``ஆட்டமா தேரோட்டமா... நோட்டமா சதிராட்டிமா... வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான் ஆடுறேன்... வலை போடுறேன்... பாடுறேன் பதில் தேடுறேன்!''- கன்னி வெடியாய் 80'ஸ் கிட்ஸ்களின் மனதில் வெடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு 50 வயதாம்!
'கேப்டன் பிரபாகரன்' தொடங்கி 'சூப்பர் டீலக்ஸ்' வரை இன்றும் இளைஞர்களை ஈர்க்கிறது அந்த ஸ்டைலும், அந்த கெத்தும், அந்த குரலும்!
''வயசானாலும் உன்னோட அழகும் ஸ்டைலும் இன்னும் அப்படியே இருக்கு!'' ரம்யா கிருஷ்ணன் என்றாலே இந்த டயலாக்தான் எல்லோருக்கும் நினைவுக்குவரும். ஆனால், ரம்யா அரை சதம் அடித்துவிட்டார் என்று யாராலும் நம்ப முடியவில்லை. ரம்யா கிருஷ்ணனின் வயது மட்டுமல்ல அவரைப் பற்றிய நம்ப முடியாத பல தகவல்களும் உண்டு. வாங்க நம்பலாம்!
இந்தியாவின் முக்கியமான 5 மொழி சினிமாக்களில் கிட்டத்தட்ட 260-க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் அறிமுகமானது தமிழ் சினிமாவில்! தன்னுடைய 13 வயதில் 1984-ல் 'வெள்ளை மனசு' என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அவருக்கு ஜோடி யார் தெரியுமா? ஒய்.ஜி.மகேந்திரா... ஓய் ஜி?!
படம் ரிலீஸான சுவடே தெரியாததால் ரம்யா அப்செட். 'ராஜா எங்க ராஜா' என்ற படத்தில் கவுண்டமணிக்கு ஜோடி என அடுத்தடுத்து வந்தது எல்லாமே எசகுபிசகான வாய்ப்புகள். ஆசை ஆசையாய் தெலுங்கு சினிமா பக்கம் வாய்ப்பு தேடிப்போனார். 1986-ல் 'பலே மித்ருலு' என்ற படத்தில் பானுப்ரியா ஹீரோயினாக நடித்தார். அதில் ஆனந்த் பாபுவுக்கு ஜோடியாக செகண்ட் ஹீரோயின் சான்ஸ். படம் பப்படமாக நொந்து நூடுல்ஸ் ஆனார் ரம்யா.
'படிக்காதவன்', 'பேர் சொல்லும் பிள்ளை' போன்ற ரஜினி-கமல் படங்களில் துண்டுதுக்கடா ரோல்களில் பரிதாபமாக பேக் டு தி பெவிலியன் வந்தார். 1991-ல் வெளியான 'கேப்டன் பிரபாகரன்' படத்தில் சரத்குமாருக்கு ஜோடி ரம்யா கிருஷ்ணன்தான். அதில் கெட்ட ஆட்டம்போட்ட ரம்யாவின் 'ஆட்டமா தேரோட்டாமா' பாடல்தான் ட்ரெண்ட்செட்டர்.
'அழகா இருக்கு பொண்ணு... ஆனா?' என்பதுதான் அப்போது இவரைப் பற்றிய இயக்குநர்களின் மதிப்பீடாக இருந்தது. தெலுங்கில் பானுசந்தர், மோகன் பாபு என சில ஹீரோக்கள் கைகொடுக்க, ஹீரோயினாக மெல்ல பிக்-அப் ஆக கிராஃபும் ஏறியது. மோகன் பாபுவுக்கு ஹிட் ஹீரோயினாக டோலிவுட்டில் கொடியேற்றியவருக்கு சொந்த மண்ணில் சாதிக்க முடியவில்லையே என்கிற ஏக்கம். ஆனால், அதை மறக்கும் விதமாக தெலுங்கில் நாகார்ஜுனாவோடு அடுத்தடுத்து 5 படங்கள், ராஜசேகரோடு 2 படங்கள் என சடசடவென டோலிவுட்டில் அப்போதைய ஹிட் ஹீரோயினான மீனா - ரோஜா-சௌந்தர்யா- நக்மாவுக்கு டஃப் ஃபைட் கொடுத்தார். 'ஹலோ பிரதர்' படம் போல க்ளாமர் பண்ணவும் தெரியும், 'அன்னமய்யா' போல பெண்கள் விழுந்து கும்பிடும் ரோலிலும் நடிக்கவும் தெரியும் என வெரைட்டி காட்டினார். இதனால் ஆந்திர தேசத்தின் நந்தி விருது உள்பட பல விருதுகள் அவர் வீட்டு வரவேற்பறையை அலங்கரித்தன.
அப்படியே யாஷ் சோப்ராவின் தயவில் பாலிவுட்டிலும் 'பரம்பரா' படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்க 'கல்நாயக்', 'சாஹத்', 'பனாரசி பாபு', 'படே மியான் சோட்டே மியான்' என சில படங்களில் நடித்தார்.
தமிழ் திரையுலகம் அவரை கடவுளாகவே பூஜிக்க தொடங்க சில சாமி படங்களில் நடித்ததுதான் காரணம். 80-களின் இறுதியில் ஆரம்பித்து 2k வரை 'சர்வம் சக்திமயம்', 'மீனாட்சி திருவிளையாடல், 'அன்னை காளிகாம்பாள்', 'ராஜகாளியம்மன்', 'ஸ்ரீராஜராஜேஸ்வரி', 'நாகேஸ்வரி' என எல்லோர் வீட்டின் காலண்டர்களிலும் இடம்பிடிக்கும் அளவுக்கு அம்மன் படங்களில் நடித்தார்.
1999-ல் வந்த 'படையப்பா'தான் ரம்யாவின் உச்சம். நீலாம்பரி கேரக்டர் இப்போதுவரை கல்ட் க்ளாசிக் அந்தஸ்த்தை அவருக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறது. ரஜினிக்கு சரிசமமாக வில்லத்தனம் காட்டும் ரோலில் நடிப்பில் மிரட்டியிருந்தார் ரம்யா. ரஜினி படத்தில் ரஜினியை திட்டும் கேரக்டரில் நடித்தும் ரஜினி ரசிகர்களால் திட்டப்படாத ஒருவர் என்றால் அது ரம்யாவாகத்தான் இருக்கும். எல்லோராலுமே ரசிக்கப்பட்டார். அந்த அளவுக்கு அந்த திமிரழகி நீலாம்பரியாகவே மிளிர்ந்தார் ரம்யா.
'பாட்டாளி', 'பட்ஜெட் பத்மநாபன்', 'பஞ்சதந்திரம்' என அடுத்தடுத்து வெரைட்டி காட்டினார். அதிலும் பஞ்சதந்திர மேகி கேரக்டர் அல்ட்டிமேட். கமலுக்கு தண்ணி காட்டும் வில்லத்தன காமெடி கேரக்டர் அது! ரம்யாவைத் தவிர யார் நடித்தாலும் முகம் சுழிக்க வைக்கும் ஒரு பாத்திரம். அனாயசமாக அசால்ட் காட்டியிருந்தார். தமிழ் சினிமா இருக்கும்வரை மேகி காமெடியும் நிலைத்திருக்கும்.
2015-ல் 'பாகுபலி'யில் பல பெரிய நடிகர்களுக்கிடையே ரம்யா தனியாகவே தெரிய அவரின் அந்தத் திமிரான தோற்றமே காரணம். குறிப்பாக நீலாம்பரியின் நீட்சி போலவே இருந்தது அந்த ராஜமாதாவின் பாத்திர வார்ப்பு. மகனையே கொல்ல உத்தரவிட்டதை மறந்து பேரனைக் காப்பாற்ற உயிரைக் கொடுக்கும் காட்சியில் விசில் பறந்தது!
ரம்யாவின் இன்னொரு ப்ளஸ் அவரின் வாய்ஸ். 'படையப்பா'வின் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்டாகட்டும், 'பாகுபலி'யின், 'இதுவே என் கட்டளை. என் கட்டளையே சாசனம்!' என்கிற அரசாணையாகட்டும் வசன உச்சரிப்பில் ரசிகர்களை அலறவிட்டவர் ரம்யா கிருஷ்ணன். தனித்துத் தெரியும் ஆளுமை வழியும் பிரவாகம் அவர் குரல்!
தென்னிந்திய சினிமாக்களின் மூலம் விகடன் விருதுகள் உள்பட எக்கச்சக்க விருதுகளை வாரிக்குவித்திருக்கும் ரம்யா, டோலிவுட் இயக்குநர் கிருஷ்ண வம்சியைக் காதல் மணம் புரிந்தவர். நடிகரும், அரசியல் விமர்சகருமான மறைந்த சோ இவரின் சொந்த தாய்மாமா என்பது வெளியே அதிகம் தெரியாத சுவாரஸ்ய தகவல்!
நீலாம்பரியாக, அம்மனாக, ராஜமாதாவாக மட்டுமே அதிகம் ரசிக்கப்பட்ட ரம்யா கிருஷ்ணன் தமிழ் சினிமா இதுவரை பார்த்திடாத வித்தியாசமான அம்மா கேரக்டரில் நடிக்கவும் தயங்கியதில்லை. அதற்கு 'சூப்பர் டீலக்ஸ்' படமே லேட்டஸ்ட் சாட்சி! லீலா பாத்திரத்துக்காக 37 டேக்வரை பொறுமையாக கோபப்படாமல் மெனக்கெட்டு நடிப்பதெல்லாம் நடிப்பின் மீது கொண்ட தாகமன்றி வேறென்ன?
Also Read: "எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்!"
மிஷ்கினை ஓங்கி அறைந்துவிட்டு... ''நீ ஒழுங்கா இருந்தா நாம் ஏன்யா இப்படி கஷ்டப்படுறேன்... காசு கேக்குறாங்க தனசேகரா, காசு கேக்குறாங்க தனசேகரா... போய் கொண்டுவா தனசேகரா'' என மகனைக்காப்பாற்ற தவித்தலையும் காட்சியில் ரம்யாவின் நடிப்பெல்லாம் தெய்வ லெவல்!
அதனால்தான் ஐம்பதிலும் OTT-யில் 'குயின்'ஆக கலக்கினார் ரம்யா. ''ஜெயலலிதாவின் பயோபிக்கில் நடிக்க ரம்யாவைவிட சிறந்த சாய்ஸ் யாருமில்லை!'' என்பது கௌதம் வாசுதேவ் மேனனின் ஸ்டேட்மென்ட் மட்டுமல்ல நம் எல்லோரின் ஏகோபித்த கருத்தும் அதுதான். இன்னும் இன்னும் பல தளங்களில் களங்கள் காத்திருக்கு.
தமிழ் சினிமாவின் குயினாக ராஜமாதாவின் குரல், என்றும் எவர்கிரீன் நீலாம்பரியாக ஒலித்துக்கொண்டே இருக்கும். ராஜமாதா ஆள இன்னும் பல ராஜ்ஜியங்கள் காத்திருக்கின்றன...
கொஞ்சம் லேட்தான். இருந்தாலும், பிறந்தநாள் வாழ்த்துகள் ரம்யா கிருஷ்ணன்!
source https://cinema.vikatan.com/tamil-cinema/ramya-krishnan-turns-50-a-look-back-at-her-career
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக