Ad

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

ஈரோடு: அ.தி.மு.க அமைச்சர்களுடன் என்.கே.கே.பி.ராஜா! - மாவட்ட அரசியலில் பரபரப்பு

ஈரோடு தி.மு.கவில் முக்கிய புள்ளியாக வலம் வந்தவர் என்.கே.கே.பி.ராஜா. கைத்தறித் துறை அமைச்சராகவும், மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் மீது நில அபகரிப்பு, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல புகார்கள் குவிய, அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டன. அதன்பிறகு கட்சியில் எந்த பொறுப்புகளும் கொடுக்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டார். அதனையடுத்து கட்சி நிகழ்ச்சிகள், தேர்தல் பணிகள் என எதிலும் பெரிதாக கலந்துகொள்ளாமல் வீட்டிலே முடங்கிப் போனார் என்.கே.கே.பி.ராஜா. `தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அண்ணன் என்.கே.கே.பி.ராஜா மறுபடியும் ஈரோட்டில் பவர்ஃபுல்லாக வலம் வருவார்கள்’ என அவருடைய ஆதரவாளர்கள் சமீபகாலமாக பேசி வருகின்றனர். இந்த சூழலில் அ.தி.மு.க அமைச்சர்களுடன் பூமிபூஜை நிகழ்ச்சியொன்றில் என்.கே.கே.பி.ராஜா கலந்து கொண்டு, அமைச்சர்களுடன் நெருக்கமாக ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்திருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

என்.கே.கே.பி.ராஜாவுக்கு சந்தன மாலை அணிவிக்கும் அமைச்சர் கருப்பணன்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் கூடுதல் பள்ளிக் கட்டடம் மற்றும் ஆய்வகம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வகையில் தி.மு.க முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவும் கலந்துகொண்டார். தி.மு.கவில் ஓரங்கட்டப்பட்டு, தி.மு.க கட்சி நிகழ்ச்சிகளிலேயே கலந்துகொள்ளாமல் இருந்து வந்த என்.கே.கே.பி ராஜா, அ.தி.மு.க அமைச்சர்களுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அ.தி.மு.க அமைச்சர்களுடன் என்.கே.கே.பி.ராஜா

அமைச்சர் கருப்பணன் என்.கே.பி.பி.ராஜாவிற்கு சந்தன மாலையை அணிவித்து வரவேற்றது, என்.கே.பி.பி.ராஜா அமைச்சர்களுடன் சிரித்து சிரித்து நெருக்கமாகப் பேசியது என நிகழ்ச்சியில் நடந்தவை அனைத்தும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. `தி.மு.கவில் உரிய முக்கியத்துவமும், பதவியும் கேட்டு கிடைக்காததால் விரக்தியில் இருக்கும் என்.கே.கே.பி.ராஜா தலைமையை மிரட்டிப் பார்க்க, இப்படியொரு ஸ்டண்ட் செஞ்சிருக்கலாம். இதெல்லாம் தேவையில்லாத விஷயமுங்க. அ.தி.மு.க அமைச்சர்களோட நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு சிரிச்சிட்டு போஸ் கொடுக்கிறதுலாம் நல்லாவா இருக்கு. இப்படி இருப்பவருக்கு பதவி கொடுத்தா எப்படிங்க எதிர் அரசியல் செய்வாரு’ என உடன்பிறப்புகள் கொதித்துக் கிடக்கின்றனர்.

ஆனால் ராஜாவினுடைய ஆதரவாளர்களோ, `என்.கே.கே.பி.பி.ராஜாவின் சொந்த ஊரில் நடந்த நிகழ்ச்சி அது. அந்த பள்ளிக்கு நிலம் வாங்க அண்ணன் 2 லட்ச ரூபாய் கொடுத்துருக்காரு. அந்த அடிப்படையில் தான் நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டாரோ தவிர, இதில் துளியும் அரசியல் இல்லை’ என்கின்றனர்.



source https://www.vikatan.com/news/politics/in-erode-dmk-ex-minister-participated-in-a-event-with-admk-ministers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக