சசிகலா விடுதலை குறித்த பரபரப்பு மீண்டும் தொற்றிக் கொண்டுவிட்டது. பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக, ‘சசிகலா எப்போது விடுதலையாக வாய்ப்பிருக்கிறது?’ என்று கர்நாடக சிறைத்துறையிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கு செப்டம்பர் 11-ம் தேதி பதிலளித்துள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறைச்சாலை நிர்வாகம், “சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை விவரங்களின்படி, அவர் ஜனவரி 27, 2021-ல் விடுதலையாகலாம். அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், பிப்ரவரி 27, 2022-ல் விடுதலையாவார். அவருடைய பரோல் தேதிகளையும் கணக்கிட்டால், விடுதலை செய்யப்படும் தேதியில் மாற்றம் வர வாய்ப்பிருக்கிறது” என்று பதிலளித்துள்ளது.
செப்டம்பர் மாத இறுதியிலேயே சசிகலா விடுதலையாவார் என அவர் தரப்பினர் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த வருடத்தில் அவர் விடுதலையாகும் வாய்ப்பில்லை என்பதுபோல, சிறைத்துறை அனுப்பியுள்ள ஆர்.டி.ஐ பதில்கள் அமைந்துள்ளன. என்ன கணக்கு இது? சசிகலா எப்போது விடுதலையாவார்? என சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம் பேசினோம்.
Also Read: ஜனவரி 27-ல் விடுதலையாகிறார் சசிகலா?! - ஆர்.டி.ஐ கேள்விக்கு சிறை நிர்வாகம் பதில்
“2014-ல் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பின்படி, சசிகலாவுக்கு நான்கு வருட சிறைத் தண்டனையும் பத்து கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்த தவறினால் ஒரு வருட சிறை தண்டனை கூடுதலாக அனுபவிக்க வேண்டியதிருக்கும் என குன்ஹா தீர்ப்பளித்தார். சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததால், பிப்ரவரி 15, 2017-ல் சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சிறை தண்டனையின்படி பார்த்தால், பிப்ரவரி 14, 2021-ல் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும்.
ஆனால், 1997-ல் கைது செய்யப்பட்ட போது சிறையில் இருந்த நாள்கள், 2014-ல் வழங்கப்பட்ட தீர்ப்பையொட்டி சிறைக்குச் சென்ற நாள்களையும் கணக்கிட்டால் 35 நாள்கள் வருகின்றன. இந்தக் கணக்கை ஒருபக்கம் வைத்துக் கொள்வோம். சசிகலாவின் கணவர் ம.நடராசன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, சென்னையில் சிகிச்சை பெற்ற அவரைப் பார்ப்பதற்காக அக்டோபர் 2017-ல் சசிகலா ஐந்து நாள்கள் பரோலில் வந்தார். நவம்பர் 2018-ல் நடராசன் மறைவின் போதும் 12 நாள்கள் பரோலில் வெளியே வந்தார். ஆக மொத்தம் பரோலில் வெளிவந்த நாள்கள் 17. இதை ஏற்கனவே சிறைவாசம் அனுபவித்த 35 நாள்களுடன் கழிப்பார்கள். அப்படி கழித்தால், 18 நாள்கள் சிறைவாசம் அனுபவித்ததாகக் கணக்கு வரும். இந்த 18 நாள்களையும் பிப்ரவரி 14-ம் தேதியில் இருந்து கழித்துத்தான், சசிகலா ஜனவரி 27-ம் தேதி விடுதலையாகுவார் என கர்நாடகா சிறைத்துறை கணக்கு கூறுகிறது.
Also Read: “சசிகலா ஒரு பாம்பு!”
கர்நாடகா சிறைத்துறை விதிகளின்படி, தண்டனை பெற்ற எந்தக் குற்றவாளியாக இருந்தாலும் அவருக்கு மாதத்துக்கு மூன்று நாள்கள் தண்டனைக் குறைப்பு வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை எல்லா கைதிகளுக்கும் அளிக்கப்படும் பொதுவான சலுகை. சசிகலாவுக்காக தனியாக உருவாக்கப்பட்டதல்ல. செப்டம்பர் 2020 வரை, சசிகலா 43 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார். மாதத்துக்கு மூன்று நாள்கள் சிறை தண்டனைக் குறைப்பு எனக் கணக்கிட்டால், 129 நாள்கள் சிறைதண்டனை குறைப்பு வருகிறது. இதை ஜனவரி 27, 2021-ல் இருந்து கழித்துதான், செப்டம்பர் மாத இறுதியிலேயே சசிகலா விடுதலையாவார் என்று கூறுகிறோம். ஊழல் தண்டனை பெற்றவர்களுக்கு இந்த சலுகை கிடையாது என்று கர்நாடகா சிறைத்துறை விதிகள் எதுவும் கூறவில்லை.
இப்போது வெளிவந்திருக்கும் ஆர்.டி.ஐ பதிலில், ‘சசிகலாவுக்கு எந்த சலுகையும் வழங்க இயலாது. அவரை நன்னடத்தையின் அடிப்படையில் விடுவிக்க முடியாது’ என்று கர்நாடகா சிறைத்துறை எந்த இடத்திலும் கூறவில்லை. ஆக, செப்டம்பர் மாத இறுதியில் சசிகலா விடுதலையாகும் தேதி முறைப்படி வெளியாகும்” என்றவரிடம், “தற்போது உள்துறை செயலாளராக இருக்கும் ரூபா ஐ.பி.எஸ்., சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்து ஷாப்பிங் சென்றார், சிறைத்துறை விதிகளைக் காற்றில் பறக்கவிட்டார் என்று எழுப்பிய புகார்கள் ஏதும் விடுதலையை தாமதப்படுத்தாதா?” என்றோம்.
Also Read: `விடுதலைக்கான விலையும்... விவகாரப் பின்னணியும்!' - சதுரங்க ஆட்டத்தில் சசிகலா
"ரூபாவின் புகாரை விசாரித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், அப்படி எந்தத் தவறும் நடக்கவில்லை என கர்நாடகா அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். மேலும், தற்போது ஆர்.டி.ஐ மூலமாகப் பெறப்பட்ட பதிலில், ரூபாவின் புகாரைக் குறிப்பிடும் எந்தத் தகவலும் இல்லை. ஆகவே, இதனால், சசிகலாவின் விடுதலையில் எந்த பாதிப்பும் ஏற்படாது” என்று விளக்கமளித்தார் அவர்.
அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் வீர வெற்றிபாண்டியனிடம் பேசினோம். “சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்றுதான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். முழு தண்டனையும் முடியும் காலம்தான் ஜனவரி 27, 2020. இதிலிருந்து சலுகை தண்டனைக் குறைப்பு நாள்களையும் கணக்கிட்டால், இந்த மாத இறுதிக்குள் சசிகலாவின் தண்டனைக் காலம் முடிந்துவிடும். அதிகப்பட்சமாக அடுத்த மாதம் அவர் விடுதலை செய்யப்படுவார். தலைவர் இல்லாத அ.தி.மு.க-வை சசிகலா மீட்டெடுக்கப் போகும் காலம் வெகுதொலைவில் இல்லை. அரசியலில் பெரிய தாக்கம் ஏற்படப் போகிறது” என்றார்.
Also Read: `சசிகலா ரீ-என்ட்ரி’, தினகரனுக்கு பா.ஜ.க-வின் `ஸ்கெட்ச்..!’ - டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்
சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட பத்து கோடி ரூபாய் அபராதத் தொகையை செலுத்துவதற்கும் ஏற்பாடுகள் தீவரமடைந்துள்ளன. இந்த மாத இறுதிக்குள் அபராதத்தைச் செலுத்திவிட தீர்மானித்திருக்கிறது சசிகலா தரப்பு. ஆட்டம் சூடுபிடிக்கிறது. சசிகலாவின் என்ட்ரி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
source https://www.vikatan.com/news/politics/article-on-sasikala-followers-release-calculation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக