Ad

புதன், 16 செப்டம்பர், 2020

`தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செயல்பாடுகள் தீவிரம்!’ -அதிர்ச்சித் தகவல்

சிரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம், உலக அளவில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துக்கு பல்வேறு உலக நாடுகளும் தடை விதித்துள்ளன. இதனால், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி அந்த இயக்கத்தினர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

ஐ.எஸ் இயக்கத்தினர்

இந்தசூழலில், ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் செயல்பாடுகள் இந்தியாவில் இருப்பது குறித்த கேள்வி மாநிலங்களவையில் எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்துள்ள உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, ``தென்மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்தது தொடர்பான பல்வேறு சம்பங்கள் மத்திய, மாநில விசாரணை அமைப்புகளின் கவனத்துக்கு வந்துள்ளன.

தெலங்கானா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய தென்மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகள் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை 17 வழக்குகள் பதிவு செய்துள்ளது. மேலும், அதுதொடர்பாக 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ், ஐ.எஸ்.கே.பி, ஐ.எஸ்.ஐ.எஸ் -கே போன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பான அனைத்துவிதமான அமைப்புகள் மற்றும் அதன் கருத்தியல் போன்றவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அவை தீவிரவாத அமைப்புகள் என அறிவிக்கப்பட்டுள்ளன.

உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி

இணையதளம் வாயிலாகச் செயல்படும் பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் கருத்தியலை ஐ.எஸ்.ஐ.எஸ் மூளைச் சலவை செய்யப் பயன்படுத்திக் கொள்கிறது. இதனால், சமூக வலைதளங்களில் இதுபோன்ற செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Also Read: 250 கிலோ எடை; ஐ.எஸ் அமைப்பின் `ஜம்போ'! சரக்கு லாரியில் கொண்டுசெல்லப்பட்ட தீவிரவாதி

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்குவங்கம், ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருவது தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது’’ என்றார்.



source https://www.vikatan.com/news/india/isis-most-active-in-12-states-including-tn-says-mha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக