தமிழ்நாட்டில், 'பிரதம மந்திரி கிசான்' திட்டத்தில் நடைபெற்றிருக்கும் முறைகேட்டுக்கு யார் காரணம் என்பதில், கூட்டணிக் கட்சிகளான அ.தி.மு.க-பா.ஜ.க இடையே முட்டல் மோதல் தொடர்ந்து வருகிறது.
ஏழை விவசாயிகளுக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக, வருடம் தோறும் 6 ஆயிரம் நிதி உதவி அளித்திடும் 'பிரதம மந்திரி கிசான்' திட்டத்தை மத்திய பா.ஜ.க அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தியது. இதன்படி 4 மாதங்களுக்கு ஒருமுறை 2 ஆயிரம் ரூபாய் என்ற தவணை முறையில் வருடத்துக்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பப்பட்டு வந்தது.
இந்தத் திட்டத்தில், விவசாயிகள் அல்லாத தனிநபர்களும் முறைகேடாக தங்கள் பெயர்களை பதிந்துவைத்து, பணம் பெற்று வந்த அதிர்ச்சி தகவல் அண்மையில் வெளிவந்தது. தமிழ்நாட்டில், இதுபோன்று போலி கணக்குகள் மூலம் சுமார் 110 கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த நாட்டையுமே அதிரவைத்த இந்த ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் வரிசையாக கைதாகி வருகின்றனர். இந்த நிலையில், 'ஆளுங்கட்சியினரின் ஒத்துழைப்பு இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடைபெற வாய்ப்பில்லை' என்று குற்றம் சாட்டியிருக்கிறது தி.மு.க. தமிழக பா.ஜ.க-வும் 'விவசாயிகளின் பெயரில் மோசடி நடந்துள்ளதற்கு மாநில அரசே பொறுப்பு' என்று கடுமை காட்டியுள்ளது.
இதற்குப் பதிலடியாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ''கிசான் திட்ட நடைமுறைகளில் மத்திய அரசு கொண்டுவந்த மாற்றமே முறைகேடு நடப்பதற்கான காரணம்'' என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், ''கிசான் திட்டத்தை அதிகாரிகள்தான் தவறாகப் பயன்படுத்திவிட்டார்கள் என்கின்றனர். அதிகாரிகள் வெறும் அம்புதான். அவர்களை ஏவியவர்கள் யார்'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில், ஒரே கூட்டணிக் கட்சிகளான அ.தி.மு.க - பா.ஜ.க இடையே இவ்விவகாரம் விரிசலை உருவாக்கிவருகிறது. 'கிசான் முறைகேட்டுக்கு காரணம் மத்திய அரசா அல்லது மாநில அரசா' என்ற 'நீயா நானா' போட்டியில் இரு கட்சிகளும் ஒருவரையொருவர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்துப் பேசுகிற தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ''விவசாயிகளுக்கான கௌரவ நிதி என்ற இந்தத் திட்டம் மத்திய அரசினுடையதுதான் என்றாலும்கூட, அதை செயல்படுத்திவருவது மாநில அரசுகள்தான். அதாவது திட்டமும் நிதியளிப்பும் மத்திய அரசின் பங்காக இருந்தாலும்கூட, உண்மையான பயனாளிகளைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டியது மாநில அரசுகள்தான்.
இந்தத் திட்டத்தின் வழியே பெயன்பற விரும்பும் விவசாயிகள் தங்கள் ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் மற்றும் விவசாய நில விவரங்களை இணையம் வழியே பதிவு செய்துகொள்ளலாம் என்பதுதான் மத்திய அரசு வகுத்திருக்கும் விதி. இதன்படி பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாநில அரசின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு, அவை தகுதியான விண்ணப்பங்கள்தானா என்பது உறுதி செய்யப்படும். அப்படி உறுதி செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு மட்டுமே திட்டத்தின் பலன்களும் போய்ச்சேரும்.
அதாவது, விண்ணப்பித்திருப்பவர் உண்மையிலேயே விவசாயிதானா என்பதை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள்தான் சரிபார்த்து ஒப்புதல் வழங்குவார்கள். ஆனால், இப்படி ஒப்புதல் வழங்கப்பட்ட பயனாளர்களில் பெரும்பாலானோர் உண்மையான விவசாயிகள் அல்ல போலிப் பயனாளிகள் என்பது இப்போது கண்டறியப்பட்டிருக்கிறது என்றால், தவறு யார் மீது, ஒப்புதல் வழங்கியவர்கள் மீதுதானே. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ 'பயனாளிகள் இணையம் வழியே நேரடியாகப் பதிவு செய்யும் மத்திய அரசின் நடைமுறையினால்தான் இந்த முறைகேடு நடந்துள்ளதாக' சொல்லியிருக்கிறார். இது தவறு. பயனாளிகள் தங்கள் விண்ணப்பத்தைத்தான் நேரடியாக இணையம் வழியே சேர்த்திருக்கிறார்கள். இப்படி வந்துசேர்ந்த விண்ணப்பங்களை சரிபார்த்து ஒப்புதல் அளிப்பதென்பது மாநில அரசின் பொறுப்புதான். எனவே, நடைபெற்றுவிட்ட முறைகேட்டுக்கு மாநில அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த முறைகேடு என்பது தற்போது வெளியாகியிருக்கும் 110 கோடி ரூபாய் அளவோடு மட்டும் நின்றுவிடும் என்று நான் நம்பவில்லை. இதற்குமேலும் முறைகேடு நடந்திருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே நான் நம்புகிறேன்.
அடுத்து, மத்திய அரசின் திட்டமான 'கழிப்பறைகள் கட்டும் திட்ட'த்திலும் தமிழ்நாட்டில் ஊழல்-முறைகேடு நடந்திருக்கின்றன. உதாரணமாக இதுகுறித்து கோவில்பட்டி நகராட்சி சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறைதான் இதுகுறித்த விசாரணை செய்து வழக்கைத் தொடுத்திருக்கிறது. இதுதவிர, 'பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்திலும்கூட வீடு கட்டப்படாமலேயே பணம் வழங்கப்பட்டிருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. மேலும் விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்டத்திலும் சில முறைகேடுகள் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது'' என்று அடுக்கி முடித்தார்.
Also Read: பரமக்குடி: இம்மானுவேல் சேகரன் நினைவுதினம்! - அனைத்துக் கட்சியினர் அஞ்சலி
கிசான் திட்ட முறைகேட்டில், மாநில அரசு மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசியபோது, ''கட்சிகளைத் தாண்டி மத்திய - மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விஷயம் இது. ஏழை விவசாயிகளுக்காக கிசான் திட்டத்தின் மூலம் வருடத்துக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்குவது என்று கடந்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு இந்தத் திட்டத்தை அறிவித்தது. அதன்படியே கொடுத்தும் வருகிறார்கள்.
அந்தவகையில், இந்த வருடம் முதல் தவணைத் தொகை கொடுக்கிற நேரத்தில் கொரோனா ஊரடங்கும் வந்துவிட்டதால், வருடத்தின் மொத்த தொகையையும் ஒரே தவணையாக கொடுத்துவிட முடிவு செய்தது மத்திய அரசு. இதற்காக 'பயனாளர்கள் நேரடியாக இணையம் வழியே விண்ணப்பித்து உடனடியாக பணம் பெற்றுக் கொள்ளலாம்' என்றும் அறிவித்துவிட்டது. மேலும், 'பயனாளர்கள் ஆதார் அட்டையைக் காண்பித்தாலே போதும்' என்று விதிமுறையை எளிதாக்கிவிட்டதுதான் முறைகேடுகளுக்குக் காரணமாகிவிட்டது.
தமிழக வேளாண்துறை மூலமாக எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழக அரசு செவ்வனே நடைமுறைப்படுத்தி வருகிறதுதான். உதாரணமாக விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்வதாக ஜெயலலிதா கடந்த காலத்தில் அறிவித்தார். அதேபோல், உண்மையாக யாரெல்லாம் விவசாயக் கடன்களைப் பெற்றிருந்தனரோ அவர்களது கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. எந்தவித குளறுபடிகளும் நடக்கவில்லை.
எனவே, கிசான் திட்டத்தையும்கூட தமிழக வேளாண்துறை வழியே செயல்படுத்தியிருந்தால், சிறு விவசாயியா, பெரிய விவசாயியா என்பது போன்ற அனைத்து விவரங்களும் சரியாக கணக்கெடுக்கப்பட்டு, திட்டப் பலன்களும் உரிய முறையில் போய்ச் சேர்ந்திருக்கும். ஆனால், நேரடியாக ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டையை கொடுத்தே திட்டத்தின் பயனாளி ஆகிவிடலாம் என்று கட்டுப்பாடற்ற விதிமுறையை மத்திய அரசு அறிவித்ததுதான் இத்தனை குளறுபடிகளுக்கும் காரணம்.
Also Read: சென்னை: வொர்க் ஃப்ரம் ஹோம்... வேலைப்பளு! - ஐடி பெண் ஊழியர் எடுத்த விபரீத முடிவு
இந்தவகையில், இ-சென்டர் வைத்திருப்பவர்களும் தற்காலிகப் பணியாளர்களும் இந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகளை செய்துவிட்டதாகக் கண்டறிந்து அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கையும் எடுத்துவருகிறது. எனவே, அரசு மீது குறைசொல்வது தேவையற்ற வாதம். ஏனெனில், கடந்த வருடம் அளிக்கப்பட்ட இதே கிசான் திட்டத்தில் தவறு ஏதும் நடக்கவில்லையே... ஏன்? மாநில அரசின் முழு கட்டுப்பாட்டில் நடைபெற்றதுதான் அதற்குக் காரணம்.
இப்போதும்கூட இந்தத் திட்டத்தில் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து, தவறு செய்தவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்து வருவதும் தமிழக அரசுதான். ஆக, நடந்துவிட்ட தவறுகளுக்கு மத்திய அரசின் எளிய விதிமுறைகள்தான் காரணமே தவிர, தமிழக அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்?
இன்னும் கழிப்பறைத் திட்டம், அனைவருக்கும் வீடு திட்டங்களில் எல்லாம் ஊழல் நடந்திருப்பதாக தமிழக பா.ஜ.க-வினர் எங்கள் அரசு மீது குற்றம் சாட்டிவருவதென்பது, வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் உண்டானவை.
தமிழக அரசுக்குத் தரவேண்டிய பல்லாயிரக்கணக்கிலான கோடி ரூபாயையும் தராமல் போக்கு காட்டிவருகிறது மத்திய அரசு. இதுகுறித்தப் புள்ளிவிவரங்களை ஆதாரபூர்வமாக நான் எடுத்து வைப்பதாலேயே, தொலைக்காட்சி விவாதங்களில் நான் பங்கேற்றால், தமிழக பா.ஜ.க-வினர் அந்த நிகழ்ச்சியையே புறக்கணித்துவிடுகிறார்கள். ஆக, இப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் பதில் சொல்கிற அவசியம் தமிழக அரசுக்கும் இல்லை; எங்களுக்கும் இல்லை. மாறாக, மத்திய உயர் அதிகாரிகளோ அல்லது மத்திய அமைச்சர்களோ, துறை சார்ந்து புகார்கள் சொன்னால், அதில் உண்மை இருக்கிறதா என்று தமிழக அரசு கண்டுபிடிக்கும்!'' என்றார் காட்டமாக.
source https://www.vikatan.com/government-and-politics/politics/kisan-scheme-scam-conflict-between-tamilnadu-bjp-and-admk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக