6 வகையான பழங்குடியின மக்கள் வாழும் நீலகிரியில், பழங்குடி மக்களின் கல்விக்காக ஊட்டி அருகிலிருக்கும் முத்தோரை பாலடா பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் 'ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளி' இயங்கி வருகிறது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 300-க்கும் மேற்பட்ட பழங்குடி மாணவ, மாணவிகள் இங்கேயே தங்கி கல்வி பயின்று வருகின்றனர். நீலகிரியைச் சேர்ந்த பழங்குடி மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் இங்குத் தங்கிப் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், சமீப நாள்களாகப் பழங்குடி மாணவர்களுக்குத் தரமற்ற உணவுகளை வழங்குவதாகவும், குடிநீர் மற்றும் கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாகவும் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடத்தில் கூறியிருக்கிறார்கள். இது குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பெற்றோர் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால், நேற்றைய தினம் பழங்குடி மக்கள் திடீரென பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து முற்றுகையில் ஈடுபட்டனர். மேலும் சில பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஏகலைவா பள்ளி தரப்பில் கேட்டபோது, ``பெற்றோர்களின் புகார் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ மாணவிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்" என்றனர்.
மாதிரி பள்ளிகள் என்று சொல்லப்படும் 'ஏகலைவா' போன்ற பள்ளிகளே மாணவ, மாணவிகளின் நலனில் அக்கறை காட்டாமல் இது போன்று செயல்பட்டு வருவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது .
Also Read: நீலகிரி: வாட்டர் பாட்டில் சர்ச்சையில் வனத்துறை அமைச்சர்! - வன உயிரின வார விழாவில் நடந்தது என்ன?
source https://www.vikatan.com/government-and-politics/politics/ooty-eklavya-school-controvercy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக