Ad

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

சென்னை: மாமனாரைக் காப்பாற்ற உயிரைவிட்ட மருமகள் - வாடகைத் தகராறில் தொடரும் கொலைகள்!

சென்னை சூளைமேடு, ராதாகிருஷ்ணன்நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (69). இவரின் மனைவி கலாவதி. இந்தத் தம்பதியருக்கு சதீஷ் (35) என்ற மகனும் ஸ்ரீதேவி (34) என்ற மகளும் இருக்கிறார்கள். சந்திரமோகன், சென்னை அமைந்தகரையில் பார்மஸி அசிஸ்டென்ட்டாக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். சதீஷின் மனைவி சுகன்யா (32). இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள்.

சந்திரமோகன்

சந்திரமோகனின் வீட்டில் வாடகைக்குக் குடியிருப்பவர் நாராயணன் (56). கூலி வேலை செய்துவருகிறார். இவர், கடந்த சில மாதங்களாக வாடகைப் பணம் கொடுக்கவில்லை. அதனால், சந்திரமோகனுக்கும் நாராயணனுக்கும் வீட்டு வாடகைப் பிரச்னை இருந்துவந்திருக்கிறது. கடந்த 26-ம் தேதி இரவு சந்திரமோகன், வாடகைப் பணத்தை நாராயணனிடம் கேட்டிருக்கிறார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

ஆத்திரமடைந்த நாராயணன், கத்தியை எடுத்து சந்திரமோகனைக் குத்தியிருக்கிறார். அவரின் அலறல் சத்தம் கேட்டு சதீஷ், அவரின் மனைவி சுகன்யா ஆகியோர் அங்கு வந்தனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த சந்திரமோகனைக் காப்பாற்ற நாராயணனைத் தள்ளிவிட்டனர். அப்போது நாராயணன், சதீஷ், சுகன்யா ஆகியோரையும் கத்தியால் குத்தியிருக்கிறார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். மூன்று பேரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மூன்று பேரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சதீஷ்

அங்கு சுகன்யாவைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சந்திரமோகனுக்கும் சதீஷுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து சூளைமேடு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். மேலும், சிகிச்சையிலிருக்கும் சந்திரமோகன், சதீஷிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அவர்கள் இருவரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், நாராயணனைத் தேடிவந்தனர். அப்போது நாராயணன், சூளைமேட்டில் பதுங்கியிருந்த தகவல் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரீஸ்வரன், ராமகிருஷ்ணன் ஆகியோருக்குத் தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸார் நாராயணனைக் கைதுசெய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``நாராயணன், பெயின்ட்டர் வேலை செய்துவருகிறார். இவரின் மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஆனந்த், ரூபன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனலட்சுமி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கிவிட்டு எங்கோ சென்றுவிட்டார். தற்போது, அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. நாராயணன், அவரின் மகன்கள் வீட்டில் இருந்தார். நாராயணன், கடந்த ஆறு மாதங்களாக வாடகைப் பணம் தரவில்லை. மேலும், சந்திரமோகனிடம் நாராயணன் 80,000 ரூபாய் கடனாகவும் வாங்கியிருக்கிறார். சம்பவத்தன்று கடனையும் வாடகைப் பணத்தையும் சந்திரமோகன் கேட்டிருக்கிறார். அப்போது அவரை அவதூறாகப் பேசிய நாராயணன், கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

Also Read: சென்னை: 2-வது மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்ட மாணவன்! - கொலை வழக்கில் தாய், மகன் கைது

நாராயணன்

இருவருக்கும் நடந்த வாய்தகராறு கைகலப்பாக மாறியிருக்கிறது. ஆத்திரமடைந்த நாராயணன், கத்தியால் முதலில் சந்திரமோகனைக் குத்தியிருக்கிறார். சந்திரமோகனைக் காப்பாற்ற அவரின் மகன் சதீஷ், மருமகள் சுகன்யா ஆகியோர் வந்திருக்கிறார்கள். அவர்களையும் நாராயணன் கத்தியால் குத்தியிருக்கிறார். அதில் சுகன்யா, உயிரிழந்துவிட்டார். கொலை நடந்த ஒரு மணி நேரத்தில் நாராயணனைக் கைது செய்திருக்கிறோம்" என்றார்கள்.

சென்னை குன்றத்தூரில் வங்கி ஊழியர் குணசேகரனை அவரின் வீட்டில் வாடகைக்கு இருந்த இளைஞர் அஜித், கடந்த ஜூலை மாதம் கத்தியால் குத்திக் கொலை செய்தார். மாமனாரைக் காப்பாற்ற சென்ற மருமகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/chennai-lady-murdered-over-house-rent-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக