Ad

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

சென்னை: திருட்டு செல்போன்களுக்குப் போதை மாத்திரைகள்! - பகீர் பின்னணி

கடந்த 2-ம் தேதி, சென்னை பெசன்ட் நகர், ஆவின் பால் பூத் அருகே ராமாபுரத்தைச் சேர்ந்த பாபா என்பவரின் செல்போனை கத்திமுனையில் பைக்கில் வந்த இளைஞர்கள் பறித்துச் சென்றனர். அதே நாளில் பெசன்ட் நகர் 3-வது அவென்யூவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுந்தரம் என்பவரிடம் கத்திமுனையில் ஐ-போன் மற்றும் இரண்டு சவரன் செயின் வழிப்பறி செய்யப்பட்டது. கடந்த 3-ம் தேதி, சென்னை திருவான்மியூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த சத்தியவாணி (25), அடையாறு, இந்திரா நகர் முதல் அவென்யூவில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது டியோ பைக்கில் வந்த இருவர் சத்தியவாணியை வழிமறித்து, கத்திமுனையில் மிரட்டி அவரின் செல்போனைப் பறித்து சென்றனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

தொடர்ந்து செல்போன், செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்ததால் அடையாறு துணை கமிஷனர் விக்ரமனின் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் கௌதமன் தலைமையில், இன்ஸ்பெக்டர் மனோகரன், தலைமைக் காவலர் முகிலன், காவலர் சதீஷ்குமார், கிரி, ஜானி, விஜய், சண்முகானந்தம், லோகநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் வழிப்பறி நடந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்ட பைக்கின் பதிவு நம்பர் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அது திருட்டு பைக் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் திருவல்லிகேணி பகுதியைச் சேர்ந்த மொய்னுதீன் (20), சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பனையூர் பகுதியைச் சேர்ந்த சாயுப் ஹுசைன், சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மூவரும் சேர்ந்து வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களைப் பிடித்த போலீஸார் மூன்று பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கைதான மொய்னுதீன், சாயுப் ஹுசைன், 17 வயது சிறுவன் மூவரும் நண்பர்கள். இவர்களில், 17 வயது சிறுவன் சென்னையிலுள்ள ஐ.டி.ஐ-யில் படித்துவருகிறார். சாயுப் ஹீசன், சென்னை ராயப்பேட்டையிலுள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்துவருகிறார். 17 வயது சிறுவன்மீது சென்னை திருவான்மியூரில் கத்திமுனையில் வழிப்பறி செய்த வழக்கு ஒன்று நிலுவையிலுள்ளது. கொரோனா ஊரடங்கில் வீடுகளிலேயே முடங்கிக்கிடந்த இவர்கள், வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கு 17 வயது சிறுவன் மூளையாகச் செயல்பட்டிருக்கிறான். இதற்காக சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் டியோ பைக் ஒன்றைத் திருடியிருக்கிறார்கள். பின்னர் அந்த பைக்குக்கு 'PICS ART' என்ற மொபைல் அப்ளிகேஷன் மூலம் ஆர்.சி புக்கை எடிட் செய்து, போலியான ஆர்.சி புக்கைத் தயாரித்திருக்கிறார்கள். பின்னர் அந்த பைக்கில் 17 வயது சிறுவனின் போட்டோவை ஓட்டிக்கொண்டு வழிப்பறிச் சம்பவங்களில் மூவரும் ஈடுபட்டுவந்திருக்கிறார்கள்.

Also Read: சென்னையில் அதிகரித்து வரும் செல்போன் திருட்டு!

அரசு மருத்துவமனை ஊழியர் சாலமன் மற்றும் தீனதயாளன்

திருடிய செல்போன்களை அயனாவரத்தைச் சேர்ந்த தீனதயாளன் (56), அண்ணாநகரைச் சேர்ந்த சாலமன் (47) ஆகியோர் மூலம் விற்பனை செய்துவந்திருக்கிறார்கள். சாலமன், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பிணவறையில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை பார்த்துவருகிறார். சாலமன், தான் வேலைபார்க்கும் அரசு மருத்துவமனையிலிருந்து தூக்க மாத்திரைகளைத் திருடி மொய்னுதீன், சாயுப் ஹுசைன், 17 வயது சிறுவன் ஆகியோருக்குக் கொடுத்திருக்கிறார். அளவுக்கு அதிமாக அந்த மாத்திரைகளைச் சாப்பிடும்போது ஒருவிதமான போதையில் மூன்று பேரும் திளைத்திருக்கிறார்கள். அதற்கு அடிமையான மூவரும் சாலமனிடம் திருடிய செல்போன்களைக் கொடுத்து மாத்திரைகளை வாங்கிவந்திருக்கிறார்கள். இதையடுத்து அவர்களிடமிருந்து ஆறு செல்போன்கள், டூவீலர், அரசு முத்திரையிட்ட 140 தூக்க மாத்திரைகள், தங்க செயின் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். இவர்கள் கடந்த மூன்று மாதங்களாக வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்திருக்கிறார்கள்’’ என்றனர்.

இவர்களைப் பிடிக்க அடையாறு, மயிலாப்பூர், ராயப்பேட்டை, சிந்தாரிப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 180-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்திருக்கிறார்கள். இதற்காக இணை கமிஷனர் பாபு, துணை கமிஷனர் விக்ரமன் ஆகியோர் தனிப்படை போலீஸாரைப் பாராட்டியிருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-5-members-in-robbery-and-cheating-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக