Ad

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

கிழக்கு லடாக் பகுதி; மைனஸ் 40 டிகிரி! - எல்லையில் குளிர்காலத்துக்கு தயாராகும் இந்திய ராணுவம்

இந்தியா சீனா இடையே எல்லை பிரச்னை பல காலமாக நீடித்து வந்தாலும், கடந்த சில மாதங்களாக எல்லையில் அதிக பதற்றம் நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. ஒருபுறம் எல்லையில் பதற்றத்தை குறைக்க அதிகாரிகள் மட்டத்திலும், அமைச்சர்கள் மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் எல்லையில் கண்காணிப்பும் அதிகரித்துள்ளது. பேச்சுவார்த்தை நடக்கும் நேரத்திலும் சில இடங்களில் அத்துமீறல்களும் நடைபெற்றது.

கடந்த மே மாதம் தொடங்கி, 5 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் இந்த பதற்றமான சூழல் இன்னும் சில காலம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் லடாக் எல்லையின் பல பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. பங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகள் உள்ளிட்ட பகுதிகள் உச்சக்கட்ட பதற்றம் நிலவுவதாக சொல்லப்படுகிறது. எனவே அந்த பகுதிகளில் படைகளையும், முன்னெச்சரிக்கையாக ஆயுதங்களையும் சேமித்து, தன் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது இந்தியா.

Also Read: `லடாக் எல்லையில் பஞ்சாபிப் பாடல்களை ஒலிக்கவிடும் சீன ராணுவம்!’ - ஏன் தெரியுமா?

குளிர்காலம் தொடங்க உள்ள நிலையில் கிழக்கு லடாக் பகுதியில் எல்லை கோடு அருகே, இந்திய ராணுவம் தனது படைகள் மற்றும் டாங்குகளை வரிசைப்படித்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. டி-90 மற்றும் டி 72 டாங்குகள் உள்ளிட்ட சில ராணுவ பீரங்கிகளை வரிசை படுத்தும் இந்தியா, குளிர்கால காண்காணிப்புக்கு தயாராகி வருகிறது. குறிப்பிட்ட இந்த இடத்தில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். குளிர் காலத்தின் உச்சத்தில் இரவு நேரங்களில் மைனஸ் 30 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை சாதாரணமாகவே பதிவாகும். அதனுடன் அதிக வேகத்தில் காற்றும் வீசும். அதனால் இந்திய ராணுவம் மைனஸ் 40 டிகிரி வெப்பநிலையிலும் தன் பணியை செய்யும் காலாட்படை போர் வாகனங்களை வரிசை படுத்தும் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது.

கிழக்கு ல்டாக் பகுதியில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு உச்சகட்ட குளிர் நிலவும் என கணிக்கப்படுகிறது. மேஜர் ஜெனரல் அரவிந்த் கபூர், ``டாங்குகளையும் போர் வாகனங்களையும் இந்த பகுதியில் பராமரிப்பது மிகவும் கடுமையான சவால். லடாக்கில் குளிர்காலம் கடுமையாக இருக்கும். குளிர்காலத்துக்கான இருப்பைப் பொருத்தவரை அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதிக கலோரி மற்றும் சத்தான உணவு, எரிபொருள் மற்றும் எண்ணெய், குளிர்கால ஆடை மற்றும் வெப்பமூட்டும் உபகரணங்கள் என அனைத்தும் போதுமான எண்ணிக்கையில் இருக்கிறது” என்றார். குளிர் காலத்தில் படைகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பாகவும் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. எனினும் சீனா தன் படைகளை, அதிகரித்தால், இந்தியாவும் அதிகரிக்கும் சூழலே நிலவும் என்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/india/army-readies-troops-for-winter-deployment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக