சூழலியல், கானுயிர் பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றிய விவாதங்கள் உலகம் முழுக்கவே முன்னெடுக்கப்படுகின்றன. இது பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் லண்டன் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம், 'வைல்ட்லைஃப் போட்டோ கிராபர் ஆப் தி இயர் -2020' (Wildlife Photographer of the Year -2020) போட்டி நடத்துகிறது. இந்தாண்டு 56-வது வருடம். போட்டியில் சுமார் 50,000 பேர் பங்கெடுக்க, அவற்றில் மிகவும் பாராட்டத்தக்க சில புகைப்படங்களை இப்போது வெளியிட்டிருக்கிறார்கள். அக்டோபர் 13-ம் தேதி இணையவழியில் நடக்கும் விருது விழாவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
வெளியிடப்பட்ட அந்த புகைப்படங்கள் பல நூறாண்டுகளுக்காகத் தேக்கிவைக்கப்பட்ட சில நொடிகள். இயற்கையின் அற்புதத்தை உணரவைக்கும் அர்த்தம் பொதிந்த கதைசொல்லிகள். சூழலியல் போருக்காகக் கவனம் குவிக்கும் பேராயுதங்கள்.
1
வடக்கு லண்டன் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம். தங்களின் உணவு தேவைக்காக நரிகள் எதுவேண்டுமானாலும் செய்யக்கூடியவை. தான் கண்டெடுத்த உணவைத் தட்டிப்பறிக்க முயலும் சகோதரனை முறைத்து நிற்கும் இந்த நரியின் புகைப்படம், நரியின் குணாதிசயங்களைப் பிரதிபலிக்கின்றன.
2
பற்றி எரிகின்றன பூமியின் காடுகள். மனிதனின் பேராசை நம் வனங்களைச் சாம்பலாக்கிக் கொண்டிருக்கின்றன. அமேசான் வனத்தில் மனிதன் வளர்த்த தீயின் இடையில் கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் இந்த ஒற்றை மரம் மனிதனின் மூடத்தனத்தை 'நேரில் கண்ட சாட்சி'.
3
உலகின் மிகக் கொடிய விஷமுள்ள உயிரினங்களில் ஒன்று இந்த வான்டெரிங் சிலந்திகள். இவை இலையின் அதிர்வுகளைக் கூட உணரும் நுண் திறனுள்ளவை. நீண்ட நேரக் காத்திருப்பின் பலனாக, அந்த சிலந்தி உணவிற்காகக் கண்ணாடி தவளைகளின் முட்டையை உடைத்து உறிஞ்சும் தறுவாயில் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
4
இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் திரிதிமான் முகர்ஜி என்பவரால் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. ஹிந்தியில், கரா என்றால் உருண்டையான பானை என்பது பொருள், இந்த முதலையின் உருண்டையான மூக்கின் அமைப்பால் கரியல் என இதற்குப் பெயர் வந்தது. தற்போது உலகில் வெறும் 650 கரியல் முதலைகள் மட்டுமே உள்ளன. மிகவும் அருகிவரும் உயிரினமான இந்த கரியல் முதலை தன் குட்டிகளோடு நீந்தும் காட்சி, துளிர்விட்டிருக்கும் நம்பிக்கையின் அடையாளம்.
5
இறந்த அல்பட்ரோஸ் பறவைகள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் இந்தப் புகைப்படம் உண்மையில் ஒரு வெற்றிக் கதையின் ஆதாரம். தென் ஆப்பிரிக்கா கடற்கரையில் மீன்களுக்காகப் போடப்படும் தூண்டில்களில் சிக்கி பல்லாயிரக்கணக்கான அல்பட்ரோஸ் பறவைகள் இறக்கின்றன. பலரின் தொடர் முயற்சியால் தற்போது பெரும்பாலும் அவற்றிற்கு ஊறுவிளைவிக்காத தூண்டில்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதன் விளைவாகக் குறைவான பறவைகளே தற்போது மரிக்கின்றன என்பதற்குச் சாட்சி இந்த படம்.
6
கென்யாவில் மாசாய் மாறா எனும் இடம் ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. அங்குள்ள மாறா ஆற்றின் நீர்நிலைகள் வறட்சியின் காரணமாக நீர் குறைந்து சேறு நிரம்பி காணப்படுகின்றன. அங்கு வாழும் நீர்யானைகள் சுமார் 3 நிமிடங்களுக்கு ஒருமுறை மூச்சுவிடுவதற்காக நீரின் மேற்பரப்புக்கு வந்து செல்லும். அப்படி வெளிப்பட்ட ஒரு நீர்யானையின் திறந்த கண்களில் தெரிகிறது வறட்சியின் வலி.
7
வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளின் காட்டில் காணப்படும் அரியவகை உயிரினம் இந்தக் காடுகள். இந்தியாவைச் சார்ந்த கானுயிர் புகைப்பட கலைஞரான 12 வயது அர்ஷ்தீப் சிங் இந்தப் புகைப்படத்தை எடுத்திருக்கிறார். மர உச்சிகளில் வசிக்கும் இந்த குரங்குகளைக் காண்பதே அரிது. நீண்ட டெலி லென்ஸ் உதவியோடு இரண்டு நாள்கள் காத்திருப்பிற்குப் பிறகு இந்தப் புகைப்படத்தை எடுத்திருக்கிறார் அர்ஷ்தீப்.
8
மரத்தில் அமர்ந்திருக்கும் உரால் ஆந்தைகளின் முக்கிய உணவு சிவப்பு அணில்கள். தன் விருப்பமான இரை தப்பித்துப்போவதைச் சலனமின்றி பார்த்துக் கொண்டிருக்கும் ஆந்தைகளும், வேட்டைக்காரன் அங்கிருப்பதை அறியாது அங்குச் சென்ற அணில், ஆந்தைகளைக் கண்டதும் தெறித்து ஓடுவதும் ஒன்றாய் படம் பிடிக்கப்பட்டதே இந்தப் புகைப்படத்தின் சிறப்பம்சம்.
லண்டன் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம், 'வைல்ட்லைஃப் போட்டோ கிராபர் ஆப் தி இயர் -2020' போட்டியில் மிகவும் பாராட்டத்தக்க படங்களென மேலும் பல புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது.
source https://www.vikatan.com/literature/environment/highly-commendable-pictures-from-the-wildlife-photographer-of-the-year-event
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக