Ad

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

திருச்சி: தாம்பத்யத்துக்கு உடன்படவில்லை; நீரில் அமுக்கிக் கொன்றேன்! - மனைவி கொலையில் சிக்கிய கணவர்

திருச்சி அருகே தாம்பத்தியத்துக்கு ஒத்துழைக்காததால் கொள்ளிடம் ஆற்று நீரில் மனைவியை மூழ்கடித்துக் கொன்றிருக்கிறார் அவரது கணவன். கொலையை மறைக்க அவர் நடத்திய நாடகத்தைப் பார்த்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

உடலைக் கைப்பற்றிய போலீஸார்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பிச்சாண்டார்கோயில் அருகே உள்ள வாழவந்திபுரம் பகுதியில் வசிப்பவர் அருள்ராஜ் (28). இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள பைப் கம்பெனி ஒன்றில் பணிப்புரிந்து வருகிறார். அருள்ராஜுக்கும் லால்குடி மேலமணக்கால் சூசையபுரத்தைத் சேர்ந்த கிறிஸ்டி ஹெலன்ராணிக்கும் (26) கடந்த 10-07-2020 அன்று குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. புதுமணத் தம்பதி இருவரும் அருள்ராஜ் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்னை வரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் இயற்கை உபாதையைக் கழிக்க வீட்டின் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்குத் தனியாகச் சென்ற கிறிஸ்டி வீடு திரும்பவில்லை.

இதனால், கணவர் அருள்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் கொள்ளிடம் ஆற்றுப் பகுதிக்குச் சென்று பார்த்த போது, ஆற்றில் தேங்கியுள்ள குட்டை நீரின் கரையோரத்தில் சடலமாக காணப்பட்டார் கிறிஸ்டி. அவர், அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தன. இதையடுத்து, கிறிஸ்டியைத் தேடிச் சென்றவர்கள் சடலம் குறித்து கொள்ளிடம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சமயபுரம் போலீஸார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் போலீஸார்

இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க லால்குடி டி.எஸ்.பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளன. அதே வேளையில் பெண்ணின் கணவர் அருள்ராஜையும் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். அருள் ராஜ் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதில், மனைவியைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். அருள் ராஜ் கூறியதாக போலீஸார் சொல்வது இதுதான்.``திருமணமான அன்று முதலிரவுக்கு ஏற்பாடு செய்தர். ஆசை மனைவியுடன் சந்தோசமாக இருக்க நானும் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தேன். ஆனால், முதலிரவுக்கு என் மனைவி மறுத்து விட்டார். அதனால் முதல் நாளே ஏமாற்றம் அடைந்தேன். தொடர்ந்து இதேபோல் தினமும் தாம்பத்தியத்துக்கு மறுத்து வந்தார். இதனால் நாளுக்கு நாள் எனக்கு கோபம் அதிகரித்துக்கொண்டே சென்றது.

கொள்ளிட கரையில் புதைக்கப்பட்ட நகைகள்

திருமணமாகி 50 நாள்கள் ஆகியும் மனைவி என்னுடன் சந்தோஷமாக இருக்கவில்லை. தாம்பத்தியத்துக்கு மறுத்து அடம்பிடித்து வந்தார். இதனால், கடுமையான மன உளைச்சலில் இருந்தேன். சம்பவத்தன்று முன்தினம் இரவு வீட்டில் படுத்து இருந்தபோது, அவரை தாம்பத்தியத்திற்கு அழைத்தேன். அப்போது அவர் உடல்நிலை சரியில்லை என்று உடன்படவில்லை.

இந்நிலையில் அதிகாலை அவர் இயற்கை உபாதையைக் கழிக்க ஆற்றங்கரைக்குச் சென்றார். அவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து சென்றேன். இயற்கை உபாதை கழித்த பிறகு அவர் ஆற்றில் இறங்கினார். அப்போது, அங்கே சென்று உல்லாசத்திற்கு அழைத்தேன். அப்போதும் உடன்படவில்லை. இதனால், ஆத்திரத்தில் அவரை ஆற்றுநீரில் அமுக்கினேன். இதில் அவர் மூச்சு திணறி இறந்து விட்டார். பின்னர், என் மீது சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி, திருடுபோனது போல் நம்பவைக்க ஒரு சாக்குப் பைக்குள் வைத்து ஆற்று மணலில் புதைத்துவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன். பின்பு, அக்கம்பக்கத்தில் என் மனைவியைக் காணவில்லை என்று கூறித் தேடத் தொடங்கினோம்.

உறவினர்கள்

கொஞ்ச நேரத்த்துக்குப் பிறகு மனைவியின் உடல் ஆற்றில் மிதப்பதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சொன்னார்கள். நானும் அங்குபோய், யாருக்கும் தெரியாதது போல் என் மனைவியை மடியில் வைத்து அழுதேன். யாருக்கும் தெரியவில்லை. என்னை பரிவோடு பார்த்தார்கள். ஆனால், போலீஸார் நடத்திய விசாரணையில் மாட்டிக்கொண்டேன் " என்றிருக்கிறார்.

இதையடுத்து, அருள்ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் பின்னர் திருச்சி சிறையில் அடைத்தனர்.



source https://www.vikatan.com/news/crime/trichy-police-arrests-man-over-murder-of-his-wife

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக