Ad

புதன், 30 செப்டம்பர், 2020

6 நிமிட நடைப்பயிற்சி பரிசோதனை கோவிட்-19 பாதிப்பைக் கண்டறியுமா... மருத்துவ விளக்கம்!

கொரோனா நோய்த்தொற்றைக் கண்டறிவதற்கு ஆர்.டி.பி.சி.ஆர், ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட், சி.டி ஸ்கேன் எனப் பல்வேறு முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும், ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மட்டும்தான் கோவிட்-19 நோயைக் கண்டறிவதற்கான முறையான பரிசோதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் உள்ள நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள அனைவருக்கும் 6 நிமிட நடைப்பயிற்சி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன் அடிப்படையில் யாருக்கெல்லாம் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கண்டறியப்படுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

Covid-19

அதென்ன 6 நிமிட நடைப்பயிற்சி பரிசோதனை?

தொடர்ந்து ஒரு நபரை 6 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி செய்யச் சொல்ல வேண்டும். அதைத் தொடர்ந்து பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் அவரைப் பரிசோதிக்க வேண்டும். பரிசோதனையில் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 90-க்கும் குறைவாக இருந்தால் அவர்களுக்கு ஏதோ பாதிப்புள்ளது என்ற முடிவுக்கு வருவார்கள்.

அதைத் தொடர்ந்து ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு கோவிட்-19 நோயை உறுதிப்படுத்துவார்கள். இந்தப் பரிசோதனையை மருத்துவர்கள், மருத்துவத் துறையைச் சார்ந்த நிபுணர்கள்தாம் செய்ய வேண்டும் என்பதில்லை. அனைவரும் எளிதாகச் செய்ய முடியும்.

6 நிமிட நடைப்பயிற்சி பரிசோதனை என்பது கோவிட்-19 பாதிப்பைக் கண்டறிவதற்கான பரிசோதனையாகக் கருதலாமா என்ற கேள்வியுடன் தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் பேசினோம்.

``அமெரிக்கன் கார்டியாக் சொசைட்டி என்ற மருத்துவ அமைப்புதான் இந்தப் பரிசோதனை முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது. இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடுகளைப் பரிசோதிப்பதற்காகக் கண்டறியப்பட்ட பரிசோதனை இது.

Swab Test

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD), ஆஸ்துமா, இதயத்தின் பம்ப்பிங் திறன் குறைவாக இருப்பது உள்ளிட்ட நோய்களைக் கண்டறிய இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. கோவிட்-19 சமயத்தில் இந்தப் பரிசோதனையை நோயின் தீவிரத்தைக் கண்டறிவதற்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். சி.டி ஸ்கேன் வசதி இல்லாத இடங்களில், அடிக்கடி சி.டி ஸ்கேன் கதிர்வீச்சுக்கு உள்ளாவதைக் குறைத்து, நோயின் தீவிரத்தை அறிந்துகொள்ள இந்தப் பரிசோதனையைப் பயன்படுத்தலாம்.

கோவிட்-19 நோயாளிகளில் சிலர் நன்றாக இருப்பார்கள். ஆனால், ரத்தத்தில் ஆக்ஸிஜன் 95, 96 என்ற அளவில்தான் காணப்படும். திடீரென ஆக்ஸிஜன் அளவு குறையும். இதன் காரணமாக `ஹேப்பி ஹைப்போக்ஸியா' என்ற நிலையை அடைந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இந்த நோயாளிகளுக்கு சாதாரணமாக இருக்கும் நிலையில் மூச்சு வாங்காது, இயல்பாகவே இருப்பார்கள். நடக்கச் சொல்லும்போதுதான் நோயின் தீவிரம் தெரியும். ஆக்ஸிஜன் அளவு 93-க்குக் கீழ் குறைந்துவிட்டால் அவர்களுக்கு கோவிட்-19 ஆல் தீவிரமான நுரையீரல் பாதிப்பு உள்ளது என்று அர்த்தம்.

கோவிட்-19 நோயைக் கண்டறிய ஏன் பயன்படுத்தக் கூடாது?

பொதுவாகவே நுரையீரல், இதயம் சம்பந்தமான பிரச்னைகள் இருப்பவர்களுக்கும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாகத்தான் காட்டும். அவர்களையெல்லாம் அதிக ஆபத்துள்ளவர்கள் பட்டியலில் வைத்து அவர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்து பார்க்கலாம். வயதானவர்கள், ஏற்கெனவே வேறு பிரச்னைகள் உள்ளவர்களுக்குத்தான் கோவிட்-19 தீவிர பாதிப்பைக் கொடுக்கிறது என்ற அடிப்படையில்தான் சிகிச்சையளிக்கிறோம். அதனால் அதிக ஆபத்துள்ளவர்களைக் கண்டறிவதற்கு இந்தப் பரிசோதனை உதவும்.

6 நிமிட நடைப்பயிற்சி பரிசோதனை என்பது கோவிட்-19 தொற்றைக் கண்டறியும் பரிசோதனை கிடையாது. மேலும், இந்தப் பரிசோதனையின் மூலம் நோயைக் கண்டறிவதன் முடிவுகள் துல்லியமாக இருக்காது. நாக்பூர் போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பரிசோதனை செய்வதற்கு வசதிகள் இருக்காது. அதனால்தான் இதுபோன்ற பரிசோதனைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், கோவிட்-19 நோயைக் கண்டறிவதற்கு இது சரியான பரிசோதனை முறை அல்ல.

Infectious Disease Expert Dr.Ashwin Karupan

கோவிட் நோயாளிகளுக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 95-க்கும் குறைவாக இருந்தால் தீவிர பாதிப்பு உள்ளது என்று அர்த்தம். அவர்களுக்கு இந்தப் பரிசோதனை அவசியமற்றது. ஆக்ஸிஜன் அளவு 95-க்கு மேல் இருக்கிறது, சி.டி ஸ்கேனில் நோயின் தீவிரம் தெரியவில்லை அல்லது சி.டி ஸ்கேன் எடுக்கவில்லை எனும்போது நோயின் தீவிரத்தை அறிந்துகொள்ள 6 நிமிட நடைப்பயிற்சி பரிசோதனை செய்து பார்க்கலாம்.

சாதாரண மக்கள் இதைச் செய்யலாமா?

வீட்டில் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் இருக்கிறது என்றால் இந்த 6 நிமிட நடைப்பயிற்சியைச் செய்து பார்க்கலாம். நடந்து முடிந்ததும் பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 93-க்கும் குறைவாக இருந்தால் நோயாளிக்கு ஏதோ தீவிர நோய் பாதிப்பு உள்ளது என்று அர்த்தம். அது கோவிட்-19 ஆகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை.

நுரையீரல் செயல்பாடு அல்லது இதயத்தின் பம்ப்பிங் சரியாக இல்லை என்பதாகவும் இருக்கலாம். பொதுவாக, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 99 - 100 இருக்க வேண்டும். பரிசோதனையின் முடிவில் 93-க்கும் கீழ் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

Pulse Oximeter

Also Read: கோவிட்-19 காலம்: குழந்தைக்குத் திட்டமிடுவதை யாரெல்லாம் தவிர்க்கக் கூடாது?

கொரோனாவால் பாதிக்கப்பட்டு லேசான பாதிப்புடன் வீட்டில் க்வாரன்டீனில் இருப்பவர்களுக்கு இந்தப் பரிசோதனை தேவைப்படும். பரிசோதனை முடிவு 95-க்கும் குறைவாக இருந்தால் நுரையீரல் பாதிப்பு அதிகரித்துள்ளது என்பதைக் கண்டறிய முடியும். தொடர்ந்து மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அல்லது மருத்துவமனைக்குச் செல்வது நல்லது" என்றார்.



source https://www.vikatan.com/health/healthy/is-6-minute-walk-test-will-help-us-to-detect-covid-19-impact

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக