செல்லப்பிராணிகளை வளர்ப்பது மனதுக்கு மட்டுமல்ல, வருமானத்துக்கும் ஒரு பாசிட்டிவ் வழிதான். செல்லப்பிராணிகளை வாங்கி விற்பது என்று முடிவு செய்துவிட்டால், அவற்றைத் தாயிடமிருந்து எத்தனையாவது நாளில் எடுக்க வேண்டும், எத்தனையாவது நாளில் விற்க வேண்டும், எந்த இனம் என்ன விலை என்பவை பற்றித் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். அதற்காக, முதலில் நாய்க்குட்டிகளை விற்பனை செய்துவருகிற திருநெல்வேலியைச் சேர்ந்த மணிகண்டனிடம் பேசினோம்.
``நான் கடந்த 10 வருடங்களாக செல்லப்பிராணிகளை விற்பனை செய்துவருகிறேன். லேபரடார், பக், ராட் வீலர், பொமேரேனியன், டாஷுண்டு, டால்மேஷன், ஜெர்மன் ஷெப்பர்டு உள்ளிட்ட வெளிநாட்டு நாய்களில் ஆரம்பித்து நம்முடைய சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் உள்ளிட்ட நாட்டு நாய்கள் வரைக்கும் மொத்தம் 20 வகை நாய்க்குட்டிகளை விற்பனை செய்துவருகிறேன்.
தாயிடமிருந்து எப்போது நாய்க்குட்டிகளை எடுக்க வேண்டும்?
ஒரு நாய்க்குட்டியை அதன் ஓனரிடம் இருந்து விலை பேசிவிட்டாலும், நாய்க்குட்டி பிறந்து 40 முதல் 45 நாள்கள் வரைக்கும் தாயிடம் பால் அருந்த விட வேண்டும். ஆனால், குட்டி பிறந்த 30-வது நாளிலிருந்தே அதற்குத் தேவையான அளவு தாய்ப்பால் கிடைக்காது. அந்த நேரத்தில் பப்பி செரிலாக்கை சுடுநீரில் கலந்து கொடுக்க வேண்டும். குட்டி பிறந்த 30-வது நாளில் அதற்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் விற்பனை செய்யும்போது நாய்க்குட்டி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். நாய்க்குட்டிகளை விற்பனை செய்யும் வரைக்கும் அவற்றைக் கட்டிப்போடக் கூடாது. அப்படிச் செய்தால் அவற்றின் வளர்ச்சி பாதிக்கும். சில தாய் நாய்கள் குட்டிகளை சரியாகக் கவனிக்காது; சுத்தமாக வைத்திருக்காது; பாலூட்டவும் செய்யாது. இதைக் கவனித்து சரிசெய்யவில்லையென்றால், குட்டி நோஞ்சானாக இருக்கும். அந்த இனத்துக்கான மார்க்கெட் விலையில் விற்க முடியாமல் போய்விடும். நாய்க்குட்டிகள் புழங்குகிற இடம் சுத்தமாக இருக்க வேண்டும். அதன் பெற்றோருக்கு உன்னி இருந்தால் குட்டிகளுக்கும் வந்துவிடும். இதையும் கவனித்து சுத்தமாக்க வேண்டும்.
பெட் பிசினஸ் செய்பவர்கள் நாய்க்குட்டிகளை வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயம் இது!
`நாய்க்குட்டி விற்பனை' பிசினஸ் செய்யப்போகிறீர்கள் என்றால், நாய்க்குட்டிகளின் பெற்றோரைப் பார்த்துவிட்டுதான் குட்டியை வாங்க வேண்டும். இல்லையென்றால், நாய்க்குட்டி வளர வளர அதன் குவாலிட்டி குறைய ஆரம்பிக்கும். இதனால் உங்களிடமிருந்து நாய்க்குட்டிகளை வாங்கிய கஸ்டமர்களின் திருப்தியின்மைக்கு ஆளாக நேரிடும்.
நாய்க்குட்டியின் அம்மாவும் அப்பாவும் ஓர் இனத்தைச் சேர்ந்த கரெக்டான ஜோடியாகத்தான் இருக்கும். ஆனால், அதன் உரிமையாளர் கொஞ்சம் கேர்லெஸ்ஸாக இருந்தாலும் தெரு நாயுடன் இணைந்துவிடும். அப்படிப் பிறக்கிற குட்டிகள் ஆரம்பத்தில் அதனுடைய இனத்தின் இயல்புப்படி இருக்கும். அதனால், விற்பனை செய்துவிடலாம். ஆனால், 3 அல்லது 4 மாதத்தில் குட்டிகளின் தரமும் அதன் நீளம் அல்லது உயரம் ஒரிஜினல் போல இருக்காது. தவிர, சரியான இணையுடன் இணைந்த நாய், சில நாள்களில் தெரு நாயுடனும் இணைந்துவிட்டாலும், அது போடுகிற அத்தனை குட்டிகளும் தரம் குறைவாகத்தான் இருக்கும், கவனம்.
உதாரணத்துக்கு, லேப்ரடாரின் சிறப்பே சிங்கிள் கலர்தான். தெரு நாய் கலந்துவிட்டால், இரண்டு, மூன்று நிறங்கள் சேர்ந்துவிடும். ஆரம்பத்தில் லேப் மாதிரியான இருக்கிற இந்த நாய்கள், சில மாதங்களில் தெருநாய் போல மாறிவிடும். உங்கள் பிசினஸின் மீதான நம்பிக்கையும் கஸ்டமர்களிடம் போய்விடும்.
எந்த நாய்க்குட்டி, என்ன விலை?
இனத்தைப் பொறுத்து 2,500 ரூபாய் முதல் 80,000 வரைக்கும் நாய்க்குட்டிகளை விற்பனை செய்யலாம்.
பொமேரேனியன் 2,500 முதல் 5,000 வரை,
டாஷுண்ட் 2,500 முதல் 7,000 வரை,
லேப்ரடார் 8,000 முதல் 15,000 வரை,
ஜெர்மன் ஷெப்பர்டு 10,000 முதல் 20,000 வரை,
பக் 8,000 முதல் 15,000 வரை,
சைபீரியன் ஹஸ்கி 40,000 முதல் 50,000 வரை,
நாட்டு நாய்கள் என்றால் 5,000 முதல் 15,000 வரைக்கும் விற்பனை செய்யலாம். இவையெல்லாம் கமர்ஷியல் ரேட். நீங்கள் விற்கிற அம்மா அல்லது அப்பா டாக் ஷோக்களில் கலந்துகொண்டு ஜெயித்தவை என்றால் இன்னும் விலை கூடுதல் விலை வைக்கலாம். நீங்கள் விற்பனை செய்கிற நாய்க்குட்டியின் இனத்துக்கு தரச்சான்று வழங்குகிற உலகளாவிய அமைப்பான `கென்னல் கிளப்'பில் (The Kennel Club of India) சான்றிதழ் பெற்றிருந்தீர்களென்றால், இன்னும் கூடுதல் விலை வைத்து விற்கலாம்.
பொதுவாக வெளிநாட்டு நாய்களைத்தான் அதிக பேர் வாங்குகிறார்கள். கடந்த மூன்று நான்கு வருடங்களாக பாரம்பர்ய மாடுபோல, நாட்டு நாய்களை விருப்பமாக வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
நிறைய பேர் ஆசைக்காக நாய்க்குட்டிகளை வாங்கிவிடுவார்கள். ஆனால், சரியாகப் பராமரிக்க மாட்டார்கள். நான் நாய்க்குட்டியை விற்பனை செய்யும்போதே, அதை எப்படிப் பராமரிக்க வேண்டும், எப்போது தடுப்பூசி போட வேண்டும், என்னென்ன சாப்பிடக் கொடுக்க வேண்டும் என்பதுபற்றி தெளிவாக சொல்லி அனுப்புவேன். அதை சிலர் சரியாக ஃபாலோ செய்வார்கள். சிலர் செய்வதில்லை. அப்படிப்பட்டவர்கள் நாய்க்குட்டியை பலவீனமாக்கிவிட்டு அதன்பிறகு உதவி கேட்பார்கள்.
குழந்தைகளுக்கு என்னென்ன நாய்க்குட்டிகளை வாங்கிக் கொடுக்கலாம்?
முடியில்லாத நாய்க்குட்டிகளில் லேபரடார், டேஷுண்ட் இரண்டும் ரொம்ப ஃபிரெண்ட்லி. முடியுள்ள நாய்களில் பொமேரேனியன் குழந்தைக்களுக்கேற்ற பெட்.
இதனிடம் கவனமாக இருங்கள்!
வீட்டையும் உங்களையும் பாதுகாப்பதில் கெட்டி ராட் வீலர்தான். ஆனால், இதை வாரக்கணக்கில் கட்டிப் போடாமல், ஸ்டிரெஸ் கொடுக்காமல், தினமும் வாக்கிங் அழைத்துச் செல்வது என்று வளர்க்க வேண்டும். இதெல்லாம் செய்யவில்லையென்றால், ராட் வீலரின் நட்பான இயல்பு முரட்டுத்தனமாக மாறிவிடும்.
Also Read: 7 சென்ட் நிலம்... மாடுகள், நாட்டுக்கோழிகள் மூலம் மாதம் ₹30,000 வருமானம்... அசத்தும் பெண் பட்டதாரி!
எப்படி வாங்குவது, எப்படி விற்பனை செய்வது?
நாய்க்குட்டி வளர்ப்பவர்களை சமூக வலைதளங்கள் மூலமாக அல்லது கால்நடை டாக்டர்கள் மூலமாகக் கண்டறிந்து, அவர்களிடமிருந்து நாய்க்குட்டிகளை வாங்க வேண்டும். நாய்களின் இனங்கள் குறித்து உங்களுக்கு சரிவரத் தெரியாது என்றால், நாய்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணரான மருத்துவர்களின் உதவியை நாடலாம்.
நாய்க்குட்டிகளை விற்க வேண்டுமென்றால், அதற்கான டீலர்களை அணுகலாம் அல்லது முகநூல் வழியாக விற்பனை செய்யலாம். மொத்தத்தில் பெட் பிசினஸில் நாய்க்குட்டிகளை விற்பனை செய்வதற்கு முதலீடு குறைவு. லாபம் மாதத்துக்கு 20,000 முதல் 80,000 வரை கிடைக்கும். மொத்தத்தில் டாக் லவ்வர்களுக்கு ஏற்ற பிசினஸ் இது!’’
source https://www.vikatan.com/news/animals/an-introduction-to-pet-business-and-nature-of-puppies
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக