ஆர்சிபி - சிறு வரலாறு!
ஒவ்வோர் ஆண்டும் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு 'ஈ சாலா கப் நம்தே' என்கிற முழக்கத்தோடு ஆரம்பிக்கும் ஆர்சிபியை ஒவ்வொரு ஆண்டுமே ஏமாற்றுகிறது ஐபிஎல். கோலி கேப்டன்ஸி, டிவில்லியர்ஸ் டீம், மூன்று முறை ஐபிஎல் ரன்னர் அப் எனப் பலப்பெருமைகள் இருந்தாலும் கோப்பை என்பது கனவாகவே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வீரர்களுக்கான ஏலப்போட்டியில் ஆர்சிபி நிர்வாகிகள் தீயாய் வேலை செய்வார்கள். விராட் கோலி இந்திய அணிக்குள் நுழைவதற்கு முன்பாகவே 2008-ல் ஐபிஎல் ஏலத்தில் தங்கள் அணிக்குள் எடுத்துவிட்டார்கள். ஆனால், அவர்கள் கடைசியாக செய்த ஒரே நல்ல விஷயம் அது மட்டும்தான்.
ஃபார்ம் இல்லாமல் இருந்த யுவராஜ் சிங்கை 14 கோடிக்கு ஏலம் எடுத்து சாதனைப்படைத்தது, தினேஷ் கார்த்திக்கை 10.5 கோடிக்கு எடுத்து அவரை ஃபார்ம் அவுட் ஆக்கியது எனப்பல சொதப்பல்கள் அவர்களின் ஏல விளையாட்டுகளில் நடந்திருக்கிறது. ஒரு சீசனுக்கு ஒருவரை எடுப்பார்கள். அவர் சொதப்பினால் அந்த சீசனோடு அவரை கழற்றிவிட்டுவிட்டு இன்னொரு ஸ்டார் ப்ளேயருக்கு போட்டிபோடுவார்கள். ஆர்சிபி தன் 12 ஆண்டு கால வரலாற்றில் ராகுல் டிராவிட், கெவின் பீட்டர்சன், அணில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி என ஐந்து கேப்டன்களைப் பார்த்திருக்கிறது. ஜாக்யூஸ் காலிஸ், ராஸ் டெய்லர், தில்ஷான், ஜாகிர் கான், மார்க் பவுச்சர், இயான் மோர்கன் எனப்பல ஸ்டார்கள் ஆர்சிபிக்காக விளையாடியிருக்கிறார்கள். பல பயிற்சியாளர்கள் மாறியிருக்கிறார்கள். ஆனால், யாராலும் கோப்பையைப் பெற்றுத்தரமுடியவில்லை என்பதுதான் சோகம். அதற்கு சரியானக் காரணங்களும் இருக்கின்றன.
என்னதான் பிரச்னை?!
பிரச்னை - ஒன்று
ஒரே டீமாக ஆர்சிபி இதுவரை விளையாடாததும், அவர்களை ஒரே அணியாக ஒன்றிணைக்காமல் ஆர்சிபி நிர்வாகம் இருப்பதும்தான் பிரச்னைகளுக்கான முதல் காரணம். ஒவ்வொரு ஆண்டு ஏலத்திலும் அணிக்குள் இருக்கும் வீரர்களைவிட 'அவரை எடுத்தால் கோப்பையை வென்றுவிடலாம், இவரை எடுத்தால் வென்றுவிடலாம்' என்று நினைப்பதே ஆர்சிபி நிர்வாகத்தின் முதல் தவறு. நிர்வாகத்தின் நம்பிக்கையின்மை தொடர் முழுக்க ப்ளேயர்களிடமும் வெளிப்படும். ஐபிஎல் போன்று இரண்டு மாதகாலம் நடக்கும்போட்டிகளில் ஒரே அணியாக இணைந்திருப்பது அவசியம். ஆனால், ஒவ்வொரு சீசனுக்கும் வெவ்வேறு விதமான ப்ளேயர்கள் அணிக்குள் வருவதும், போவதுமாக இருப்பதால் அணிக்குள் ஒற்றுமையை வளரவிடாமலேயே செய்துவிட்டது. 'ஃப்ரெண்ட்ஷிப் எல்லாம் இந்த ரெண்டு மாசத்தோட முடிச்சிக்கணும்... அப்புறம் வீட்டுப்பக்கம் வந்துடக்கூடாது' என்கிற ரேஞ்சிலேயே ஆர்சிபியன்ஸின் நட்புக்கள் இருக்கும். அணிக்குள் ஒற்றுமையை விதைத்தால்தான் ஆர்சிபி வெற்றிகளால் ரசிகர்களைத் திருப்திப்படுத்தமுடியும். அதைக் கோலியும், அணி நிர்வாகமும்தான் செய்யவேண்டும்.
பிரச்னை - இரண்டு
பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங், பென்ச் பேக்அப் என எல்லா ஏரியாவிலும் ஒரு ஐபிஎல் அணி ஸ்ட்ராங்காக இருக்கவேண்டும். சென்னை, மும்பை அணிகளின் பலமே இதுதான். ஆனால், இது முழுக்க முழுக்க ஆர்சிபியில் மிஸ்ஸிங். ஒரு மேட்ச்சில் 200 ரன் அடிப்பார்கள், அடுத்த மேட்ச்சில் 70 ரன்னுக்கு ஆல் அவுட் ஆவார்கள். மேட்ச்சின் ஆரம்பத்தில் சிறப்பாகப் பந்துவீசி ஆச்சர்யப்படுத்துவார்கள். ஆனால் டெத் ஓவர்களில் 100 ரன்கள் எல்லாம் கொடுத்து சாதனைப்படைப்பார்கள். ஒரு மேட்ச்சில் பறந்து பறந்து கேட்ச் பிடிப்பார்கள். இன்னொரு மேட்சில் கைக்கு வரும் கேட்சுகளை கோட்டைவிடுவார்கள். ஐபிஎல்-ன் பாதியில் திடீரென பல ப்ளேயர்கள் தங்கள் நாடுகளுக்கு விளையாடக் கிளம்பிவிடுவார்கள் எனத் தொடர் முழுக்க தொடர் சிக்கல்களை ஆர்சிபி சந்தித்துக்கொண்டேயிருக்கும். இந்த நான்கு ஏரியாவிலும் கவனம் செலுத்தினால் மட்டுமே ப்ளே ஆஃப்க்குள் ஆர்சிபியால் நுழையமுடியும்.
பிரச்னை - மூன்று
கோலி கேப்டன்ஸி... கேப்டன் கோலியின் நிலையாமையும், தடுமாற்றமும் ஆர்சிபியின் சமீபத்திய பிரச்னைகளில் முக்கியமானது. ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்தவர் கிறிஸ் கெய்ல். இவருக்கு அடுத்து அதிக சதங்கள் அடித்திருப்பவர் விராட் கோலி. ஐந்து சதங்கள் அடித்திருக்கிறார். ஆனால், இந்த ஐந்து சதங்களுமே அவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கி அடித்தவை. அதனால் ஐபிஎல் கிரிக்கெட்டைப் பொருத்தவரை அவர் தொடர்ந்து ஓப்பனராக இறங்குவதே நல்லது.
Also Read: மலிங்கா இல்லாத மும்பை ப்ளே ஆஃப்கூட தாண்டியதில்லை... இந்த முறை எப்படி? #MumbaiIndians
இந்த பேட்டிங் ஆர்டர் மாறும்போது குழம்பங்களும் கூடிவிடுகிறது. கோலியின் பெளலிங் ரொட்டேஷன் ஆர்சிபியின் பெரும் பிரச்னை. கடந்த ஐபிஎல்-ல் 200 ரன்களுக்கு மேல் அடித்தும் சில போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது ஆர்சிபி. அதற்குக் காரணம் மோசமான பெளலிங்கும், பெளலர்களை பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றபடி ரொட்டேட் செய்யாததுமே. இந்தமுறை பேட்டிங் ஆர்டரிலும், பெளலிங் ரொட்டேஷனிலும் கோலி எடுக்கும் சரியான முடிவுகளே அணியைக் காப்பாற்றும்.
2020 சவால்கள்!
கடந்த மூன்று ஆண்டுகளைவிடவும் 2020-யில் ஆர்சிபி சிறந்த வீரர்களைக்கொண்ட சிறப்பான அணியாகவே காட்சியளிக்கிறது. நல்ல பேட்ஸ்மேன்கள், திறமையான பெளலர்கள், அட்டகாசமான ஆல்ரவுண்டர்கள் என ஒரு சரியான காம்போ இருக்கிறது. கடந்த ஆண்டு கோலியோடு பார்த்தீவ் பட்டேல் ஓப்பனராக இறங்கிக்கொண்டிருந்தார். இந்தமுறை கோலியோடு களம் இறங்க ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் இருக்கிறார். கடந்த ஆண்டு மிடில் ஆர்டரில் வெறும் ஏபி டி வில்லியர்ஸ் மட்டும்தான் முழு சுமையையும் சுமக்க வேண்டியிருந்தது. இந்தமுறை அவரோடு கைகோக்க பலர் இருக்கிறர்கள். ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஷ்வா ஃபிலிப் இந்தமுறை ஆர்சிபிக்கு பெரும்பலமாக இருப்பார். இவர் கடந்த சில ஆண்டுகளாக பிக்பேஷ் லீகில் மிகச்சிறப்பாக ஆடிவருபவர். 20 வயதேயான கேரள பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கலை இந்தமுறை கோலி அதிகம் பயன்படுத்துவார் என நம்பலாம். தேவ்தத் கர்நாடகாவுக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடி வருபவர். மிடில் ஆர்டரில் அவர் களமிறக்கப்படுவார். பார்த்திவ் பட்டேலை தேவைக்கேற்ப விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆல்ரவுண்டர்களைப் பொருத்தவரை மிகப்பெரிய படையே இருக்கிறது. ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அஹமத், குர்கிரீத் சிங், பவான் நெகி, பவான் தேஷ்பாண்டே என இந்திய ஆல்ரவுண்டர்கள் ஒருபக்கம் என்றால் மொயின் அலி, கிறிஸ் மோரிஸ், இசுரு உடான (நம்புங்க அவரும் ஆல்ரவுண்டர்தான்) என சர்வதேச ஆல்ரவுண்டர்கள் மறுபக்கமும் இருக்கிறார்கள். இதில் மொயின் அலி பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக ஆடி இந்த லாக்டெளனிலும் நல்ல ஃபார்மில் இருக்கும் ப்ளேயர். அதனால் மொயின் அலி, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே என இந்த மூவர் கூட்டணியை நிச்சயம் கோலி ப்ளேயிங் லெவனில் வைப்பார் என எதிர்பார்க்கலாம்.
ஸ்பின் வின்!
2020 ஐபிஎல் அரபு நாட்டில் நடக்கப்போகிறது என முன்கூட்டியே தெரிந்ததுபோல ஆர்சிபி தனது டீமில் 5 ஸ்பின்னர்களை எடுத்து வைத்திருக்கிறது. இந்தமுறை போட்டி நடக்கும் துபாய், ஷார்ஜா, அபுதாபி என எல்லாமே ஸ்லோ ட்ராக் என்பதால் ஸ்பின்னர்களின் செல்வாக்குதான் அதிகம் இருக்கும். அதற்கு ஏற்றாற்போல 5 ஸ்பின்னர்கள் ஆர்சிபி வசம் இருக்கிறார்கள். அதுவும் புது வரவாக கேன் ரிச்சர்ட்ஸுனுக்கு பதிலாக ஆடம் ஸாம்பாவை அள்ளிவந்திருக்கிறது ஆர்சிபி. யுஸ்வேந்திர சஹால், ஸாம்பா, சுந்தர் என மூவருமே தரமான ஸ்பின்னர்கள் என்பது ஆர்சிபியின் பெரும்பலமாக இருக்கும்.
டெத் ஓவர் சோதனைகள்!
டெத் ஓவர்களில், அதாவது 14 ஓவர்களுக்குமேல் ரன்களை வாரி வழங்குவதுதான் ஆர்சிபியின் பிரச்னை. இதற்கு முக்கியக்காரணம் அதன் வேகப்பந்து வீச்சாளர்கள். டேல் ஸ்டெய்ன் இந்தமுறை முழு தொடரும் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். உமேஷ் யாதவ், சிராஜ், நவ்தீப் சைனி என இந்த மூன்று பெளலர்களும் எக்கனாமிக்கலாக பந்து வீசுவது மிக மிக முக்கியம். சைனி இந்திய அணிக்காக சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக ஆடினார் என்பதால் அவர் மீது நம்பிக்கை வைக்கலாம். இலங்கையின் இசுரு உடனா பெளலிங்கில் பல வேரியஷன்களை காட்டுபவர் என்பதால் அவரை ப்ளேயிங் லெவனில் தேவையைப் பொருத்து பயன்படுத்தலாம். மூன்று ஸ்பின்னர், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதுதான் அரபு மைதானங்களுக்கு சரியாக இருக்கும்.
இந்தப் பிரச்னைகளை எல்லாம் சரிசெய்து, சவால்களை எல்லாம் சமாளித்தால் ஈ சாலா கப் நம்தே... நவம்பர் 10-ல் கோலியைக் கோப்பையோடு காணலாம்!
source https://sports.vikatan.com/ipl/whats-the-real-problem-in-virat-kohli-led-rcb
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக