ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி போன்ற ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. பொதுவாக வனப்பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வது, வனத்தை ஊடுருவிச் செல்லும் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளைத் துரத்துவது என்றே யானைகளின் சேட்டைகள் இருக்கும். ஆனால், சமீபகாலமாக சத்தியமங்கலம் பண்ணாரி சோதனைச் சாவடி அருகே கூட்டம் கூட்டமாக யானைகள் கேஷூவலாக நிற்கின்றன.
ஒருசில ஒற்றை யானைகள் ரெகுலராக செக்போஸ்டிற்கு வந்து செல்வதுமாக இருக்கின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, பண்ணாரியம்மன் சோதனைச் சாவடி அருகே சாலையின் குறுக்கே வரும் வாகனங்களை வழிமறித்து நின்றிருக்கிறது. அதனையடுத்து சோதனைச் சாவடியில் இருந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சத்தம் எழுப்பி யானையை விரட்ட முயற்சித்தித்திருக்கின்றனர்.
அசராமல் சாலையின் குறுக்கும் நெடுக்குமாக சிறிது நேரம் அட்டகாசம் செய்த அந்த யானை, பண்ணாரியம்மன் கோவில் எதிரே இருந்த பெட்டிக் கடைக்குள் புகுந்திருக்கிறது. சத்தம் கேட்டு பெட்டிக்கடையினுள் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளார். கடைக்குள் புகுந்த யானை கடையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் சேதப்படுத்தியது. இச்சம்பவத்தால் பண்ணாரி செக்போஸ்டில் கடை வைத்திருப்பவர்கள் மிரண்டு போய்க் கிடக்கின்றனர்.
"கர்நாடகாவிலிருந்து கரும்பு லோடு ஏற்றி வரும் லாரிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக எடையினை ஏற்றி வருகின்றனர். செக்போஸ்டில் உள்ள நுழைவு வாயிலில் நுழையும்போது, லாரியில் அடுக்கப்பட்டிருக்கும் கரும்பின் அளவைக் குறைத்தாக வேண்டிய நிலை ஏற்படும். அப்போது லாரி டிரைவர்கள் வண்டியிலுள்ள கரும்பை எடுத்து செக்போஸ்ட் அருகே சாலைகளில் வீசிவிடுகின்றனர். அந்த கரும்பினுடைய வாசத்தைப் பிடித்துக்கொண்டு தான் காட்டிலிருக்கும் யானைகள் செக்போஸ்டிற்கு வருகின்றன. நாய்க்குட்டிகளை போல அமைதியாக சாலையோரம் நின்று கரும்புகளை ருசிக்கும் யானைகள், சில நேரங்களில் அட்டாகசமும் செய்கின்றன. வனத்துறையினர் தான் இந்தப் பிரச்னைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்கின்றனர் அந்த பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள்.
source https://www.vikatan.com/news/animals/wild-elephants-roaming-in-the-forest-road-check-posts-at-erode
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக