Ad

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

கோயிலுக்கு டெபாசிட்; அறக்கட்டளைக்கு என்.ஓ.சி -எப்படி வளைக்கப்படுகின்றன ரூ.10,000 கோடி நிலங்கள்?

திருப்போரூர் முருகன் கோயில், ஆளவந்தார் அறக்கட்டளை ஆகியவற்றை மையமாகவைத்து எழுந்திருக்கும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான புகார், செங்கல்பட்டு மாவட்டத்தில் பல அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

Also Read: திருப்போரூர் ‘திடீர்’ ஆதீனம்! - நியமனம் சரியா, தவறா? கலக்கத்தில் கந்தசாமி பக்தர்கள்...

காஞ்சிபுரம் மாவட்டம், பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ளது திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில். கி.பி 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில், முருகன் போர் புரிந்த ஸ்தலங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் 680 ஏக்கர் நிலங்களும், பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களும் உள்ளன.

இப்பகுதி மக்களை ஒருங்கிணைத்து, சமூக சேவைகளைச் செய்துவந்தார் ஆளவந்தார் நாயக்கர். அவருக்கு வெள்ளைக்கார துரை ஒருவர், கிராம மக்களை நெறிப்படுத்த நிலங்களைக் கொடுத்து உதவி செய்தார். அதையடுத்து, சவுக்கு, கரும்பு என விவசாயப் பணிகளில் மக்களை ஈடுபடுத்தினார் ஆளவந்தார். இப்பகுதி மக்களின் வாழ்வாரத்துக்கும் பெரிதும் உதவியாக இருந்தார். அவர் இறக்கும் தறுவாயில், `தனக்குப் பிறகு இந்த நிலங்களை முறைப்படுத்த வேண்டும்' என உயில் எழுதினார். அதன் அடிப்படையில், அவருடைய சொத்துகளின் பேரில் அறக்கட்டளை உருவானது. அவர் நினைவாக நெம்மேலியில் ஒரு கோயிலும் உள்ளது. ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமாக 1,300 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த அறக்கட்டளைக்குச் சொந்தமாக திருவிடந்தை, தெற்குப்பட்டு, நெம்மேலி, சாலவான்குப்பம், தேவநேரி, இளங்குப்பம், மாமல்லபுரம் வரையில் ஏராளமான நிலங்கள் உள்ளன.

திருப்போரூர் முருகன் கோயில்

திருப்போரூர் முருகன் கோயில், ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துகளின் மதிப்பு பல்லாயிரம் கோடிகளைத் தாண்டும். இதைக் குறிவைத்து சிலர் செயல்பட்டுவருவதாகப் புகார் எழுந்திருக்கிறது. இ துதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார் ஜெகன்நாத் என்பவர். அவர் தனது மனுவில், `இந்த நிலங்கள் அனைத்தும், ஐடி நிறுவனங்கள் அதிகமுள்ள திருப்போரூர் பகுதியில் உள்ளன. இந்த நிலங்களை அபகரிக்க 20-க்கும் மேற்பட்ட நில அபகரிப்பு கும்பல்கள் சுற்றித் திரிகின்றன. இதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்தும், ஆள்மாறாட்டம் செய்தும் விற்பனை செய்வதற்குத் தீவிரமாக செயல்பட்டுவருகின்றன. இந்தக் கோயிலின் நிலங்களைப் பாதுகாக்க வேண்டும்.

எனவே, இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அளவிட்டு அது தொடர்பான இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக வருவாய்த்துறைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இந்த 2,000 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்யவோ, வில்லங்கச் சான்றிதழ் வழங்கவோ கூடாது என்று தமிழக பத்திரப்பதிவு துறை ஐ.ஜி., திருப்போரூர் சார்பு பதிவாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்த மனுவை விசாரித்த நீதியரசர்கள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர், `கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளைப் பாதுகாக்கும் வகையில், ஒரு வாரத்துக்கு தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். வரும் 10-ந் தேதி வரை இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைப் பத்திரப்பதிவு செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' எனக் கூறி, வருவாய்த்துறைச் செயலர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், பத்திரப்பதிவுத் துறை ஐ.ஜி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

``நில விவகாரத்தில் என்ன நடக்கிறது?" எனக் கந்தசாமி கோயில் நிர்வாகிகள் சிலரிடம் கேட்டோம். `` கந்தசாமி கோயிலுக்குச் சொந்தமாக ஓ.எம்.ஆர் சாலையிலுள்ள நிலங்களைத் தாண்டி திருவல்லிக்கேணி, மண்ணடி, மயிலாப்பூர், கேளம்பாக்கம், சிட்லபாக்கம், மறைமலைநகர், புதுச்சேரி ஆகிய இடங்களில் ஏராளமான நிலங்களும் கட்டடங்களும் உள்ளன. இவற்றின் மதிப்பு நான்காயிரம் கோடி ரூபாயைத் தாண்டும்.

Also Read: `பறிபோன சொத்து மீண்டும் திருப்போரூர் முருகனுக்கே வந்தது!’ அறநிலையத் துறையின் அதிரடியால் மீட்பு

சென்னையிலுள்ள சில சொத்துகள் மட்டும் தனிநபர்களின் பெயர்களில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதை மீட்பதற்குத் தற்போதைய கோயில் இ.ஓ சக்திவேல் முயற்சி எடுத்துவருகிறார். திருப்போரூரிலுள்ள கோயில் நிலங்கள் அனைத்தும் அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், செயல் அலுவலர், திருப்போரூர் ஆதீனம் ஆகியோரின் பெயர்களில் உள்ளன. இருந்தாலும், மொத்தமாக கோயிலுக்குச் சொந்தமான சொத்தாகத்தான் உள்ளது. ஆதீனம் உயிரோடு இருந்த காலகட்டத்தில் கோயிலுக்காக வேலை செய்த ஊழியர்களுக்குச் சில நிலங்கள் மானியமாகக் கொடுக்கப்பட்டன. அந்த நிலங்களை அவர்களின் வாரிசுகள் விற்றுவிட்டனர். அவை இன்றைக்குத் தனியார் நிலங்களாக மாறிவிட்டன. இவற்றைக் கோயில் நிலத்தோடு ஒப்பிட முடியாது. அதேநேரம், சில ஆக்ரமிப்புகளும் நடந்துள்ளன" என விவரித்தவர்கள்,

`` இங்குள்ள புகழ்பெற்ற தனியார் கல்லூரி வளாகத்தில் கந்தசாமி கோயிலுக்குச் சொந்தமான எட்டு ஏக்கர் நிலமும் அடங்கியுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையானதும், அப்போது தி.மு.க அரசில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவரிடம் புகார் கொண்டு செல்லப்பட்டது. முடிவில், `கோயில் பெயரில் 50 லட்ச ரூபாய் டெபாசிட் செய்துவிடுங்கள்' என்று கூறவே, கல்லூரி நிர்வாகமும் பணம் கட்டிவிட்டது. இப்போது வரையில் அந்த நிலத்தைக் கல்லூரி நிர்வாகம் அனுபவித்துவருகிறது. அரசியல் தலையீடுகள் காரணமாக, குறைந்த தொகையை கோயில் பெயரில் டெபாசிட் செய்துவிட்டு, அந்த இடங்களில் பெரிய பெரிய கட்டடங்களைக் கட்டி சிலர் லாபம் பார்த்துவருகின்றனர். அவற்றை மீட்க முடியாத வகையில் சில சிக்கல்கள் உள்ளன.

ஆளவந்தார் அறக்கட்டளை நிலம்

அதேபோல், சென்னை மண்ணடி, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் ஆகிய இடங்களிலுள்ள கந்தசாமி கோயில் சொத்துகளில் சிலவற்றை மீட்க முடியவில்லை. மயிலாப்பூரில் ஒரு மார்வாடி, கோயில் நிலத்துக்கு மாதம் 1,000 ரூபாய்தான் வாடகை கொடுத்துவந்தார். ஒருகட்டத்தில், அவர் பெயரில் சொத்தை பட்டா மாற்றம் செய்துவிட்டார். இதைக் கோயில் இ.ஓ-வாக இருந்த பாலகிருஷ்ணன் கண்டுபிடித்தார். பிரச்னை பெரிதானதும், கட்டடத்தைக் காலி செய்யச் சொல்லியும், இன்றளவும் அந்தக் கட்டடம் ஆக்ரமிப்பில் உள்ளது. அந்த மார்வாடியும் மாதம் பல லட்ச ரூபாய் வருமானத்தை ஈட்டிவருகிறார். சென்னை குயப்பேட்டையில் இருந்த பிரதான நிலமும் பறிபோய்விட்டது. புரசைவாக்கத்திலிருந்த 54 கிரவுண்ட் நிலமும்ம் போன இடம் தெரியவில்லை" என வேதனைப்பட்டனர்.

இதையடுத்து, ஆளவந்தார் அறக்கட்டளை தொடர்பாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், `` ஆளவந்தார் அறக்கட்டளையை இந்து அறநிலையத்துறை நிர்வகித்துவருகிறது. இதற்குச் சொந்தமான நிலங்களின் அருகில் வசித்துவந்த சில தனியார்கள், தங்களின் நிலத்துக்குச் செல்வதற்குத் தடையாக ஆளவந்தார் நிலம் இருப்பதாகக் கூறி, வழித்தடத்துக்காக இடம் கேட்டனர். அதை ஏற்று வழித்தடத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள தடையில்லா சான்றும் கொடுக்கப்பட்டது. இப்படிச் சிறிதுசிறிதாக கொடுக்கப்பட்ட வழித்தடங்களெல்லாம், தனியார்களின் பெயரில் பட்டாவாக உருமாறிவிட்டன. அந்தவகையில், 100 ஏக்கர் நிலம் காணாமல் போய்விட்டது. இதற்குக் காரணம், வருவாய்த்துறை அதிகாரிகள் செய்த தவறுகள்தான். தவிர, இந்த நிலங்களில் பெரும்பாலானவை காலம்காலமாக காப்பாற்றப்பட்டே வந்தன. இந்தச் சொத்துகளை பராமரிப்பது தொடர்பாக, பா.ம.க-வும் போராடிவந்தது.

ஆளவந்தார் அறக்கட்டளை நிலம்

அண்மைக்காலங்களில் சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், தங்களின் இடத்துக்குச் செல்ல வழித்தடம் கேட்டு ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகத்தை அணுகியுள்ளன. ` அப்படியெல்லாம் என்.ஓ.சி கொடுக்க முடியாது. நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நாங்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்வோம்' என நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த சிலர், `நீங்கள் யாருக்கெல்லாம் என்.ஓ.சி கொடுத்திருக்கிறீர்கள் என்ற விவரம் தெரியும். அந்தப் பட்டியலை வெளியில் கொண்டு வருவோம். இதை எளிதில் விட மாட்டோம்' எனக் கோபத்தைக் காட்டியுள்ளனர். இருப்பினும், அறக்கட்டளை நிர்வாகிகள் அவர்களுக்கு வளைந்து கொடுக்கவில்லை. நீதிமன்றத்தின் தலையீட்டின் மூலமாக, இழந்த நிலங்கள் அனைத்தும் மீட்கப்பட வேண்டும்" என்கின்றனர் உறுதியான குரலில்.

இந்த விவகாரம் தொடர்பாக, திருப்போரூர் கந்தசாமி கோயில் செயல் அலுவலர் சக்திவேலிடம் பேசினோம். ``கோயிலுக்குச் சொந்தமான இடத்தின் அருகில் பட்டா நிலங்களில் வசிப்பவர்கள், தங்களின் நிலத்தைப் பத்திரப்பதிவு செய்தாலும் அறநிலையத்துறையின் தடையில்லா சான்று பெறப்பட வேண்டும் என சார் பதிவாளருக்குக் கடிதம் அனுப்பவிருக்கிறோம். நான் இங்கு பொறுப்பேற்ற நேரத்திலும் இது தொடர்பாக சார் பதிவாளருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறேன். நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பொதுநல மனு மீதான விசாரணை வரும் 10-ம் தேதி வரவிருக்கிறது. அப்போது நீதிமன்றம் என்ன உத்தரவைப் பிறப்பிக்க உள்ளதோ, அதன்படி செயல்படவிருக்கிறோம்" என்றார் உறுதியாக.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/controversy-irks-in-thiruporur-temple-land-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக