Ad

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

திருச்சி:`ஒரு வேளை சாப்பாட்டின் வலி என்னனு எங்களுக்குத் தெரியும்'-உதவியால் நெகிழ்ந்த குடும்பங்கள்

கொரோனா லாக்டெளன் காலகட்டத்தில் ஒருவேளைச் சாப்பாட்டுக்கே மிகவும் சிரமப்பட்ட நாடோடி இன மக்கள், தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட 30 குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, மளிகை உள்ளிட்ட பொருள்கள் வாசன் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் ஆனந்த விகடன் வாசகர்கள் சார்பில் வழங்கப்பட்டன. `கொரோனா காலகட்டத்தில் ஒரு வேளை சாப்பாட்டுக்காக வீதியில் கையேந்தினோம். ஆனால், ஒரு மாதத்துக்குக் கவலை இல்லை’ என்று முக மலர்ச்சியோடு அவர்கள் தெரிவித்தனர்.

மளிகைப் பொருள்கள்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு மற்றும் அதைச் சுற்றிலும் நாடோடி இன மக்கள், திருச்சி டு திண்டுக்கல் பைபாஸ் மேம்பாலத்தின் கீழ் வசித்துவருகிறார்கள். 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்கு இருக்கிறார்கள். இவர்கள் பேருந்து நிலையம், நம்பர் ஒன் டோல்கேட், சத்திரம் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் தலைவர்களின் புகைப்படம் போட்ட கேலண்டர்கள், சிறுவர்களுக்கான பொருள்கள் போன்றவற்றை விற்பனை செய்து குடும்பத்தை நடத்திவருகின்றனர். தினமும் காலையில் அவர்கள் தொழிலுக்குச் சென்றால்தான் வீட்டில் அடுப்பு எரியும்.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டைவிட்டு வெளியில் வர முடியாத சூழல். அரசின் கடுமையான உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், இங்கு வசிக்கும் மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்துவந்தார்கள்.

மளிகைப் பொருள்கள்

அத்தோடு ரேஷன் கார்டுகளும் கையில் இல்லாததால், அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் பொருள்கள், நிவாரணமாக ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வாங்க முடியாமல் தவித்துவந்தார்கள். கையில் பணம் இல்லாததால் சாப்பாட்டுக்கு மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்கள். திருச்சி மாவட்டத்திலுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இப்பகுதி மக்களுக்குத் சாப்பாடு வழங்கியிருக்கிறார்கள். இம்மக்கள் பாதி நாள்கள் சாப்பாடு இல்லாமல் பட்டினியாகத் தூங்கியதாக விகடன் வாசகர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தபோது நாம் கலங்கிப்போனோம்.

பிறகு அவர்களைப் பற்றிய விவரம் தெரிய வந்த பிறகு, உடனடியாக நேரில் சென்று விசாரித்தோம். `வயிறு நிறைய சாப்பிட்டு நான்கு மாசம் ஆச்சு’ என்பது அவர்கள் சொல்லாமலேயே அவர்களின் நிலைமை நமக்கு உணர்த்தியது. இதையடுத்து வாசன் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் ஆனந்த விகடன் வாசகர்கள் சார்பில் அவர்களுக்கு உதவ முடிவு செய்யப்பட்டது.

பொருள்களை எடுத்துச் செல்லும் நாடோடி இன மக்கள்

அரிசி 10 கிலோ, ஐந்து கிலோ கோதுமை மாவு, இரண்டு லிட்டர் எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருள்கள் என ஒரு மாதத்துக்குத் தேவையான அளவு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கும் மொத்தம் 42,817 ரூபாய் மதிப்பிலான பொருள்கள் வழங்கப்பட்டன. முகம் முழுக்க புன்னகையுடன் அவற்றை அவர்கள் பெற்றுக்கொண்டனர்.

நிவாரணப் பொருள்களைப் பெற்றுக்கொண்ட மாரியம்மாள் பேசுகையில், ``கையில காசு இல்லாம, ஒரு வேளைச் சாப்பாடு கிடைக்காம எத்தனையோ நாள்கள் பட்டினியோட தூங்கியிருக்கோம்.

மாரியம்மாள்

என்னோட புள்ளைங்களுக்கு `டீ, பன்னு’ வாங்கிக்கொடுத்துட்டு பாதி வயிறா படுக்கவெச்சிருக்கோம். இதைவிடக் கொடுமை என்னன்னா சாப்பாடுக்காக வீதியில கையேந்திருக்கோம். அந்த அளவுக்கு ஒரு வேளை சாப்பாட்டின் வலி என்னன்னு எங்களுக்கு நல்லாத் தெரியும். எங்களோட நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு, தேடி வந்து அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருள்களைக் கொடுத்திருக்கீங்க. ஒரு மாசத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மூணு வேளையும் எங்க வீட்டுல நிக்காம அடுப்பு எரியும். உதவி செஞ்ச ஆனந்த விகடனுக்கு நன்றி” என முக மலர்ச்சியோடு பேசினார்.



source https://www.vikatan.com/news/general-news/families-in-trichy-affected-because-of-lock-down-got-help

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக