Ad

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

போலி ஆணை... அரசுப் பணியில் சேர்ந்த 3 பேர் கைது! முறைகேடுகளால் பதறும் ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட அரசுப் பள்ளிகளில் போலி பணி ஆணை மூலம் பணியில் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த கல்வி அலுவலக ஊழியர்கள் இருவரும் சிக்கினர்.

கைது செய்யப்பட்ட ராஜேஷ்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி நியமனம் வழங்கப்பட்டது. இதில், ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறையில் காலியாக இருந்த 42 இடங்களில் 37 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் இளைநிலை உதவியாளர் பணியில் பெண் ஒருவர் சேர்ந்த நிலையில், கடந்த 23-ம் தேதி ராமநாதபுரம் சூரங்கோட்டையை சேர்ந்த ராஜேஷ் (32) என்பவர், தனக்கு பணி வழங்கும்படி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரிடம் நியமன ஆணையை கொடுத்துள்ளார். இந்த நியமன ஆணை குறித்த சந்தேகம் எழவே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தியிடம் இதுகுறித்து தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி கோப்புகளை ஆய்வு செய்ததில் ராஜேஷ் என்பவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என தெரியவந்தது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக்கிடம் முதன்மை கல்வி அலுவலர் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, டி.எஸ்.பி திருமலை தலைமையிலான காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

போலி ஆணை தயாரித்த கண்ணன்

இந்த விசாரணையில், ராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருக்கைக் கண்காணிப்பாளராக பணிபுரியும் கண்ணன் (47), பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உதவியாளராகப் பணிபுரியும் கேசவன் (45) ஆகிய இருவரும் சேர்ந்து ரூ.5 லட்சம் வீதம் பணம் பெற்றுக் கொண்டு நியமன ஆணையில் பெயரைத் திருத்தி வழங்கியது அம்பலமானது. மேலும், இதே போல் போலி பணி ஆணை மூலம் பாம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைவாணன் (26), ராமேஸ்வரம் கரையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சதீஷ் குமார் (33) ஆகிய இருவரும் பணியில் சேர்ந்திருப்பதும் தெரியவந்தது.

Also Read: ‘நேர்முகத் தேர்வு; போலி பணி நியமன ஆணை!’ -அரசு வேலை என்ற பெயரில் இன்ஜினீயரை ஏமாற்றிய ஆசிரியர்

இதையடுத்து போலி நியமன ஆணையைத் தயாரித்து கொடுத்த கண்ணன், கேசவன், போலியான ஆணை மூலம் பணியில் சேர முயன்ற ராஜேஷ், பணியில் சேர்ந்த கலைவாணன், சதீஷ்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல் போலி ஆணை மூலம் ஆர்.எஸ்.மங்களம் பள்ளியில் பணியாற்றி வந்த மனோஜ்குமார் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஊராட்சி ஒன்றிய உதவியாளர் கேசவன்

கடந்த சில மாதங்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த காவலர் தேர்வில் போலியான விளையாட்டு சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்த சிலர் சிக்கினர். இதனைத் தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதி முறைகேட்டில் ஈடுபட்டு பணியில் சேர்ந்த மற்றும் பணியில் சேர முயன்ற பலரும் கைதாகினர். இந்த வழக்குகளின் கதி என்ன ஆனது என தெரியாத நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் போலியான ஆணை மூலம் அரசுப்பணியில் சேர முயன்றவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/crime/ramanathapuram-police-arrested-3-over-fake-job-orders

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக