பிரதமரின் கிசான் நிதிஉதவி திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், விவசாயிகள் அல்லாத பல ஆயிரக்கணக்கானோர் போலியாக சேர்க்கப்பட்டு நிதிஉதவி பெற்றுள்ளனர். இதுதொடர்பாக, சி.பி.சி.ஐ.டி போலீஸார் தமிழகம் முழுவதும் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
வேலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், நிதிஉதவி பெற்ற 13,000 பயனாளிகளில் ஏராளமானோர் வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் அமைந்துள்ள 7 வட்டாரங்களுக்கும் சப்-கலெக்டர் தலைமையில் 7 தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுக்கள் பலகட்ட ஆய்வுகளை நடத்திவருகிறது. இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், கலவையை அடுத்த கணியூரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த நபர், சோளிங்கர் ஒன்றிய வேளாண் வட்டார உதவி இயக்குநர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக தற்காலிகப் பணியில் இருந்துள்ளார். கிசான் திட்ட மோசடியில் சுப்பிரமணிக்கு பங்கு இருப்பதால், சி.பி.சி.ஐ.டி போலீஸார் அவரை கைதுசெய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதேபோல், தனிக்குழுக்கள் நடத்திய விசாரணையில் 7 வட்டாரங்களில் பணிபுரிந்துவரும் மேலும் 8 கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்களுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, 8 கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்களையும் பணி நீக்கம் செய்து வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இவர்கள் யாரும் வெளியூர்களுக்கு செல்லக்கூடாது. விசாரணைக்கு அழைக்கும்போது கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/corruption/kisan-project-corruption-8-computer-operators-dismissed-in-vellore-district
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக