சென்னை ஆவடி, காந்திநகரைச் சேர்ந்த காந்தம்மாள் (58). இவர் அந்தப் பகுதியின் ஆவின் பால் முகவராக உள்ளார். மேலும் இவர், ஆவடி புதிய ராணுவ சாலையில் உள்ள வங்கியிலும் தற்காலிக பணியாளராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம் போல திங்கள் கிழமை வங்கிக்கு வந்த காந்தம்மாள், தன்னுடைய பேக்கில் பால் கலெக்ஷன் தொகை 95,000 ரூபாயை வைத்திருந்தார். பேக்கை தன்னுடைய இருக்கையில் வைத்துவிட்டு வங்கி வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வங்கியில் கூட்டம் அலைமோதியது.
இந்தநிலையில் வேறு ஒரு வேலைக்காக தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்துச் சென்ற காந்தம்மாள், பின்னர் தன்னுடைய இடத்துக்கு வந்தார். அப்போது அவரின் இருக்கையில் வைத்திருந்த பேக்கைக் காணவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்த காந்தம்மாள், வங்கியில் உள்ளவர்களிடம் விவரத்தைக் கூறினார். உடனடியாக வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவை வங்கி ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது வங்கியில் வாடிக்கையாளர் போல வரிசையில் காத்திருந்த இளைஞர் ஒருவர், காந்தம்மாளின் பேக்கை திருடிக் கொண்டு வெளியில் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இந்தநிலையில் காந்தமாளுக்கு அவரின் பேரன் போன் செய்துள்ளார். அப்போது போனை எடுத்த நபர், இந்தப் போனும் ஒரு பேக்கும் எங்கள் வங்கியில் இருப்பதாக, வேறு ஒரு வங்கியின் பெயரைக் கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காந்தம்மாளின் பேரன், பைக்கில் வங்கிக்கு வந்தார். பாட்டியிடம் விவரத்தைக் கேட்டபோதுதான் பேக் திருட்டு போன தகவல் தெரியவந்தது. இதையடுத்து போனில் பேசியவர் கூறிய விவரத்தின்படி அந்த வங்கிக்குச் சென்ற காந்தம்மாளும் அவரின் பேரனும் பேக்கை மீட்டனர். அதிலிருந்த பணம் மட்டும் திருட்டுப் போயிருந்தது.
Also Read: 50 செல்போன்கள், நகை, பணம் திருட்டு! - தினகரன் ஆர்ப்பாட்டத்தில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்
மற்றப்படி செல்போன், மதிய சாப்பாடு ஆகியவை பேக்கில் இருந்தன. இதையடுத்து அந்த வங்கியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது காந்தம்மாள் வேலைப்பார்த்த வங்கியில் பேக்கைத் திருடிய இளைஞர், அதை அருகில் உள்ள இன்னொரு வங்கியில் வைத்துவிட்டு செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து காந்தம்மாள், ஆவடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸாரும் சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையில் பணத்தைத் திருடிய இளைஞரைத் தேடிவருகின்றனர். எதற்காக ஒரு வங்கியில் திருடிய பேக்கை இன்னொரு வங்கியில் இளைஞர் வைத்தார் என்ற கேள்வி, போலீஸாருக்கும் காந்தம்மாளுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/cash-theft-in-chennai-bank-police-investigating-with-cctv-visuals
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக