Ad

திங்கள், 14 செப்டம்பர், 2020

சேலம்: கிசான் திட்ட போலி விவசாயிகள் விவகாரம்... நிதியைத் திரும்பப்பெற ஊர்தோறும் தண்டோரா!

பிரதமரின் விவசாயிகளுக்கு நிதி உதவும் திட்டமான கிசான் சம்மான் திட்டத்தில் தமிழகத்தில் 120 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது. இதை சி.பி.சி.ஐ.டி விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் பல குழுக்கள் அமைக்கப்பட்டு முறைகேடாகப் பெறப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் தொடர்ந்து விவசாயத்தை மேற்கொள்ளவும் உதவும் வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜ்னா 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 5 ஏக்கருக்குக் கீழ் உள்ள சிறுகுறு விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. பிறகு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு அனைத்து விவசாயிகளுக்கும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

தண்டோரா

இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2,000 வீதம் மூன்று முறை 6,000 வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இருக்கும் 18 ஆயிரம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகள் சரி பார்க்கப்பட்டன. இதில் மோசடியில் ஈடுப்பட்டதாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் 6 கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 1 கோடியே 80 லட்சம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கலெக்டர் ராமன் தெரிவித்தார். இதையடுத்து சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுக்காவுக்கு உட்பட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களை விவசாயிகள் என்று பதிவு செய்து பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியைப் பெற்றுள்ளனர். அவர்கள் இந்த நிதியைத் திரும்ப செலுத்தச் சொல்லி கிராமங்கள் தோறும் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இடையப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

இது தவிர பல கிராமங்களில் கிசான் நிதியை முறையாகப் பெற்றவர்களின் பெயர்கள் ரேசன் கடைகள், ஊராட்சி அலுவலகங்களிலும் ஒட்டப்பட்டு வருகிறது. இதுபற்றி சேலம் மாவட்டம் ஆத்தூர் தாசில்தார் வெங்கடேசனிடம் கேட்டதற்கு, ''வேளாண்மைத் துறை முறையாக ஆவணங்களைச் சரிபார்க்காமல் விவசாயிகள் என்று பதிவு செய்து கிசான் சம்மான் திட்டத்தில் பணம் வழங்கி விட்டார்கள். மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி ஒவ்வொரு கிராமத்திலும் தண்டோரா போட்டு அந்தப் பணத்தைத் திரும்பச் செலுத்த வலியுறுத்தி வருகிறோம்'' என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/dandora-announcements-made-to-recover-money-of-pm-kisan-scheme-in-salem

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக