Ad

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

வங்கிகளிடம் வாதாடாவிட்டால் நமக்குத்தான் நஷ்டமா? ஒரு நேரடி அனுபவம்!

உங்கள் தகுதிக்கேற்ற பலன் கிட்டும் (You get what you deserve) என்பது பழமொழி. ஆனால், உங்கள் வாக்கு வன்மைக்கேற்ற பலன் கிட்டும் (You get what you negotiate) என்பது புது மொழி. அரசுடைமை வங்கிகள் பலமிழந்து, புதிய தனியார் வங்கிகள் தலையெடுக்கத் தொடங்கி இருக்கும் இந்தக் காலத்தில் இது நூற்றுக்கு நூறு உண்மை.

ஒரு பிரபல தனியார் வங்கி மேனேஜரிடம் பல நாள்கள் வாதாடியதில், தனது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 2% அளவு குறைக்க முடிந்ததாக ஒருவர் கூறியபோது என்னால் அதை நம்ப முடியவில்லை. ``அது எப்படிச் சாத்தியம்? வட்டி விகிதங்களை நிர்ணயிப்பது ரிசர்வ் வங்கி; அதைச் செயல்படுத்துவது வங்கியின் தலைமைச் செயலகம். அப்படி இருக்க, வெறும் பேச்சுவார்த்தைக்கு அடி பணிந்து ஒரு மேனேஜர் வீட்டுக் கடன் அக்கவுன்டின் வட்டி விகிதத்தைக் குறைப்பாரா?” என்றெல்லாம் தோன்றிக்கொண்டிருந்தது. ஆனால், என் கண்முன் இன்னொரு நண்பருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் வங்கிகள் நிறம் மாறி இருப்பதையும், வாயுள்ள பிள்ளைதான் இனி பிழைக்கும் என்பதையும் உறுதிப்படுத்தின.

(ஆர்.பி.ஐ அறிவித்தபடி வங்கிகளுக்கு வட்டியைக் குறைத்தபின்பும் கடன் வாங்கியவர் வட்டியைக் குறைக்கச் சொல்லி விண்ணப்பம் தரவில்லை என்கிற காரணத்துக்காகப் பழைய வட்டியையே வசூல் செய்துவரும் புதிய தலைமுறை மற்றும் சில பழைய தலைமுறை வங்கிகளின் போக்கு எத்தனை மோசமானது!)

மாதம்தோறும் ஃபாரின் ரெமிட்டன்ஸ்...

தங்கள் பிள்ளைகளுக்கு வெளிநாட்டில் படிக்கும் சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என்று தவமாய் தவமிருக்கும் நடுத்தர குடும்பத்துப் பெற்றோர் பலரில் என் நண்பரும் ஒருவர். அதற்கான பணத்தைச் சேர்க்க அவர் பட்ட பாடும், செய்த தியாகங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.

மாதம்தோறும் 2,000 டாலர் (ஏறக்குறைய ரூபாய் 1,50,000/-) பணத்தை அவர் தன் மகனின் படிப்பு மற்றும் தங்கும் செலவுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வருகிறார். அவர் வழக்கமாக அனுப்பும் தனியார் வங்கி மூலம் மே மாதம் பணம் அனுப்பியபோது, அதற்காக அவரிடம் ரூ.1,150 கமிஷன் மற்றும் ஜி.எஸ்.டி.யாக வசூலிக்கப்பட்டது.

அவர் வசித்த பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்ட தனியார் வங்கி ஒன்று (அதுவும் பிரசித்திபெற்ற வங்கிதான்) தாங்கள் அதை இன்னும் எளிதாக, வேகமாக அனுப்புவதாக உறுதியளித்ததன் பேரில் ஜூன் மாதம் அந்தப் புது வங்கி மூலம் மகனுக்கு 2,000 டாலர் அனுப்பினார் நண்பர்.

Card Transaction

கன்வர்ஷன் ரேட், கமிஷன், ஜி.எஸ்.டி...

மறுநாள் அவர் மெயிலுக்கு வந்த செய்தி ரூ.3,600 கமிஷனாக வசூலிக்கப்பட்டதாகத் தெரிவித்தது. அதோடு கன்வெர்ஷன் ரேட்டிலும் கிட்டத்தட்ட ரூ.1,000 அதிகம் வசூலித்திருப்பது புரிந்தது. வழக்கமாக வங்கி கமிஷனாக ரூ.1,150 செலவாகும் இடத்தில் ரூ.4,600 செலவாகி இருந்தது.

ஒரு முறைக்கு இழப்பு ரூ.3,450 என்றால் இன்னும் 20 மாதங்கள் பணம் அனுப்பும் நிலையில் ரூ.69,000 இழக்க நேரிடும் என்று உணர்ந்த அவர், புது வங்கிக் கிளைக்குச் சென்று விசாரித்தார். மே மாதம் பணம் அனுப்பிய விவரங்களை ஒப்பிட்டுக் காட்டி நிறைய வாதாடிய பின், அவரிடம் அதிகம் வசூலித்த பணத்தை திரும்பத் தருவதாகவும், இனி அவரிடம் ரூ.1,150 மட்டுமே கமிஷனாக வசூலிப்பதாகவும் வங்கி மேனேஜர் உறுதி அளித்தார்.

நிறம் மாறிய வங்கிகள்

பெற்றோர் மட்டுமல்ல; வெளிநாடுகளில் சுற்றுலா செல்வோர், வீடு வாங்குவோர், சிறு வர்த்தகம் செய்வோர், பங்குச் சந்தை போன்ற இடங்களில் முதலீடு செய்வோர், வெளிநாட்டில் வசிக்கும் உற்றாருக்குப் பரிசாக, கடன் உதவியாக அல்லது மருத்துவச் செலவுகளுக்காகப் பணம் அனுப்புவோர் அல்லது பாதிக்கப்பட்ட சில நாடுகளுக்கு டொனேஷன் தருவோர் போன்றவர்கள் பலரும் ஒவ்வொரு முறையும் தாங்கள் அனுப்பும் பணத்தில் குறைந்தபட்சம் 2.5% - 3% வரை அறியாமையால் இழக்கிறார்கள். இவை தவிர்க்கக்கூடிய இழப்புகள்.

கம்ப்யூடரைஸேஷன், இன்டர்நெட் பேங்கிங் எல்லாம் வந்தபின் வெளிநாட்டுக்குப் பணம் அனுப்புவது கடினமல்ல. அதைக் குறைந்த செலவில் அனுப்புவதுதான் நம்முன் இருக்கும் சவால். டிஜிபேங்க் ரெமிட், டிரான்ஸ்ஃபர் ஒய்ஸ், மனிக்ராம் போன்ற எத்தனை ஏஜென்சிகள், ஆப்கள் வந்தாலும், வங்கிகள் மூலம் பணம் அனுப்புவதையே பலரும் விரும்புகிறோம். ரிஸ்க் குறைவு; செலவு குறைவு என்பது நம் கணக்கு. வங்கிகள் இதுவரை கடைப்பிடித்த வெளிப்படைத்தன்மையும் நம்பகத்தன்மையும் கூட ஒரு காரணம். ஆனால், இப்போது நிலைமை சற்று மாறி இருப்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

US Dollar

கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

ஃபாரின் ரெமிட்டன்ஸைப் பொறுத்தவரை, வங்கிகள் நம்மிடம் வசூலிக்கும் தொகையில் இரண்டு விஷயங்கள். ஒன்று, கன்வெர்ஷன் ரேட். அதாவது, அமெரிக்க டாலர் அனுப்புவதாக இருந்தால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு - இது நிமிடத்துக்கு நிமிடம் மாறுபடும். இதன் உண்மைத்தன்மையை அறிவது கடினம். ஆனாலும் இரண்டு, மூன்று வங்கிகளின் ரேட்டை ஒப்பிட்டுப் பார்ப்பது நலம்.

இரண்டாவது, வங்கிகள் விதிக்கும் கமிஷன் மற்றும் வரிகள். இதை நாம் வங்கிகளின் வெப்சைட்டில் தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு வங்கியும் தங்கள் வெப்சைட்டில் காட்டும் கமிஷன் மற்றும் வரிகள் மிகக் குறைவு. சில வங்கிகள் இதை தெளிவாகத் தெரிவிப்பதுமில்லை. இந்த இரண்டிலுமே வங்கிகள் தங்கள் திறமையைக் காட்டி, அதிகம் வசூல் செய்கின்றன.

பலவித மறைமுகக் கட்டணங்கள்...

வங்கிகளில் பலவிதமான மறைமுகக் கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன. நாம் வங்கிகளின் இந்தப் போக்கை தெளிவாக எடுத்துரைத்து வாதாட முடிந்தால், நமக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்வதோடு, அடுத்து வரக்கூடிய இழப்புகளில் இருந்தும் நம்மைக் காத்துக்கொள்ள இயலும்.

வங்கிகளின் மீது அதீத நம்பிக்கை வைத்து, அவர்கள் காட்டும் இடத்தில் கையெழுத்து போட்டு, வேறு வேலை பார்க்கச் செல்லும் காலம் மலையேறிவிட்டது. 5 நிமிடங்கள் அதிகம் செலவழித்து வங்கிகள் தரும் ஸ்டேட்மென்டுகளை ஆராய்வது, ஒப்பிட்டுப் பார்ப்பது மற்றும் கேள்வி எழுப்புவதன் மூலம் இழப்புகளைத் தவிர்க்கலாம்.

வங்கிகளைப் பொறுத்தவரை இனி வாயுள்ள பிள்ளை பிழைக்கும். இனியாவது வங்கிகளிடம் வாதாடத் தொடங்குங்கள். இதுபோன்று உங்களுக்கும் ஏதேனும் சம்பவம் நடந்து நீங்கள் வங்கிகளிடம் பேசி லாபமடைந்திருக்கிறீர்களா... உங்கள் அனுபவத்தை கமென்ட்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்.



source https://www.vikatan.com/business/banking/how-negotiating-with-banks-will-help-you-to-save-money

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக