திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள பூசாரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். அங்குள்ள அலுமினியப் பட்டறையில் வேலை பார்க்கும் இவருக்கு மனைவி ரேவதி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாலமுருகன் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் பிரச்னை செய்துவந்ததாக கூறப்படுகிறது.
Also Read: கத்தி முனையில் பூசாரி குடும்பம்; 100 பவுன் நகைக் கொள்ளை! -திண்டுக்கல் அதிர்ச்சி
இதனால், தன்னுடைய தாயார் வீட்டிற்குச் சென்ற ரேவதி, தனது குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். பலமுறை பாலமுருகன் அழைத்தும் ரேவதி, பாலமுருகனுடன் வர சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மது போதையில், வத்தலக்குண்டு காவல்நிலையம் வந்த பாலமுருகன், தன்னுடைய மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்கும் படியும், தன்னுடன் வீட்டிற்கு அனுப்பிவைக்கும் படியும் கோரியுள்ளார். அப்போது திடீரென, தான் கொண்டுவந்திருந்த கத்தியை எடுத்து தன் கழுத்தில் வைத்த பாலமுருகன், மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியுள்ளார். அவரை சமாதானம் செய்ய காவலர்கள் முயன்றும் பலன் இல்லாமல் போனது. காவல்நிலைய வாசலுக்கு வந்த பாலமுருகன், மது போதையில், கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு, தற்கொலை செய்துகொள்வதாக போலீசாரை மிரட்டிக்கொண்டிருந்த சம்பவத்தை சாலையில் சென்ற அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
பெண் காவலர் மஞ்சுளா, பாலமுருகனின் கையில் இருந்த கத்தியை பிடுங்க முயன்றுள்ளார். அப்போது, மஞ்சுளாவின் கைகளில் கத்தி ஆழமாக கிழித்தது. பாலமுருகனும் காயமடைந்தார். உடனடியாக இருவரும் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வத்தலக்குண்டு காவல் ஆய்வாளர், பாலமுருகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகிறார். சிகிச்சையில் இருந்த காவலர் மஞ்சுளாவை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ரவளி பிரியா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி முத்துசாமி, மஞ்சுளாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
Also Read: திண்டுக்கல்: `திடீர் ரெய்டு; பறிபோன பணம், சொத்து ஆவணங்கள்!’ - சிக்கிய போலி அரசு அதிகாரிகள்
source https://www.vikatan.com/news/crime/women-police-officer-injured-while-saving-a-man-from-suicide
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக