முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் ஏற்கனவே 4 செந்நாய்கள் மர்மமான முறையில் இறந்த நிலையில் நேற்று மேலும் ஒரு செந்நாய் இறந்ததுள்ள சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடம் கொதிப்பை ஏற்படடுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வெளி மண்டலத்திற்கு உட்பட்ட சிங்காரா வனச்சரகம் விபூதிமலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியின் போது சுமார் 4 வயது மதிக்கத்தக்க 4 செந்நாய்கள் [wild dog] இறந்து கிடைப்பதைக் கண்டு திருச்சி அடைந்த ஊழியர்கள், அவற்றின் உடலைக் கைப்பற்றி அதிகாரிகள் முன்னிலையில் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் ஆச்சக்கரை பகுதியில் மேலும் ஒரு ஆண் செந்நாயின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதே பகுதியிலேயே செந்நாயின் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. ஒரே சமயத்தில் 5 செந்நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல துணை இயக்குநர் ஸ்ரீகாந்த், ``சிங்காரா வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் நேற்றுமுன்தினம் 4 செந்நாய்கள் இறந்த நிலையில், இன்று மேலும் ஒரு ஆண் செந்நாய் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. ஏற்கனவே இறந்த 4 செந்நாயின் வயிற்றில் இருந்தது போல், இதன் வயிற்றிலும் புள்ளிமானின் இறைச்சி இருந்தது. விஷமேறிய இறைச்சியை உண்டதால் செந்நாய்கள் இறந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிங்காரா வனச்சரகத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிக்கை கூடலூர் நீதித்துறை நடுவரிடம் வழங்கப்பட்டுள்ளது. செந்நாய்கள் இறந்தது தொடர்பாக விசாரிக்கவும், வேறு செந்நாய் அல்லது பிற உயிரினங்கள் ஏதேனும் இந்த பகுதியில் இறந்துள்ளதா என்பதை கண்டறிய தனிப்படை அமைத்துள்ளோம்" என்றார்.
Also Read: நீலகிரி: எந்தக் காயமும் இல்லை... அடுத்தடுத்து இறந்துகிடந்த செந்நாய்கள்! - முதுமலை மர்மம்
சூழலியல் ஆர்வலரும் கூடுகள் அமைப்பின் நிறுவனருமான ஊட்டி சிவதாஸ், ``இது போன்ற மரணம் இயற்கையானது அல்ல. மக்கள் வசிப்பிடங்களில் காட்டுயிர்கள் இறப்பது நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தவரை தொடர்கதையாக நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. புலிகள் காப்பகம், யானை வழித்தடம் என மிக முக்கியமான இதயப்பகுதியில் இது போன்ற ஒரு துயர நிகழ்வு நடக்கிறது என்பது மிகவும் வருத்தத்திற்கு உள்ளான செய்தி. அழிவின் பட்டியலில் இருக்கக்கூடிய செந்நாய்கள் நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை முதுமலை வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மிகச் சிறந்த ஒரு ஆளுமையை ஏற்படுத்தி, தன்னுடைய வம்சத்தை கட்டுக்குள் வைத்து, பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்த இழப்பை பொருத்தவரைக்கும் மிகவும் வேதனை மட்டுமல்ல இது தேசிய அளவிலான கானுயிர்களுக்கான ஏற்படக்கூடிய பாதிப்பின் முக்கிய அம்சமாக எடுத்து, இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என வனத்துறையும் மத்திய அரசும் நடவடிக்கை மேற்கொள்வது மிக அவசியம்" என்றார்.
Also Read: செந்நாய், காண்டாமிருகம், காட்டெருமை… இதோட குட்டி எப்படி இருக்கும் தெரியுமா? #VikatanPhotoCards
source https://www.vikatan.com/news/environment/five-wild-dogs-found-dead-in-mudumalai-tiger-reserve
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக