Ad

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

100 நாள் வேலை திட்டத்தின் தந்தை... ரகுவன்ஷ் பிரசாத் சிங் மறைவு! - நினைவுகூரும் தலைவர்கள்

பிஹார் மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சி லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம். அக்கட்சியின் முன்னாள் துணைத்தலைவரும், இந்திய அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவருமாக கருதப்பட்ட ரகுவன்ஷ் பிரசாத் சிங் கொரோனாவிலிருந்து குணமடைந்தையடுத்து உடல்நலக்குறைவு காரணமாக இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

1946 ல் பிறந்த ரகுவன்ஷ் பிரசாத் சிங், 1973-ல் அரசியலில் அடி எடுத்து வைத்தார். பி.எச்.டி. பட்டம் முடித்து கணித பேராசிரியராக பணியாற்றிய இவர் அரசியலில் நுழைந்த உடன் எம்.எல்.ஏ. வாகவும், பீகார் லெஜிஸ்டேட்டிவ் கவுன்சில் உறுப்பினராகவும், அதன் தலைவராகவும் பதவி வகித்தார். கிராமப்புற மேம்பாட்டில் இவர் இந்தியாவின் மிகப்பெரிய `எக்ஸ்பர்ட்’ என்று அழைக்கப்பட்டார்.

இந்திய அரசியலிலும், பீகார் மாநில அரசியலிலும் மிக முக்கியமான நபராக இருந்து, பீகாரின் வைஷாலி தொகுதியிலிருந்து ஐந்து முறை நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு அந்த தொகுதியையே தனது கோட்டையாக மாற்றிக்காட்டியவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங்.

மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இவர் மத்திய ஊரகத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, இவர் தான் இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் (MNREGA) எனப்படும் 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தவர்.

கடந்த, 2009-ம் ஆண்டில், உலகம் முழுவதும் பொருளாதார சரிவு ஏற்பட்ட போது, இந்தியாவில் பெரிய அளவில் பொருளாதார வீழ்ச்சி இல்லை, காரணம் 2005 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த 100 நாள் வேலை திட்டத்தால் மக்கள் கையில் பணம் புழங்கியது தான் என்றனர் வல்லுநர்கள்.

தற்போதைய கொரோனா சூழலிலும், இந்தியாவில் உள்ள ஏழைகள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதில் 6.20 கோடி மக்கள் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (MNREGA) குறைந்தபட்ச ஊதியத்தில் பணி புரிந்துள்ளதாக ஜூன் மாத புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இக்கட்டானசூழலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பலருக்கு வேலை அளிப்பதாக அமைந்துள்ளது.

இப்படிப்பட்ட மக்கள் நலன் காக்கும் திட்டங்களை வகுக்கும் மாபெரும் சக்தியாக பீகார் அரசியலில் இருந்த ரகுவன்ஷ், கடந்த 3 நாட்களுக்கு முன் தான் கைப்பட ஒரு கடிதத்தை எழுதி முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு அனுப்பி இருந்தார். அதில், "சோசலிஸ்ட் தலைவர் கர்பூரி தாக்கூர் மறைவுக்குப்பின் 32 ஆண்டுகள் உங்களுடன் இருந்தேன். ஆனால், தன்னால் கட்சியில் தொடர முடியாத சூழலில் இருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு சிறையில் இருந்தவாறே பதில் அளித்த லாலுபிரசாத் யாதவ், ``என்னால் நம்பமுடியவில்லை. முதலில் நீங்கள் உடல்நலம் பெறுங்கள். அதன்பின் பேசலாம். நீங்கள் எங்கும் போகமாட்டீர்கள். எனக்கு தெரியும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்த பிரசாத் சிங் உடல்நிலை கடந்த வெள்ளிக்கிழமை மோசமடைந்தது. உடனடியாக, வெண்டிலேட்டர் சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். தீவிர சிகிச்சையளித்தும் பலன் அளிக்காமல் நேற்று காலை 11 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

இறுதிச் சடங்கிற்காக ரகுவன்ஷ் பிரசாத்தின் உடல் பிகாருக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ரகுவன்ஷ் பிரசாத் சிங் காலமானார் என்ற செய்தி கிடைத்ததும், லாலு பிரசாத் யாதவ், "அன்பு ரகுவன்ஷ், உங்களுக்கு என்ன நேர்ந்தது. உங்களிடம் நேற்று முன்தினம்தானே கூறினேன். ஆனால் என்னைவிட்டு சென்றுவீட்டீர்கள். என்னால் பேச முடியவில்லை. வேதனையாக இருக்கிறது. உங்களை இழந்து தவிக்கிறேன்” என்று தன் வேதனையை டிவிட்டரில் தெரிவித்திருந்தார்

மேலும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், ``ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் மறைவு பிஹார் அரசியலுக்கு மிகப்பெரிய பேரிழப்பு. அரசியல் ரீதியான விஷயங்களையும், சமூக நீதிக்காகவும் வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்தவர், விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காக போராடியவர். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், நேற்று பிகாரில் மூன்று பெட்ரோலியத் திட்டங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாகப் பங்கேற்றார். அப்போதுதான், ரகுவன்ஷ் பிரசாத் மறைவு குறித்து தகவல் வெளியானது.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ``ரகுவன்ஷ் பிரசாத் சிங் நம்மை விட்டு சென்றுவிட்டார். அவரின் மறைவு, பிகாரின் அரசியலிலும், தேசத்தின் அரசியலிலும் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/death/former-union-minister-raghuvansh-passed-away

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக