Ad

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

#RCBvMI ஆம்ளே, பொம்ளே, அணில் கும்ப்ளே எல்லாம் வெறுத்துப்போய் இருக்கு சார்... ஜெயிச்சிடு கோலி சார்!

இந்த ஐபிஎல் தொடரை எட்டு எட்டாக பிரித்துப் பார்த்தால், `முதல் எட்டில் தூங்காதது தூக்கமும் அல்ல' என்பதுதான் நிலவரம். இப்போது, இரண்டாவது எட்டில்தான் தொடங்கியிருக்கிறது கலவரம். நேற்று களம் எட்டில் நடந்துமுடிந்த ஐபிஎல்-ன் 10வது போட்டியோ, ஒரே களேபரம். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் நேற்று துபாயில் மோதின. இந்திய அணியின் தகதக இரட்டைக்கிளவியான கோலியும் ரோஹித்தும் மோதிக்கொள்ளும் விறுவிறுப்பான போட்டியைக் காண நாடே பரபரப்பானது. டாஸ் ஜெயித்த ரோஹித் ஷர்மா, `நீங்க முன்னால போங்க, நாங்க பின்னாலேயே வாரோம்' என சேஸிங்கைத் தேர்ந்தெடுத்தார். ஆர்சிபி அணியில் ஹிப்பி ஸ்டெய்னுக்கு பதிலாக இலங்கையின் உடானாவும், `வேணாம் ஃபிலிப்ஸு' என முடிவெடுத்து ஃபிலிப்புக்கு பதிலாக ஸாம்பாவும், தானத்தில் சிறந்த தானம் ரன்தானம் என பந்து வீசும் உமேஷக்கு பதிலாக குர்கீரத் சிங்கும் அணியில் இணைந்தனர். செளரப் திவாரி, தகுதியான உடல்நிலையில் இல்லாததால் இஷான் கிஷன் உள்ளே வந்தார்.

#RCBvMI

படிக்கல்லும் ஃபின்ச்சும் பெங்களூரின் இன்னிங்ஸை ஓப்பன் செய்ய, முதல் ஓவரை வீசினார் மும்பையின் போல்ட். 2-வது பந்திலேயே ஸ்கொயர் லெக் திசையில் ஒரு பவுண்டரியை விளாசி, தான் ஆடப்போகும் இன்னிங்ஸுக்கு அடிக்கல் நாட்டினார் படிக்கல். அடுத்த ஓவரை வீசவந்தார் பேட்டின்சன். புயல் வேகத்தில் வீசிய ஓவரின் இரண்டாவது பந்து, ஃபின்ச்சின் மட்டையில் பட்டு இன்சைடு எட்ஜாகி மர்ம இடத்தைத் தாக்கியது. களத்துக்குள் நின்றிருந்த 15 பேரும் அந்த வலியை உணர்ந்தார்கள். உஷாரான ரோஹித் ஷர்மா, பாதுகாப்பு கருவியை மீண்டும் சரியாக எடுத்துப் பொருத்திக்கொண்டார். பந்து அடித்த அடியில் பரந்து விரிந்த இப்பிரபஞ்சமே சூனியமாக மாறி, கண்கள் இரண்டும் கலங்கி, தண்ணீர் எல்லாம் வாங்கிக் குடித்து மீண்டும் ஆட்டத்துக்கு ரெடியானார் ஃபின்ச். அடுத்தப் பந்தை அவர் பேட்டில் வாங்கியதும், மும்பை இந்தியன்ஸ் அணியினர் இந்த கம்பேக் கதையைக் கரகோஷங்கள் எழுப்பிப் பாராட்டினர். தெம்பாக, ஒரு பவுண்டரியும் விளாசினார்.

போல்ட் வீசிய 3-வது ஓவரில், நேர் திசையில் அட்டகாசமான ஒரு சிக்ஸர் அடித்தார் ஃபின்ச். செம ஸ்டைலிஷான ஷாட்! படிக்கல்லோ `இட்ஸ் மெடிக்கல் மிராக்கிள்' என ஃபின்ச்சை வியந்து பார்த்துக்கொண்டிருந்தார். பேட்டின்ஸன் வீசிய 4-வது ஓவரில், ஃபின்சுக்கு இன்னொரு பவுண்டரியும் கிடைத்தது. 5-வது ஓவர் வீசவந்தார் மும்பை அணியின் ஸ்னேக் பாபுவான ராகுல் சாஹர். ஸ்கொயர் லெக்கில் ஒரு பவுண்டரி, ஷார்ட் ஃபைன் திசையில் ஒரு பவுண்டரி, கடைசியாக கவர் திசையிலும் ஒரு பவுண்டரி என ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார் ஃபின்ச். `பாம்பு பாயாவுக்கு ஊத்துனாலும் சரி, பாயாசம் ஊத்துனாலும் சரி. பகை பகைதான்' என உக்கிரமாக கிளம்பினார் ராகுல் சாஹர். அடுத்து வந்தார் பூம் பூம் பும்ரா. அந்த ஓவரில் பவுண்டரியை விரட்டினார் படிக்கல். 6 ஓவர் முடிவில் 59/0 என வலுவான நிலையில் இருந்தது ஆர்.சி.பி!

#RCBvMI

க்ருணால் பாண்டியா வந்தார். ஃபின்ச்சுக்கு எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி தந்தார். மீண்டும் சாஹர் வந்தார். மீண்டும் ஃபின்ச்சுக்கு பேக்வேர்ட் ஸ்கொயரில் ஒரு பவுண்டரி தந்தார். அத்தோடு தன் அரை சதத்தையும் பதிவு செய்தார் ஃபின்ச். இதுவரை, 8 ஐ.பி.எல் அணிகளுக்காக விளையாடியிருக்கும் ஃபின்ச், அரை சதம் அடித்திருக்கும் 4-வது அணி ஆர்சிபி! போல்ட் வீசிய 9-வது ஓவரில், படிக்கல்லுக்கு ஒரு பவுண்டரியும், போல்ட்டுக்கு ஃபின்ச்சின் விக்கெட்டும் கிடைத்தது. பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்துவிட்டு 52 ரன்களோடு பெவிலியன் திரும்பினார் ஃபின்ச். அடுத்து கோலி வந்தார். ஆனால், பவுண்டரி மட்டும் அடுத்த நான்கு ஓவர்களுக்கு வரவே இல்லை. `இது உண்மையிலேயே கோலி தானா, இல்லை சீரியல் நடிகர் வெங்கட்டா?' என சந்தேகம் கொள்ளும் அளவிற்கு பந்தைத் தடவிக்கொண்டிருந்தார் கோலி. 11 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து, ஷர்மா கி பேட்டா ரோஹித்திடம் லட்டு கேட்சைக் கொடுத்து அணிக்கு அல்வா கொடுத்தார்.

அடுத்து களமிறங்கிய டி வில்லியர்ஸும் படிக்கல்லும் சேர்ந்து அடுத்த நான்கு ஒவர்களை வெளுத்து வாங்கினர். பேட்டின்ஸன் வீசிய 14-வது ஓவரில் மிட் ஆஃபில் ஒரு சிக்ஸர், லாங் ஆனில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் படிக்கல். க்ருணால் வீசிய 15-வது ஒவரில் இரண்டு பேட்ஸ்மேன்களும் ஒரு பவுண்டரியை விளாசினர். பொல்லார்டு வீசிய 16-வது ஒவரிலும் அதே! பும்ரா வீசிய அடுத்த ஓவரில், 2 சிக்ஸர்களும் 1 பவுண்டரியும் விரட்டினார் டி வில்லியர்ஸ். `அண்ணன் இப்போதான் படி ஏறுறாப்ல. இறங்கி வந்துதான் மலை ஏறுவாப்ல' என பெங்களூர் ரசிகர்கள் கண் அடித்தனர். போல்ட் வீசிய 18-வது ஓவரில், டி வில்லியர்ஸுக்கு ஒரு சிக்ஸரும், போல்ட்டுக்கு படிக்கல்லின் விக்கெட்டும் கிடைத்தது. 40 பந்துகளில் 54 ரன்கள் என சிறப்பான பங்களிப்பைத் தந்தார் படிக்கல். அடுத்து, துபேவுடன் கைகோர்த்தார் ஏபிடி! 

#RCBvMI

பும்ரா வீசிய 19-வது ஓவரில், டி வில்லியர்ஸ் ஒரு சிக்ஸரையும் பவுண்டரியையும் விளாசி தன் அரை சதத்தை நிறைவு செய்ய, துபேவும் ஒரு சிக்ஸர் அடித்து ஜோதியில் ஐக்கியமானார். அதிலும், பேட்டின்ஸன் வீசிய கடைசி ஓவரில், வைடு லாங் ஆஃபில் ஒரு சிக்ஸர், ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்ஸர், நேராக ஒரு சிக்ஸர் என மூன்று சிக்ஸரை விளாசி அணியின் ஸ்கோரை 201-ஆக உயர்த்தினார். மேஜிக்கல் 200!

Also Read: சூப்பர் ஓவர் சைனி... மீண்டு வந்த கோலி... துரத்தி, மிரட்டிய மும்பை! #RCBvMI

202 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்கோடு, களமிறங்கியது ரோஹித் - குயின்டன் ஜோடி! பந்து வீச வந்தார் உடானா. ரோஹித் ஒரு சிக்ஸரையும், டி காக் ஒரு பவுண்டரியும் விளாசினார்கள். `இன்னைக்கு மண்டே இல்லைடா... ரோஹித் டேடா' என அலறினார்கள் ரோப்ரோ ரசிகர்கள். அடுத்த ஓவரிலேயே அவுட்! வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தை, புல் அடிக்கிறேன் என கொடியேற்றி கேட்ச் ஆனார். பிடிச்சது யாரு? நம்ம நேகி. பவன் நேகி! அடுத்த வந்த சூர்யகுமார் யாதவும் உடனே, உடானா பந்தில் அவுட்டாகி பெவிலியனுக்குத் திரும்பினார். இஷான் கிஷன் வந்தார். முதல் பந்திலேயே பாயின்ட் திசையில் ஒரு பவுண்டரி விரட்டினார்.

4-வது ஓவரில் ஒரே ஒரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்தார் வாஷிங்டன். பக்கா பெளலிங்! சைனி வீசிய 5வது ஓவரில், ஃபைன் லெக் திசையில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் கிஷன். மீண்டும் வாஷிங்டன் வந்தார். 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். பவர்ப்ளேயின் முடிவில் 35/2 என மிக சுமாரான நிலையில் இருந்தது மும்பை.

#RCBvMI

7-வது ஓவரில், டி காக்கின் விக்கெட்டை கழட்டினார் சாஹல். பவுண்டரிக்கு அருகில் வைத்து ஒரு கேட்ச். பிடிச்சது யாரு? நம்ம நேகி. பவன் நேகி! 8வது ஓவரை வீசவந்தார் ஸாம்பா. 94 மீட்டருக்கு ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் ஹர்திக் பாண்டியா. "சாஹல் - ஸாம்பா - சுந்தர் என ஸ்பின் மும்மூர்த்திகள் ஒரு பக்கம். ஸ்பின் நன்றாக ஆடக்கூடிய ஹர்திக் இன்னொரு பக்கம். ஆட்டம் என்னவாகப் போகுதோ!" என நாடே நகத்தைக் கடித்தது. சாஹல், சுந்தர் வீசிய அடுத்த 2 ஓவரிலும், பவுண்டரிகள் ஏதுமில்லை. 4 ஓவர் வீசி 1 விக்கெட்டும் கைப்பற்றி 12 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார் வாஷிங்டன். 11-வது ஓவர் வீசவந்தார் சைனி. இரண்டு சிக்ஸர்களை அள்ளினார் கிஷன். `ஏக் டீம் மேம், ஏக் கிஷன், சிக்ஸர்களாக வெளுத்தா தா!"

ஸாம்பா வீசிய 12-வது ஒவரில், அவுட்டானார் ஹர்திக்! லைனில் வைத்து கேட்ச். பிடிச்சது யாரு? நம்ம நேகி. பவன் நேகி! அடுத்து 14-வது ஓவரில் ஒரு சிக்ஸர் கிடைத்தது. சாஹல் வீசிய 15-வது ஓவரில், கிஷான் ஒரு சிக்ஸரும், பொல்லார்டு ஒரு பவுண்டரியும் எடுத்துக்கொண்டார்கள். 15 ஓவரின் முடிவில், 30 பந்துகளில் 90 ரன்கள் தேவை என கடினமான இலக்குடன் விளையாடிக் கொண்டிருந்தது மும்பை அணி. சைனி வீசிய 16வது ஓவரில், ஒரே ஒரு பவுண்டரி கிடைத்தது. அடுத்த ஓவர் வீச வந்த ஸாம்பாவிடம்தான், நகை கடையை எழுதி வாங்காத குறை! 3 சிக்ஸரையும் 1 பவுண்டரியும் விளாசினார் பொல்லார்டு. அப்படியே சாஹல் வீசிய அடுத்த ஒவரிலும், இரண்டு சிக்ஸர்கள் பறந்தன. கிஷான் தன் பங்குக்கு ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார். 12 பந்துகளுக்கு 31 ரன்கள் தேவை.

#RCBvMI

சைனி வீசிய 19வது ஓவரில், ஒரு சிக்ஸர் உட்பட 12 ரன்கள் கிடைத்தன. இப்போது, 6 பந்துகளுக்கு 19 ரன்கள் தேவை. உடானா வந்தார். உடனடியாக, இரண்டு சிக்ஸர்களை வெளுத்தார் கிஷான். 99 ரன்களை எட்டினார். அவருக்காக சிங்கிள் தட்டாமல், டீமுக்காக பவுண்டரிக்கு தூக்கி, பவுண்டரி லைனில் கேட்சானார். என்னா மனுஷன்யா! கடைசி பந்தில் 5 ரன்கள் வேண்டும். பவுண்டரிக்கு விரட்டி, ரன்களை சமன் செய்தார் பொல்லார்டு! மும்பை ரசிகர்களுக்கு மீண்டும் உயிர் வந்தது. `ஆம்ளே, பொம்ளே, அனில் கும்ப்ளே எல்லோரும் வெறுத்துப்போய் உட்கார்ந்துருக்கு சார். இதுலேயாவது ஜெயிச்சுட்டு வா சார்' என ஆர்சிபி ரசிகர்கள் நொந்துப்போனார்கள்.

சூப்பர் ஓவர் தொடங்கியது. ஹர்திக்கும் பொல்லார்டும் பேட்டிங் இறங்க, பந்து வீசினார் சைனி. முதல் பந்தே ஆணி அடித்தார் போல் ஒரு யார்க்கர். சிங்கிள் தட்டினார் பொல்லார்டு. அடுத்து ஒரு சிங்கிள், ஒரு டாட். 4வது பந்தில் ஒரு பவுண்டரி தட்டினார் பொல்லார்டு. அடுத்த பந்திலேயே அவுட்! கடைசி பந்தில் லெக் பை-ஸில் ஒரு ரன் உட்பட 7 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை அணி. டி வில்லியர்ஸும் கோலியும் ஆர்சிபி அணியிலிருந்து களமிறங்கினர். பும்ரா பந்து வீச வந்தார். முதல் 2 பந்துகளில் 2 சிங்கிள்கள். அடுத்து ஒரு டாட். 4-வது பந்தில், ஏபிடி ஒரு பவுண்டரி. 5-வது பந்தில் ஒரு சிங்கிள். கடைசி பந்தில், கோலி ஒரு பவுண்டரி என மேட்ச் முடிந்தது. கடல் அலைகள் நின்றன, பறக்கும் பறவைகள் நின்றன, அசையும் மரங்கள் நின்றன, கிஷான் நொந்துபோய் அமர்ந்திருந்தார். 

#RCBvMI

"நாங்க ஜெயிக்க மாட்டோம்னு இன்னிங்ஸ் ஆரம்பிக்கும்போதே தெரியும். இந்த கிஷானும், பொல்லார்டும்தான் மேட்சை மாத்திவிட்டாங்க. இப்போ என்ன பண்ண முடியும், ஓப்பனிங் நல்லா ஆடியிருந்தால் ஜெயிச்சுருக்கலாம். ஹர்திக், ஹிட் ஆடுவாப்லனு சொல்லிதான் சூப்பர் ஓவர்ல இறக்கிவிட்டேன். அவருக்கும் இந்த நாள் இனிய நாளா அமையலை" என இன்னைக்கு ராசியான நிறம் சிவப்பு, அனுகூலமான திசை தெற்கு என்பதுபோல பேசி முடித்தார் ரோஹித்.

"எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை. ரோலர் கோஸ்டர் ரைடு போன மாதிரி இருக்கு. ஃபீல்டிங் கொஞ்சம் சரி பண்ண வேண்டியது இருக்கு. நேகியே கேட்ச் டிராப் பண்றார். இது அபாயத்தைக் குறிக்கும். பவுலர்கள் நல்லா பவுலிங் போட்டாங்க. குறிப்பா, சூப்பர் ஓவர் வீசிய சைனி சூப்பராவே ஓவர் போட்டார்" என்றார் கோலி. டி வில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். புள்ளி பட்டியலில் மாற்றங்கள் ஏற்பட "மும்பை தோற்று, பெங்களூர் ஜெயிச்சதுக்கு நாங்க என்ன பாவம் பண்ணினோம்" என வெறுப்பானார்கள் 7-வது இடத்துக்கு இறங்கிய சென்னையின் 2கே ரசிகர்கள். "விடுப்பா விடுப்பா... 7-ன்றதே தல தோனி நம்பர்தானேப்பா" என்றார்கள் சென்னையின் 90'ஸ் ரசிகர்கள்!



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-royal-challengers-bangalore-vs-mumbai-indians-match-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக