Ad

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

ராஜ்யசபா துணை சபாநாயகர்: திருச்சி சிவா போட்டியா?

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், காலியாக இருக்கும் மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல், இந்தக் கூட்டத் தொடரின் முதல் நாளில் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதே நேரத்தில், கடந்த ஓராண்டு காலத்துக்கு மேலாக மக்களவை சபாநாயகர் தலைவர் பதவி காலியாக இருக்கும் நிலையில், துணை சபாநாயகர் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் நடைபெற்று, மே மாதம் மக்களவை அமைக்கப்பட்டது. அப்போதிலிருந்து மக்களவைத் துணை சபாநாயகர் பதவி காலியாகவே இருக்கிறது.

இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவரான ஆதிர் ரஞ்சன் சௌதரி கடிதம் எழுதியுள்ளார். அதில், மக்களவைத் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதுதான் மரபாக இருந்துவருகிறது. மக்களவை அமைக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தியோ, ஒருமித்த கருத்துடனோ துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் இன்றும் அந்தப் பதவி காலியாகவே இருக்கிறது.

மாநிலங்களவை

செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது துணை சபாநாயகரைக் கட்டாயம் நியமிக்க வேண்டும் என்று உங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். மக்களவையில் தங்கள் வழிகாட்டுதலில் அரசியல் சாசன நடைமுறை கடைப்பிடிக்கப்படும் என்று நம்புகிறேன். மாநிலங்களவை துணைத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் நிலையில், மக்களவைத் துணை சபாநாயகரைத் தேர்வுசெய்வதற்கான வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் ஆதிர் ரஞ்சன் சௌதரி கூறியுள்ளார்.

543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பா.ஜ.க-வுக்கு 303 உறுப்பினர்களும், எதிர்க் கட்சியான காங்கிரஸுக்கு 51 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். ஆளும் கட்சியைச் சாராத ஒருவர்தான் மக்களவைத் துணைத் தலைவராக நியமிக்கப்படுவது வழக்கம் என்பதால், முந்தைய மக்களவையில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த தம்பிதுரை துணை சபாநாயகராக இருந்தார். தற்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு, அல்லது, மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் தி.மு.க-வுக்கு துணை சபாநாயகர் பதவி கொடுக்கப்பட வேண்டும். அதை விரும்பாததால்தான், துணை சபாநாயகரை நியமிப்பதற்கு ஆளும் தரப்பு ஆர்வம் காட்டாமல் இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

தம்பிதுரை

இந்த நிலையில், செப்டம்பர் 14-ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், மாநிலங்களவைத் துணைத் தலைவரைத் தேர்வுசெய்வதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. எதிர்க் கட்சிகளின் கூட்டு வேட்பாளராக தி.மு.க-வைச் சேர்ந்த திருச்சி சிவா மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நேரத்தில், ஆளும் தரப்பில் பா.ஜ.க-வின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஹரிவன்ஷ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்பாகவும் இவர்தான் 2018-ம் ஆண்டிலிருந்து மாநிலங்களவைத் துணைத் தலைவராக இருந்தார். இவரது பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது. மீண்டும் இவர் இந்தப் பதவிக்கு ஆளும் தரப்பால் நிறுத்தப்படுகிறார்.

ஜெகன்மோகன் ரெட்டி

245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 115 ஆக அதிகரித்துள்ளது. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட சுமார் 140 எம்.பி-க்களின் ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பா.ஜ.க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே, ஹரிவன்ஷ் மீண்டும் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றியிருக்கிறார். முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் கூடுதல் ஊடக ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். 2014-ம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி மாநிலங்களவைத் துணைத் தலைவராக தேர்வுசெய்யப்பட்ட இவர், அதற்கான தேர்தலில் 125 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து எதிர்க் கட்சிகளின் ஒன்றுபட்ட வேட்பாளரான நிறுத்தப்பட்ட பி.கே.ஹரிபிரசாத் 105 வாக்குகள் பெற்றனர்.

சோனியா காந்தி

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ம் தேதி தொடங்குவதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் ஸ்ட்ராடஜி குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌதரி, மாநிலங்களவைக் குழுத் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறடா மற்றும் கொறடாக்கள் காணொலி வாயிலாகக் கூட்டத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ் தலைமை மாற்றப்பட வேண்டும் என்று கடிதம் எழுதி, அந்தக் கடிதம் பெரும் புயலைக் கிளப்பிய சம்பவம் நிகழ்ந்ததற்குப் பிறகு, அத்தனை தலைவர்களும் ஒன்றாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தமிழகத்தில் இந்தி... முக்கோண அலசல்!

“எதிர்க் கட்சிகளின் சார்பாக தி.மு.க-வின் திருச்சி சிவாவை மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா?” என்ற கேள்வியை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டோம்.

“எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான யோசனை எதுவும் எங்களிடம் இல்லை. எதிர்க் கட்சிகள் ஒன்றாக அமர்ந்து பேசி ஒருமித்த கருத்துடன்தான் இதுபோன்ற விஷயங்களில் முடிவெடுக்க முடியும். எங்களைப் பொறுத்தவரையில், எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் வேட்பாளர் என்று சொல்ல முடியாது. துணைத் தலைவர் பதவியை எதிர்க் கட்சிகளுக்கு கொடுப்பது என்று ஆளும் கட்சி முடிவுசெய்து முன்வந்தால், அப்போது அது குறித்து முடிவுசெய்வோம். மக்களவையில் ஓர் ஆண்டுக்கு மேலாகியும் துணைத் தலைவர் பதவி காலியாக இருக்கிறது. அந்தப் பதவி பொதுவாக ஆளும் கட்சியைச் சாராதவருக்குத்தான் வழங்கப்படும். அதுதான் மரபு. அதில் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை” என்றார்.

மாநிலங்களவைத் துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். புதிய உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்ட பிறகு துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/is-trichy-siva-going-to-contest-for-deputy-speaker-of-rajya-sabha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக