Ad

திங்கள், 28 செப்டம்பர், 2020

விருதுநகர் பட்டாசு ஆலையில் திடீர் தீ; தரைமட்டமான கட்டடம்! - தொழிலாளியைப் பலிகொண்ட விபத்து

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறியதும், பெரியதுமாக 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் உள் தொழிலாளர்களாக 3 லட்சம் தொழிலாளர்களும், பட்டாசு உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் உற்பத்தியில் 5 லட்சம் தொழிலாளர்களும், பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசுத் தேவையில் 95 சதவிகிதத் தேவையை இப்பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளே பூர்த்தி செய்கின்றன.

பட்டாசு ஆலை விபத்து

பட்டாசு உற்பத்தி பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், ஆலைகளில் எதிர்பாராமல் ஏற்படும் திடீர் தீ விபத்துகளால் காயங்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு விடுகின்றன. தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ஒருவர் உயிரிழந்தார்.

Also Read: காட்டுமன்னார்கோயில்: பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட உடல்கள்! - பட்டாசு ஆலை விபத்தில் 7 பெண்கள் பலி

விருதுநகர் மாவட்டம் குந்தலப்பட்டியில் தங்கராஜ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இவர், நாக்பூரில் பெறப்பட்ட உரிமம் மூலம் அனைத்து பேன்சி ரக பட்டாசுகளையும் தயாரித்து வருகிறார். 15-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வெடி மருந்துகளில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

பட்டாசு ஆலை விபத்து

இந்த விபத்தில் ஒரு அறை இடிந்து முற்றிலும் தரைமட்டமாகியது. ஆலையில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த செங்குன்றாபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் பலத்த காயம் அடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில் மற்ற அறைகளில் தீ பரவாமல் தீயை அணைத்தனர். இதனால், 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து நடந்து வரும் திடீர் தீ விபத்துகள், பட்டாசு தொழிலாளர்களை வேதனை அடையச் செய்துள்ளது.

இதுகுறித்து பட்டாசு ஆலையின் உரிமையாளர்கள் சிலரிடம் பேசினோம். ``சில பட்டாசு ஆலைகளில் உற்பத்தியைப் பெருக்கி அதிக லாபம் பார்ப்பதற்காக சட்டத்தை மீறி பட்டாசு உற்பத்தி அறைகளில் கூடுதலாக தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கப்படுவதும், வேதிப் பொருள்களின் வீரியம் தெரியாமல் மருந்துகள் கையாளப்படுவதும்தான் பெரும் விபத்துகளுக்குக் காரணம்.

பட்டாசு ஆலை விபத்து

உற்பத்தியாளர்கள் விதிமுறைப்படி ஆலைகளை நடத்துவதும் தொழிலாளர்களுக்குப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவற்றால் மட்டுமே வெடிவிபத்துகளைத் தடுக்க முடியும்” என்றனர்.



source https://www.vikatan.com/news/accident/fire-accident-in-virudunagar-firecracker-factory-one-died

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக