலங்கைக்குத் தப்பி ஓடிவிட்டார். தீவிர தேடுதல் வேட்டையால் கோபிகிருஷ்ணனை போலீஸார் சென்னை விமான நிலையத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டமும் பதிவு செய்யப்பட்டது. சிறையிலிருந்து வெளியில் வந்த கோபி என்கிற கோபி கிருஷ்ணனும் அவரின் கூட்டாளிகளான வளர்மதி ஆகிய இருவரும் சேர்ந்து மீண்டும் திருமுல்லைவாயல் பகுதியில் பலரை வேலைக்கு அமர்த்தி கால் சென்டர் நடத்தி வந்துள்ளனர். இதையடுத்து கோபிகிருஷ்ணன், வளர்மதி அவரின் கணவர் அந்தோணி, விஜயகுமார், பௌத்தரசன், அரவிந்த், ரிஷித், கார்த்திக், விஜய், சாம்சுந்தர், ஜியோ வில்சன், லோகநாதன் ஆகிய 12 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வளர்மதி

இதுகுறித்து மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``சென்னையில் போலி கால்சென்டர்களை நடத்தி பலரை ஏமாற்றிய வழக்கில் சென்னை ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த கோபிகிருஷ்ணனை சில ஆண்டுகளுக்கு முன் கைது செய்தோம். சிறையிலிருந்து வெளியில் வந்த அவர், மீண்டும் தன்னுடைய கூட்டாளியான வளர்மதியுடன் சேர்ந்து திருமுல்லைவாயலில் போலி கால் சென்டரை நடத்தி பலரிடம் பணத்தை ஏமாற்றியுள்ளார். அதுகுறித்த புகாரின் பேரில் கோபிகிருஷ்ணன் உள்பட அவரின் கூட்டாளிகள் 12 பேரைக் கைது செய்துள்ளோம்.

கோபிகிருஷ்ணனின் கூட்டாளிகளான அ.தி.மு.கவைச் சேர்ந்த பென்ஸ் சரவணன், வி.சி.க பிரமுகர் செல்வா என்கிற செல்வக்குமார் ஆகியோரை ஏற்கெனவே கைது செய்துள்ளோம். கடந்தமுறை கோபிகிருஷ்ணனிடமிருந்து விலை உயர்ந்த சொகுசுக் கார்களையும் ஏடிஎம் கார்டுகள், டெபிட் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம். ஆனால், இந்தத் தடவை கால் சென்டர் தொடங்கிய சில மாதங்களிலேயே அவர் சிக்கிக் கொண்டார். இருப்பினும் அவர் எத்தனை பேரை ஏமாற்றினார் என்று விசாரித்துவருகிறோம்'' என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``போலி கால் சென்டர்களின் மாஸ்டர் மைண்ட் கோபிகிருஷ்ணன். சிறையிலிருந்து வெளியில் வந்த கோபிகிருஷ்ணனுக்கு பணத்தேவை ஏற்பட்டுள்ளது. வேறு தொழில் செய்தால் இந்தளவுக்குச் சம்பாதிக்க முடியாது என்பதால் மீண்டும் போலி கால் சென்டரைத் தொடங்கியுள்ளார். சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கோபிகிருஷ்ணனின் கூட்டாளிகள் போலி கால் சென்டர்கள் நடத்தி வந்தனர். அவர்களையும் கைது செய்துள்ளோம்.

போலி கால் சென்டர் நடந்த பென்ஸ் கிளப்

எனவே, பொதுமக்கள் லோன் தேவை என்றால் வங்கிகளுக்கு நேரில் செல்லுங்கள். கால் சென்டரிலிருந்தோ, குறிப்பிட்ட நிதி நிறுவனங்களின் பெயரைச் சொல்லி போன் மூலமாகவே குறைந்த வட்டியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறுபவர்களை நம்பி, பணத்தை ஏமாற வேண்டாம். மேலும், ஓ.டி.பி எண்கள், வங்கி ஆவணங்கள், அடையாள அட்டைகளை அறிமுகம் இல்லாதவர்களுக்கு வாட்ஸ்அப்பிலோ, இ-மெயிலோ அனுப்ப வேண்டாம்" என்றார்.

``கொரோனா காலக்கட்டத்தில் எனக்கு பணம் தேவைப்பட்டது. அதனால்தான் போலி கால் சென்டரைத் தொடங்கினேன்'' என்று கூறியுள்ளார் கோபிகிருஷ்ணண்.

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் போல....



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-fake-call-center-master-mind

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக