Ad

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

கரூர்: `யாருக்கும் சத்துக்குறைபாடு இருக்கக்கூடாது! பள்ளியில் காய்கறித் தோட்டம் அமைத்த தலைமை ஆசிரியர்

தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் யாருக்கும் சத்துகுறைபாடு ஏற்படக்கூடாது, நோய்கள் ஏற்படகூடாது என்பதற்காக, பள்ளி வளாகத்தில் இயற்கை முறையில் காய்கறித்தோட்டம் அமைத்து அசத்தியிருக்கிறார், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர்.

காய்கறித் தோட்டம் அமைக்கும் பணியில்

Also Read: கரூர்: `கிரீன் குளித்தலை சேலஞ்ச்; 60 கிராமங்களில் மரக்கன்றுகள்!’ அசத்தும் விஜய் ரசிகர்கள்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது மலைக்கோயிலூர். இந்தக் கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில், 560 மாணவர்கள் கல்வி பயின்றுவருகின்றனர். மிகவும் பின்தங்கிய இந்தக் கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் ஏழ்மை நிலைமையில் உள்ளவர்கள். அவர்களின் பிள்ளைகள்தான், இந்தப் பள்ளியில் கல்வி பயின்றுவருகிறார்கள்.

காய்கறித் தோட்டம் அமைக்கும் பணியில்

இந்தச் சூழலில், தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் நஞ்சில்லாத சத்துணவு கிடைக்கவேண்டும் என்று நினைத்த இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார். பள்ளி வளாகத்தில் 60 பழ மரங்கள் மற்றும் இயற்கை முறையிலான காய்கறித் தோட்டத்தை அமைத்து, அசத்தியிருக்கிறார்.

இதுகுறித்து, மலைக்கோயிலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரனிடம் பேசினோம்.

"தமிழரின் வேளாண்மை என்பது தொன்மையானது. உழவின் சிறப்பை, விவசாயத்தின் சிறப்பைக் கொண்டு இவ்வுலகம் இன்று இயங்கக் காரணமாகி இருக்கிறது. இதையெல்லாம் மறந்து, பரிணாம வளர்ச்சி என்ற பெயரால் இயற்கையை அழித்து வருகிறோம். மிகச் சாதாரணமாக ஒரு விதையைக் கொண்டு நம்மால் நம் உணவுத் தேவையை நிறைவேற்ற முடியும் என்ற புரிதலைக் கூட கேள்விக்குறியாக்கி, இன்றைய கொரோனா பேரிடர் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமை, ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினிச் சாவு என்று பீட்சா, பர்கர் மோகத்தில் நம் வாழ்வு சுழன்று கொண்டிருக்கிறது.

ரவிச்சந்திரன் (தலைமை ஆசிரியர்)

செயற்கை விவசாயத்தில் ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுப் பொருள்களை நாம் உண்பதால், நமக்கு எண்ணற்ற நோய்கள் ஏற்படுகின்றன. அதனால், இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவின் ருசியை மாணவர்களுக்கு உணர்த்தி, அதன்மூலமாக அவர்களை இயற்கை விரும்பிகளாக மாற்றனும்னு நினைத்தேன். எங்க பள்ளியில் போதிய இடம் உள்ளது. அதோடு, வேளாண்மை குரூப்பும் தண்ணீர் வசதியும் உள்ளது. இதைப் பயன்படுத்தி, பள்ளி வளாகத்தை இயற்கை காய்கறிகள், பழங்கள் கிடைக்கும் இடமாக மாற்ற நினைத்தேன்.

அதன் முதல் முயற்சியாக, ஐந்து மாதங்களுக்கு முன்பு, பள்ளி வளாகத்தில் கொய்யா, சப்போட்டா, மாதுளை, மா, பலா என்று 60 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கத் தொடங்கினோம். இந்த நிலையில்தான், அடுத்த முயற்சியாக எங்கள் பள்ளியில் ஒரு காய்கறித் தோட்டம் அமைத்து, விதைகள் விதைப்பு பணியைத் துவங்க இருக்கிறோம். இதன்மூலம், பள்ளி மாணவர்களிடத்தில் காய்கறி சாகுபடி விழிப்புணர்வு, நஞ்சில்லா உணவு மற்றும் நோயில்லா வாழ்வுக்கான துவக்கம், இயற்கை விவசாயம் பற்றிய புரிதல் கிடைக்கும் வழி ஏற்பட்டிருக்கிறது.

காய்கறித் தோட்டம்

தக்காளி, மிளகாய், கத்தரி, வெண்டை, பீர்க்கன், தம்பட்டை அவரை, முள்ளங்கி, கொத்தவரை, புளிச்சை கீரை, முளைக்கீரை, அகத்திக்கீரை, செங்கீரை என்று பலவகை காய்கறிகளை விதைத்திருக்கிறோம். கத்தரி, தக்காளியை நாற்றுகளாக வாங்கி நட்டிருக்கிறோம். இந்த முயற்சிக்கு, கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு பெரிதும் உதவினார். விதைகளையும் காய்கறி நாற்றுகளையும் இயற்கை காதலரான பசுமைக்குடி என்ற அமைப்பை நடத்தி வரும் நரேந்திரன் கந்தசாமி என்பவர் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

தவிர, இயற்கை விவசாயி மனோகரன் என்பவர், விதைகள், காய்கறி நாற்றுகள் கொடுத்து உதவினார். பரமேஸ்வரன் என்பவரும் சில விதைகளைக் கொடுத்தார். இந்தத் தோட்டத்தில் ரசாயன உரமிடாமல், இயற்கை நுண்ணூட்டங்கள் மற்றும் உரங்கள் மூலமாக விளைந்த காய்கறி, கீரைகளை சத்துணவில் பயன்படுத்தும்போது, ஊட்டச்சத்து குறைபாடு அற்ற குழந்தைகளை உருவாக்க முடியும். அதற்கான முன் மாதிரி பள்ளி காய்கறி தோட்டமாக இது அமையும். இந்தியாவில் ஊட்டச்சத்து குறைவால் பல குழந்தைகள் இறந்துபோகிறார்கள்.

காய்கறித் தோட்டம் அமைக்கும் பணியில்

ஐந்து குழந்தைகளில், ஒரு குழந்தைக்கு வைட்டமின் 'ஏ' பற்றாக்குறை, இந்திய அளவில் உணவின்றி தவிக்கும் 6.4% குழந்தைகள் என மோசமான புள்ளிவிபரங்கள் சொல்லப்படும் நிலையில், இது போன்ற காய்கறித் தோட்டத்தை பள்ளிகளில் அமைப்பதன் மூலம், மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். அம்மாணவர்கள், அதன் மூலம் விழிப்புணர்வும் பெற்று அதன்மூலம் பலன் பெற வேண்டும். இந்தக் காய்கறித் தோட்டத்தை கரூர் மாவட்டத்தின் முன் மாதிரி பள்ளி காய்கறித் தோட்டமாக மாற்ற முயற்சிப்போம்" என்றார் உற்சாகமாக!



source https://www.vikatan.com/news/agriculture/head-masters-organic-farming-in-karur-government-school

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக